யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில், இந்த நினைவுத்தூபி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் இத்தனை வருடங்களாக இருந்து வந்த இந்த நினைவுத்தூபியை இப்போது அவசர அவசரமாகத் தகர்த்து, அதனை முழுமையாக அழிக்க வேண்டுமென்ற தீய நோக்கம் ஏன் ஏற்பட்டது? இனவாதிகளையும், கடும்போக்காளர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவேயொழிய, வேறு எந்தக் காரணமும் இதில் இருக்க முடியாது. இந்த நாட்டிலே சிறுபான்மையினர் மீதான இனவாதம் பெருவீச்சில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமையின் வெளிப்பாடுகள்தான் உடல்களை எரித்தலும், ஞாபகச் சின்னங்களை தகர்த்தலும் ஆகும்.
இந்த வகையான இனவாத செயற்பாடுகளை மானுட நேயமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். “இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்” என வாய்ச்சொல்லில் மட்டும் கூறிக்கொண்டு, சிறுபான்மை மக்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் தொடர்ந்தும் வஞ்சம் தீர்ப்பதிலேயே இந்த அரசாங்கம், தமது காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கின்றது.
“தனக்கு மேலிடத்திலிருந்து வந்த அழுத்தங்கள் காரணமாகவே, பல்கலைக்கழக நிர்வாகம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை தகர்த்து, அழித்ததாக” உபவேந்தர் தெரிவித்திருக்கும் கூற்றின் மூலம், அரசின் உண்மையான சுயரூபம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
சிறுபான்மை மக்களின் உடைமைகளை நொருக்குவதன் மூலமும், உள்ளங்களை உடைப்பதன் மூலமும் இனவாதிகளை குஷிப்படுத்தி, நாட்டை மேம்படுத்தலாம் என இவர்கள் எண்ணுகிறார்கள் போலும்.
எனவே, யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த அநாகரிக சம்பவத்தை, வட மாகாணத்தைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியிலும் வெகுவாகக் கண்டிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK