ஜனாஸாக்கள் பலவந்தமாக சாம்பலாக்கப்படுவதன் மூலம் நாம் இப்போது அநியாயத்துக்கு இலக்காகி வருகின்றோம்


ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிப்பு, கொரோனா அச்சுறுத்தல், மழை வெள்ள அனர்த்தம் போன்றனவற்றுக்கு முகங்கொடுக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமது பிரார்த்தனைகளை அதிகப்படுத்திக் கொள்வோம் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுகையில்,

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை இது ஒரு சோதனைகள் மிகுந்த காலகட்டம். நமது நியாயமான கோரிக்கைகள் மறுக்கப்படும் காலகட்டம். உரிமைகள் நசுக்கப் படும் காலகட்டம். இவற்றுக்கு மேலாக கொரோனா, வெள்ளம் போன்ற அச்சுறுத்தல்கள். 

எனவே, இந்த சோதனைகளில் இருந்து விடுபட நாம் இறைநெருக்கத்தை அதிகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் விட்ட சில தவறுகள் இந்தச் சோதனைகளுக்கு காரணமாக இருக்கலாம். எனவே, அவற்றுக்காக அடிக்கடி பாவமன்னிப்பு தேடிக்கொள்வோம். நமது கோரிக்கைகளை பிரார்த்தனைகள் ஊடாக இறைவனிடம் எத்தி வைப்போம். 

அதேபோல நமது ஜனாஸாக்கள் பலவந்தமாக சாம்பலாக்கப்படுவதன் மூலம் நாம் இப்போது அநியாயத்துக்கு இலக்காகி வருகின்றோம். அநியாயம் செய்யப்பட்டோரின் பிரார்த்தனைகள் தடையின்றி ஏற்கப்படும் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஆகையால் இந்த சந்தர்ப்பங்களைப் பயன் படுத்திக் கொள்வோம்.

முடியுமானவரை தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம். குனூத் நாஸிலாவை நமது ஐவேளைத் தொழுகைகளில் ஓதிக் கொள்வோம். முடியுமானவர்கள் நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.

நமது தேவைகள், கோரிக்கைகளை இறைவனிடம் முன் வைக்க நல்லதொரு சந்தர்ப்பம் இது. இந்த சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post