இலங்கையின் முதலாவது WhatsApp வங்கிச் சேவை வசதியை அறிமுகப்படுத்தியது கொமர்ஷல் வங்கி


உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் செய்திப் பரிமாற்ற வசதியான வட்ஸ்அப் செயலி மூலமாக வங்கிச் சேவையை வழங்கிய முதலாவது இலங்கை வங்கியாக கொமர்ஷல் வங்கி மாறியுள்ளது.

திறன்பேசிப் பயனர்களுக்காக இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட தொடுகையற்ற வங்கிச் சேவைகளில் இலகுவானதும் துரிதமானதுமான கொமர்ஷல் வங்கியின் WhatsApp வங்கிச்சேவையானது வங்கியில் கணக்குகளைக் கொண்டிருப்போருக்கும் வாடிக்கையாளர்கள் அல்லாதோருக்கும் தனது சேவைகளை வழங்குகிறது. முக்கியமாக வாடிக்கையாளர்களாக வருவதற்கு விரும்புவோர் புதிதாகக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கான வசதியை இது வழங்குகிறது என வங்கி தெரிவித்தது.

கொமர்ஷல் வங்கியின் வாடிக்கையாளர்கள் இவ்வசதியைப் பயன்படுத்துவதற்கு இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இலக்கமான 0713 353 353 என்பதற்கு Hi என வட்ஸ்அப்பில் செய்தியொன்றை அனுப்புவதன் மூலமாக இதைப் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தகவல்களைப் பெறுவதற்காக இலக்கங்களை அழுத்தும் இலகுவான அறிவுறுத்தலொன்று அவர்களுக்கு வழங்கப்படுவதோடு வங்கியால் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலமாக அனுப்பப்படும் ஒரு தடவை மாத்திரம் செயற்படும் கடவுச்சொல்லை (One-Time-Password - OTP) உட்செலுத்திய பின்னரே தேவைப்படும் தகவல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். ஒரு தடவை மாத்திரமே தேவைப்படும் இலகுவான பதிவுசெய்யும் செயற்பாடொன்று இதன்போது மேற்கொள்ளப்படும். இரகசியமான தகவல்களைப் பகிர்வதற்கு முன்பதாக வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக இது மேற்கொள்ளப்படுவதோடு இதன் காரணமாக இரகசியமான தரவுகள் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.

தமது கணக்கு மீதி கணக்கின் வரலாறு காசோலைப் புத்தகமொன்றைக் கோருதல் போன்ற பல்வேறான சேவைகளைக் கணக்குகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரத்தில் வாடிக்கையாளர்களும் வாடிக்கையாளர் அல்லாதோரும் நிலையான வைப்பு வட்டி வீதங்கள் அந்நியச் செலாவணி வீதங்கள் போன்றவற்றைக் கோருவதோடு கொமர்ஷல் வங்கி டிஜிட்டல் செயலியில் தாமாகவே பதிவுசெய்தல் அல்லது ஃப்ளாஷ் டிஜிட்டல் வங்கிக் கணக்கைப் புதிதாக ஆரம்பித்தல் போன்றவற்றை வட்ஸ்அப் வங்கிச் சேவை மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இச்சேவை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன் உலகம் முழுவதிலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் வட்ஸ்அப்பைத் தமது தகவல் பரிமாற்றத்துக்காகப் பயன்படுத்துவதோடு இலங்கையில் 6.5 மில்லியனுக்கும் அதிகமானோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் எனக் கணிக்கப்படுகிறது. சேவைகளைப் பெறுவதற்கான தர்க்கபூர்வமான வழியாக அதிகம் பிரபலமான செய்திப் பரிமாற்றத் தளங்களைப் பயன்படுத்துவது காணப்படுகிறது. அதிலும் முக்கியமாக சமூக இடைவெளி பேணல் என்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ள சூழலில் இது முக்கியமானது. வட்ஸ்அப் வங்கிச் சேவையானது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவதோடு மில்லியன் கணக்கான மக்களால் அறியப்பட்டது என்பதால் அதிகளது தொழில்நுட்ப அறிவு தேவைப்படாது எனத் தெரிவித்தார்.

இந்தச் சேவையின் அறிமுகமானது அடிப்படையான வங்கிச் சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக் கிளைகளுக்கு வாடிக்கையாளர்கள் விஜயம் செய்ய வேண்டிய தேவையை இல்லாது செய்கிறது. தமது வங்கி அனுபவத்தை டிஜிட்டல் முறை மூலமாக மேற்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களைச் சென்றடைய இந்த டிஜிட்டல் வங்கி முறையைப் பயன்படுத்துவதாக வங்கி மேலும் தெரிவித்தது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 2020ஆம் ஆண்டு வங்கி அதன் 100ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 880 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK