(சர்ஜுன் லாபீர்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகரி டாக்டர் ரிஸ்னி முன்னெடுக்கும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் அர்ப்பணிப்புமிக்க சேவையினை அண்மைக் காலமாக முகநூல்களிலும், இணையத்தளங்களிலும் சிலர் பிழையான கருத்தாடல்களையும், பிண்னூட்டல்களையும் செய்து வருகின்றனர்.அதனால் எந்தவிதமான நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் இன்றி மக்கள் நலனை மாத்திரம் மையப்படுத்தி சேவையாற்றும் டாக்டர் ரிஸ்னி இப் பிரதேசத்தில் தனது சேவையினை ஆற்றமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உடனடியாக இடமாற்றம் கோரி விண்ணப்பித்து இருந்தார்.

அவருடைய இடமாற்றம் சம்மந்தமாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் நேற்று கல்முனையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியின் அர்ப்பணிப்பான சேவையை பெருமையாக பாராட்டியதுடன் உடனடியாக தான் கேட்டுகொண்ட இடமாற்றத்தை இரத்து செய்து கல்முனை மக்களுக்காக தொடர்ந்தும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக சேவையாற்ற வேண்டும் என பணிப்புரையும் ஆலோசனைகளும் வழங்கியுள்ளார்.

எமது சமூகத்திற்காகவும்,எமது மக்களுக்காகவும் இரவு பகல் பாராது சேவையாற்றும் டாக்டர் ரிஸ்னியின் சேவையினை சில படித்த புத்திஜீவிகளும்,சில சமூக அக்கறையற்ற சுயநலம் கொண்டோரும் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றார்கள். "காய்க்கும் மரத்திற்குத்தான் கல்லடி" என்று கூறுவதைப் போல் உங்கள் சேவையில் காற்புணர்ச்சி கொண்டோரின் விமர்சனங்களுக்கு சற்றும் பின்வாங்காமல் முனைப்புடன் கல்முனை மக்களுக்கு சேவையாற்றுங்கள் அதுவே இன்றைய சூழ்நிலையில் எமது கல்முனை மக்களின் அவாவாகவும்,எதிர்பார்ப்பாகவும், காணப்படுகின்றது.

"முற்றத்து மல்லிகை மணப்பதில்லை" என்பார்கள்.ஆனால் உங்களின் சமூகப்பற்றுமிக்க,பெறுமதிமிக்க சேவையினை இன்று மாகாண பணிப்பாளர் மட்டும் அன்றி ஆளுநர் தொடக்கம் ஜனாதிபதி மட்டம் வரை பாராட்டப்படுகின்றளவுக்கு உங்கள் சேவையின் ஆழம் பெருமதிமிக்கதாக உள்ளது.

இவ்வாறு உங்களின் உயர்ந்த சேவையினை உயர் மட்டத்தில் உள்ள பலர் பாராட்டுகின்ற நிலையில் சிலர் விமர்சனத்திற்கும் கேள்விக்கும் உட்படுத்த முனைகின்றனர்.இது அவர்களது கொரோனா தொற்று தாக்கத்தின் போதிய அறிவின்மையையும்,விழிப்புணர்வு இன்மையையும்,சில வைத்தியர்களின் பிழையான வழிகாட்டல்களாலும் ஏற்படுத்தப்படுகின்ற விளைவே என்றே விளங்கிக் கொள்ள முடிகின்றது. இதன் விளைவாகவே இன்று காலை தெற்கு சுகாதார வைத்திய பணிமனையில் நடைபெற்ற சம்பவத்தினை குறிப்பிடலாம்.எனவே மேலும் உங்கள் தொடர்ச்சியான பெறுமதிமிக்க சேவையினை கிராம மட்ட கொரோனா தடுப்பு குழவினரோடு இணைந்து உச்ச சேவையினை வழங்குங்கள்.கல்முனை மக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவினையும் வழங்குவார்கள்.