உயர்நீதிமன்றக் கட்டட வளாகத்தில், டிசெம்பர் 15ஆம் திகதியன்று ஏற்பட்ட தீபரவலானது,

பற்றவைக்கப்பட்டதன் பின்னர் தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டினால் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை, நிராகரிக்க முடியாதென, அரச பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தீ பரவலானது, எரிபொருள் அல்லது மின்கசிவால் ஏற்படவில்லை என, அரச பகுப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, நீதிமன்றக் கட்டட வளாகத்தில் கடமையாற்றும் சிற்றூழியர்களில் பலர், குறித்த கட்டட வளாகத்தில் இரகசியமாகப் புகைப்பிடிப்பது, முதற்கட்ட விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கு காரணமாக அமைந்த, பற்றவைக்கப்பட்ட சிகரெட் துண்டை வீசிய சிற்றூழியர் யார் என்பது தொடர்பான விசாரணைகள்,  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீ பரவல் தொடர்பாக, குற்ற விசாரணைப் பிரிவின் 3 விசாரணைக் குழுக்கள் களத்தில் உள்ளது.