எஸ்.எம்.எம்.முர்ஷித்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் தேசத்தை சுத்தமாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் “சேர்ந்து காப்போம் கிழக்கை" என்னும் தொனிப்பொருளில் பாதையில் குப்பை போட வேண்டாம் என்னும் விசேட வேலைத் திட்டம் இடம் பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் சித்தாண்டி இராணுவமுகாம் அதிகாரிகள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஓட்டமாவடி வர்த்தக சங்கம், பிரதேச பள்ளிவாயல்கள் என்பன இணைந்து ஓட்டமாவடி பிரதான வீதியில் குப்பைகளை அகற்றி வடிகான்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டமும் வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வும் இன்று (13.12.2020) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், பிரதேச சபை உறுப்பினர்கள், சித்தாண்டி இராணுவ முகாம் அதிகாரிகள், சமுக சேவையாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸ், பள்ளிவாயல்களின் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி மேம்பால சந்தியில் இருந்து ஆரம்பமான குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் பிரதான வீதியில் இரு மருங்கிலும் துப்பரவு செய்யப்பட்டதுடன் ஓட்டமாவடி பாலம் வரை இடம் பெற்றதுடன் வாகனங்களில் வீதிகளில் குப்பைகளை போட வேண்டாம் மற்றும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டது.


(எஸ்.எம்.எம்.முர்ஷித்