மரணிப்பவர்களின் உடல்களை கையாளுகின்ற விடயத்திலும் அறிவியல் அடிப்படையிலான தீர்வினை பெற்றுத்தர வேண்டும்" பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் வேண்டுகோள்!


"சகல பிரச்சினைகளையும் விஞ்ஞான அடிப்படையில் அணுகி தீர்வுகளை வழங்குவேன் என வாக்குறுதி அளித்த நீங்கள் கோவிட்-19 மூலம் மரணிப்பவர்களின் உடல்களை கையாளுகின்ற விடயத்திலும் அறிவியல் அடிப்படையிலான தீர்வினை பெற்றுத்தர வேண்டும்"

-ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் வேண்டுகோள்!

"கோவிட் -19 ஆனது  ஒரு பூகோள பிரச்சனையாகும். அனைத்து நாடுகளும் அறிவியலின் அடிப்படையிலேயே கொவிட் விடயங்களை கையாளும்போது,

நம் நாட்டில் மாத்திரம் கோவிட் மரணங்கள்  பாரிய சர்ச்சையாக மாறியுள்ளது. சடலங்கள் கட்டாயமாக தகனம் செய்யப்படும் போது தமது உயிர்களும் உணர்வுகளும் எரிக்கப்படுவதாகவே கிறிஸ்தவ- முஸ்லிம் மக்கள் உணர்கிறார்கள்.  இது மத-இன விவகாரமன்று. மாறாக மனிதாபிமான பிரச்சினையாகும். நமது மக்கள்  மீண்டும் மீண்டும் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிவினைகளுக்குள் தள்ளப்படுவதானது, நம் தேசத்தின் எதிர்காலத்துக்கு  பெரிதும் குந்தகமானதாகும்.

அறிவு பூர்வமாக; விஞ்ஞான பூர்வமாக மட்டுமே விடயங்களை கையாளுவேன் என உறுதியளித்து நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற நீங்கள், கோவிட் காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை எரிக்கவே வேண்டும் என்கின்ற முடிவு  விஞ்ஞான பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றுதானா என  மீண்டும் பரிசீலிக்க வேண்டும். இந்த விடயத்தில் மாத்திரம்

விஞ்ஞானத்தின் உண்மைகளைப் புறக்கணித்து அனுமானங்களின்  அடிப்படையிலான நிபுணர் குழுவின் கருத்துக்களை ஏற்று நடைமுறைப்படுத்துவது  நியாயமாகாது. அறிவு பூர்வமாக  சிந்திக்கப்பட வேண்டிய 3 விடயங்களை தங்களது மேலான கவனத்திற்குக் சுட்டிக்காட்டுவதோடு

அனுமானங்கள் அடிப்படையிலன்றி அறிவியல் ரீதியாக இதற்கான தீர்வை விரைவில் பெற்றுத் தாருங்கள்" என ஜனாதிபதியிடம் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

NFGGயின் பிரதித் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள விரிவான கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு!

கோவிட் வைரஸானது முழு உலகையும் ஆக்கிரமித்து கடந்த ஒரு வருட காலமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் நமது நாடு முகம் கொடுத்திருக்கின்ற சவால்களும் பிரச்சனைகளும் எல்லோரும் அறிந்ததே.  இந்த நாட்டின் தேசப்பற்றுள்ள குடிமகன் என்ற வகையில் இது பற்றி நான் பெரிதும் கவலை அடைகிறேன். இதனை முறையாகக் கையாண்டு கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணத்துடன் தங்கள் தலைமையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எப்போதும் நன்றி கூறுகிறேன்.  முடியுமான அனைத்து பங்களிப்பினையும் உங்கள் பணிக்காகவும் இந்த தேசத்துக்காகவும் செய்வதற்கு எப்போதும் நாம்  தயாராக இருக்கின்றோம்.

கோவிட்-19  என்பது ஒரு மதத்தோடு இனத்தோடு  மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சனை அல்ல. இது ஒரு பூகோள பிரச்சனையாகும். இருப்பினும், இவற்றின் மூலம் மரணித்தவர்களின் உடல்களை எவ்வாறு கையாளுவது என்பது இன்று நமது நாட்டில் மாத்திரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ-முஸ்லிம் மக்களின் அடிப்படை மத கலாசார நம்பிக்கைகளுக்கு எதிரானதாகவும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் இந்த விவகாரம் அமைந்துள்ளது. கோவிட் காரணமாக மரணிப்பவர்களின் உடல்கள் எரிக்கப்படும்போது இந்த மக்களிகளின் உணர்வுகளும் உயிர்களும் எரிக்கப்படுவதாகவே அவர்கள் உணர்கிறார்கள். இன ரீதியாகவும் மத ரீதியாகவும் மக்களை மேலும் பிளவு படுத்துகின்றன ஒரு துரதிஷ்டவசமான சூழ்நிலையாகவும் இது வேகமாக மாறி வருகிறது. தேசத்தின் மக்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒன்றாக பயணிக்க வேண்டிய இத்தருணத்தில் இந்த பிரிவினைகளும் முரண்பாடுகளும் நாட்டின் எதிர்கால நலனுக்கு பெரும் பாதகமாக அமையும். நாட்டின் உண்மையான அக்கறை உள்ள குடிமகன் என்ற வகையில் இது பற்றி நான் பெரிதும் கவலைப் படுகிறேன்.

நீங்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்று இருக்கிறது. அனைத்து விடயங்களும் அறிவுபூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் கையாளப்படும் என்பதே அந்த வாக்குறுதியாகும். அந்த வகையில் இந்த உடல்களை எரிக்க வேண்டும் என்கின்ற முடிவு அறிவுபூர்வமாக விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றுதானா என்பது பற்றி நீங்கள் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.


கோவிட் வைரஸ் என்றால் என்ன? அதன் தன்மைகள் என்ன? அதன் தாக்கங்கள் எவை? அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்ன?  அதற்கான பாதுகாப்பான தடுப்பூசிகள்  எவை?  போன்ற அனைத்து விடயங்களையும் உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த போது உங்கள் தலைமையிலான அரசாங்கமும் நிர்வாகமும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டது. அறிவுபூர்வமான விஞ்ஞானபூர்வமான உலக நடைமுறைகளாக அவற்றை அரசாங்கம் அறிவித்த போது மக்கள் அனைவரும் அவற்றை ஏற்று பின்பற்றி ஒத்துழைப்பும் வழங்கி வருகிறார்கள். இது போன்று கோவிட் காரணமாக இறந்தோரின் உடல்களை கையாளும் விடயத்திலும் மிகத்தெளிவான பரிந்துரைகளையும்  வழிகாட்டுதல்களையும் WHO வழங்கியிருக்கிறது. அதற்கிணங்க அந்த உடல்களை அவரவர் கலாசார தனித்துவ விருப்பங்களின் அடிப்படையில் எரிக்கவும் முடியும்; புதைக்கவும் முடியும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அடக்கம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் விஞ்ஞான பூர்வமான அடிப்படையில் WHO தெரிவித்துள்ளது.  இந்த வைரஸ் உலகுக்கு அறிமுகமாகி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் இது தொடர்பான ஆய்வுகளும் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு உடல்களை புகைப்பதனால் நோய் தொற்று ஆபத்து  எதுவும் இல்லை என்பதனை மீண்டும் மீண்டும் WHO உறுதிசெய்துள்ளது. நமது நாட்டை  தவிர உலகிலுள்ள 190க்கும் அதிகமான நாடுகள் இந்த நடைமுறைகளையே பின்பற்றுகின்றனர். இலட்சக்கணக்கான உடல்கள் இதுவரை அந்த நாடுகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக எவ்வித நோய்த்தொற்றும் ஏற்பட்டதாக எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லை. ஆனாலும் இலங்கையில் மட்டும் அதற்கு மாற்றமான நடை முறைகளே பின்பற்றப்படுகின்றன. இறந்த உடல்களை எரிக்கவே வேண்டும் என்கின்ற கண்டிப்பான நடைமுறை எவ்வித விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களும் இல்லாமல் மக்கள் மீது திணிக்கப்படுவதாகவே எல்லோரும் உணர்கிறார்கள்.

இந்த இடத்தில் அறிவு  பூர்வமாக சிந்திக்கப்பட வேண்டிய; அணுகப்பட வேண்டிய 3 விடயங்களை தங்களது மேலான கவனத்திற்குக் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1.உலகப் புகழ்பெற்ற துறைசார் நிபுணர்கள் கோவிட் மூலம் மரணித்த உடல்களை அடக்கம் செய்வதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதனை விஞ்ஞானபூர்வமான

ஆதாரங்களோடும் ஆய்வுகளின் அடிப்படையிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.  அதனையே WHOவும் அறிவித்து உலகின் 190க்கும் அதிகமான நாடுகளும் அதனைகடைப்பிடித்து வருகின்றன. இருப்பினும் நம் நாட்டில் நியமிக்கப்பட்டுள்ள இந்த நிபுணர் குழு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் ஏதும் இன்றி  அனுமானத்தின் அடிப்படையிலும் சந்தேகத்தின் அடிப்படையிலுமே  'அடக்கம் செய்யவே முடியாது' என்ற கருத்தை சொல்லி வருகிறார்கள். அறிவு பூர்வமாக; விஞ்ஞான பூர்வமாக மட்டுமே விடயங்களை கையாளுவேன் என உறுதி அளித்த நீங்கள் இந்த விடயத்தில் மாத்திரம்

விஞ்ஞானத்தின் உண்மைகளைப் புறக்கணித்து அனுமானங்களின்  அடிப்படையிலான நிபுணர் குழுவின் கருத்துக்களை ஏற்று நடைமுறைப்படுத்துவது எப்படி நியாயமாகும்?

2.கோவிட் மூலமாக இன்றுவரை 187 பேர் வரை மாத்திரமே மரணித்து இருக்கிறார்கள். ஆனால் 40000க்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வைத்தியசாலைகளில் அல்லது வீடுகளில் அவர்கள் இருக்கும்போது அவர்களின் உடல்களிலிருந்து வெளியாகும் நாளாந்த கழிவுகள் மூலமாகவும் வைரஸ் வெளியாகிறது. வைரஸ் நிறைந்த அந்த கழிவுகள் அனைத்தும் நிலத்தில் அல்லது நீர் நிலைகளிலேயே கலக்கின்றன. உடல்களை அடக்கம் செய்யவதனால் வைரஸ் பரவி  நிலக்கீழ் நீர் மாசடைந்து தொற்று  பரவும் என்பது உண்மை என்றால் இந்த கழிவுகள் மூலமாக ஏற்படும் நீர் மாசடைவும் நோய் தொற்று அபாயமும்  ஏன்  தடுக்கப்படவில்லை? அதற்கான ஆலோசனைகளை இந்த நிபுணர் குழு ஏன் முன்வைக்கவில்லை? இந்த அபாயம் எந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டது?

3. இந்த உடல்களை புகைப்பதனால் தொற்று பரவலாம் என்ற கருத்தில் ஒரு சிறிய அளவு உண்மை இருப்பதாக எடுத்துக்கொள்வோம். அப்போதும் கூட, நம் தேசத்தின் ஒரு பகுதி குடி மக்களின் மத கலாசார அடிப்படை உரிமைகளை பாதிக்கும் இந்த பாரதூரமான பிரச்சனைக்கு அறிவுபூர்வமாக தீர்வு காணப்பட கூடாதா? இந்த நிபுணர் குழுவும் அதற்கான அறிவியல் ரீதியான தீர்வுகளைப் முன்வைக்க கூடாதா? அந்த வகையில் கொங்கிரீட் பெட்டிகளை நிலத்தின் கீழ்  அமைத்து அதனுள் மண்ணை நிரப்பி உடல்களை  பாதுகாப்பான உறைகளில் இட்டு அதில் அடக்கம் செய்ய முடியும் என்பது இதற்கான எழிமையான அறிவுபூர்வமான தீர்வாகும். அவ்வாறு செய்வதும் கூட ஏன் இதுவரை புறக்கணிக்கப்படுகிறது?  எந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் இந்த தீர்வு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.?

கோவிட் பிரச்சனை என்பது ஒரு இனத்தோடு அல்லது ஒரு மதத்தோடு அல்லது ஒரு நாட்டோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இது உலக வரலாற்றில் நாம் சந்தித்திருக்கும் மிகப் பிரமாண்டமான பூகோள சுகாதார அச்சுறுத்தலாகும். எல்லா நாடுகளும் இதனை அறிவுப்பூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவுமே கையாளுகின்றன.  இந்நிலையில், விஞ்ஞானத்தின் அடிப்படையிலேயே சகல விடயங்களையும் கையாண்டு இந்த நாட்டை முன்னேற்றுவோம்  என உறுதி அளித்த உங்களின் தலைமையின் கீழ் இவ்விடயம் விஞ்ஞானபூர்வமாக கையாளப்படவில்லை  என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இது கிறிஸ்தவ-முஸ்லிம் சமூகங்களுடைய பிரச்சனையாக பார்க்கப்படாமல் ஒரு மனிதநேய பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும். கோவிட் தொற்று ஒரு உலகளாவிய பிரச்சனை என்ற அடிப்படையில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் நடைமுறைகளே நம் நாட்டிலும் பின்பற்றப்பட வேண்டும். இதனை தேசிய, மனிதாபிமான பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்.

எனவே, நான் மேலே சுட்டிக்காட்டிய விடயங்களை நீங்கள் கவனத்தில் எடுப்பீர்கள் என்றும் விஞ்ஞான பூர்வமான அறிவியல் ரீதியான அணுகு முறைகளின் ஊடாக விரைவில் இதனை தீர்த்து வைப்பீர்கள் என்றும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

Eng. M.M.அப்துர் ரஹ்மான்  


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK