தொப்புள்கொடி உறவுகளுக்கான இந்தியத் தலையீடுகள்!

 


சுஐப் எம்.காசிம்-

இந்து சமுத்திர அரசியலில் இந்தியாவின் வகிபாகத்தை எந்த நாடுகளும் உதறித் தள்ள முடியாது. குறிப்பாக இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என்பவற்றில், இந்தியாவின் தலையீடுகள் தவிர்க்க முடியாதவை. இவ்வாறான தலையீடுகள் அத்துமீறல்களாகக் காண்பிக்கப்பட்டாலும், பின்னர் ஜனநாயக அர்த்த முடையாதாகவே நோக்கப்படுகிறது. அந்தளவிற்கு இந்நாடுகளிலுள்ள சிறுபான்மைச் சமூகங்கள், இந்தியாவின் தொப்புள்கொடி உறவுடன் தொடர்புபட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, இலங்கையின் தொப்புளுறவு விஷேடமானது. பாகிஸ்தானும், இத்தகைய உறவுடன் இணைக்கப்பட்டாலும் சில அரசியல் காரணங்கள், இதை இழுபறிக்கு உள்ளாக்கின்றது.

இப் பின்னணியில்தான், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் மீண்டும் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறான ஒரு நம்பிக்கை பிறந்துள்ளதாகவே எண்ண முடிகின்றது. இலங்கையில், தமிழர்களின் அரசியல் தேவைகள் வேண்டி நிற்கும் தீர்வுகள் ஒன்றே என்பதை, ஜெனீவா அமர்வில் காட்டுவதற்கு தமிழ் கட்சிகள் தயாராவதிலிருந்து இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது. இம்முறையாவது உரிமை அரசியலை வென்றெடுப்பது அல்லது தமிழரின் அரசியல் தீர்வுக்கான நியாயங்களை சர்வதேச அளவில் ஆவணப்படுத்தி, வரலாற்றாக்கி வைப்பது. இவையிரண்டுக்குமாகத்தான், தமிழ் தேசியத்தின் ஜனநாயக அரசியல் சக்திகள் ஒன்றுபட்டுள்ளன. கட்சிகள் வெவ்வேறானாலும் இலக்குகள் ஒன்றுதான் என்று இம்முறை ஜெனீவாவில் உணர்த்தப்படவுள்ளது. 

தென்னிலங்கையில் ஓங்கியுள்ள பௌத்த கடும்போக்கும், இந்தக் கரங்களின் பிடிக்குள் சிக்கியுள்ள ராஜபக்ஷ அரசும் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதையுமே தரப்போவதில்லை. இருக்கின்ற மாகாண சபைகளையே ஒழிக்க முயலும் இந்த அரசை ஜெனீவாவில் மடக்குவது, இந்தியாவிடம் மாட்டிவிடுவது, இதுதான் தமிழ் தேசியத்தின் தற்போதைய தீர்மானம். இத்தீர்க்கமான முடிவுடன்தான் தமிழ் தேசிய அரசியல் ஜெனீவா நோக்கி நகர்த்தப்படுகிறது. இதில் இந்தியாவும் தப்ப வேண்டுமே! இதற்காகவே ஜெய்சங்கர் இலங்கை வந்தார்.

புலிகளை அழிக்க உதவிய இந்தியா, தமிழர்களுக்கு  உதவ முன்வருவது ஆச்சரியமில்லை. இந்த வாக்குறுதியை இலங்கையிடம் வாங்கிவிட்டுத்தான் இறுதி யுத்தத்துக்கு இந்தியா உதவியிருக்கும். இதே ராஜபக்ஷ அரசாங்கம்தான் இவ்வுதவியைப் பெற்றிருந்தது. இப்போது இந்த அரசின் போக்கிலும் பேச்சிலும் நம்பிக்கை இழந்த நிலையிலா? அல்லது போருக்கு உதவிய சன்மானத்துக்காக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பெறுவதற்கா? இந்தியா வருகிறதென்ற விவாதங்கள்தான் இலங்கை அரசியலை விறுவிறுப்பாக்கி உள்ளது. 

என்னைப் பொறுத்தமட்டில், "ஊரான் ஊட்டு நெய்யே, தன் பொஞ்சாதி (மனைவி) கையே” என்ற தருணம் பார்க்கும் ஆதாய அரசியல் ராஜபக்ஷக்களிடம் இல்லை. ஒருகாலத்தில் தமிழ் நாட்டில் நிலைத்திருந்த எம்.ஜீ.ஆரின் அரசியல் மவுசு போன்று, தென்னிலங்கையில் நிலைப்படுமளவுக்கு ராஜபக்ஷக்களின் சாதனைகள் பௌத்தர்களின் உணர்வில் ஊறியுள்ளது. புலிகளின் முடிவு, கொழும்பு துறைமுக நகரம், பிரிவினைவாத அரசியலை நிராகரித்தல் உள்ளிட்ட அத்தனையும் அரசியலுக்கான ராஜபக்ஷக்களின் உறுதியான அடித்தளங்கள். இவர்கள் எதைச் செய்தாலும் தேசத்தின் நலன் தென்படுமென தென்னிலங்கை பௌத்த சக்திகள் நம்புகின்றன. கொழும்பு துறைமுக நகரத்தால், சீனாவின் தலையீடு வந்துள்ளதாகக் கூறிய சக்திகள், இன்று வாய் மூடிவிட்டதே! அந்தளவுக்கு ஆச்சரியமான நிர்மாணப் பணிகள் அங்கு இடம்பெறுகின்றன. மேலும் காங்கேசந்துறை  துறைமுகமும் சீனாவுக்குச் செல்வதைத் தடுக்கவா? இந்தியா வருகிறது. இல்லை, இதனுடன் அதிகாரப் பகிர்வின் ஆகக் குறைந்த தீர்வான, மாகாண சபை முறைகளை இல்லாதொழிக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தவே ஜெய்சங்கர் வந்திருப்பார். கடும்போக்கு சக்திகளையும் இனவாதிகளையும் திருப்திப்படுத்தத்தானே, இதையும் இந்த அரசு செய்யப்பார்க்கிறது. தெருவில் கூச்சலிடும் ஒருசிலரின் மனநிலையில் ஒட்டுமொத்த சிங்களவர்களும் இல்லை என்பது அரசுக்கும் தெரிந்ததுதான். என்ன செய்வது? ஏற்றிவிட்ட ஏணியை உதைக்க முடியாதே! இந்த நிலைக்குள்ளே  இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் மாட்டிக்கொண்டுள்ளன. 

இல்லாவிடின் எத்தனை தெளிவுகளுக்குப் பின்னரும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுமா? பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யாத, மதத்தை மட்டும் அரசியலுக்காகத் தூக்கிப் பிடிக்கின்ற, அமுக்கக் குழுக்களுக்கு அரசு இன்னும் பணிகிறதே! அமைச்சர் பவித்ராவின் (06) பாராளுமன்ற உரை, ஜனாஸாக்கள் தொடர்ந்தும் எரிக்கப்பட உள்ளதைத்தான் ஊர்ஜிதம் செய்கிறது. ஆனால், அவரது சில தடுமாற்றங்கள், இது அரசாங்கத்தின் இறுதி முடிவில்லை என்பதைக் காட்டுவதால் முஸ்லிம்களின் நம்பிக்கை இன்னும் ஊசலாடுகிறது. 

டிசம்பர் 24 இல் நியமிக்கப்பட்ட உயிரியல் வைத்திய நிபுணர் குழுவின் அறிக்கை, நல்லடக்கத்துக்கும் பரிந்துரை செய்துள்ளமைதான், முஸ்லிம்களின் எஞ்சியுள்ள நம்பிக்கை ஊசலாடக் காரணம். இருப்பினும், இந்தப் பரிந்துரையை ஏற்பது அல்லது தட்டிக்கழிப்பது என்பவை ஏற்கனவே நியமிக்கப்பட்ட சன்ன பெரேரா தலைமையிலான தொழில்நுட்பக் குழுவிடமுள்ளதே. இதில்தான், முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்தக் குழுவில் நம்பிக்கையற்றுத்தானே, டிசம்பர் 24 இல் ஜெனிபர் பெரேரா தலைமையில் உயிரியல் வைத்திய விற்பன்னர் குழு நியமிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்காக இவ்வளவு முயற்சித்த அரசு, இறுதி முடிவின் அதிகாரத்தை ஏன் தொழிநுட்பக் குழுவிடம் கையளித்தது? இவ்விடயத்தில், முஸ்லிம் அரசியல் சக்திகள் ஒன்றுபட்டு, பிடியை இறுக்கி இருக்க வேண்டும். 

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக் குமாரின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கப் பதறியதில், ஏதோவொரு மூடுமந்திரம் உள்ளதாகத் தெரிகிறதே! முஸ்லிம்களின் இன்றைய பெருமூச்சுக்கள், சரணாகதி அரசியலை ஜனாதிபதியும் பிரதமரும் புரியாமலில்லை. அரசியலுக்கான பழிவாங்கல்கள், ஆத்மீக இலட்சியங்களை அழிப்பது வரை சென்றுள்ளதுதான் கவலை. எனவே, எத்தனை நிபந்தனைகளுடனாவது, தமது தாய் மண்ணில் நல்லடக்கம் செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும். இன்றைய முஸ்லிம் தலைமைகளுக்காக இல்லாவிடினும், வரலாற்றுக் காலந்தொட்டு சிங்கள மன்னர்களுடன் நாட்டுப் பற்றுடன் வாழ்ந்த முஸ்லிம் தலைவர்கள், சமயத் தலைவர்களுக்காவது, அரசாங்கம் இதைச் செய்ய வேண்டும். செய்யுமென்ற நம்பிக்கையே முஸ்லிம் சமூகத்தில் இன்று ஊசலாடுகிறது.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK