வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர நகரத்திற்கு இன்று (05) விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜயஸ்ரீ மகா போதிக்கு சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டார்.

புனித பூமிக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் அடமஸ்தானவின் தலைமைத் தேரர் கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிரினிவாச நாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் ருவன்வெலி ரஜமகா விகாரைக்கு சென்று ருவன்வெலி ராஜமஹா விஹாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

ருவன்வெலி மகா சேயவில் சமயக் கிரியைகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள் அனுராதபுர புனித பூமி அபிவிருத்தி பெருந்திட்டம் பற்றி கேட்டறிந்தார்.

இத்திட்டத்தின் செலவு 450 மில்லியன் ரூபாவாகும். மூன்று வலயங்களின் கீழ் 28 திட்டங்களாக அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நிர்மாணப் பணிகள் 2024 டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவுசெய்யப்படவுள்ளது. திட்டம் பற்றி இடம்பெற்ற கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அஞ்சலி தேவராஜ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷான் சில்வா, பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.