இனவாதிகளின் பிடிக்குள் அரசாங்கம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஆவேசம்


ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு இந்த அரசாங்கம் இனவாத கும்பலின் கெடுபிடிகளிலிருந்து விடுபட்டு, சர்வதேசம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் - 19 தொற்றினால் இறப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியுண்டு என்கின்ற தீர்மானத்தை அங்கீகரித்து, வர்த்தமானி அறிவித்தலை இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்றிவிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பொரளை, பொது மயானத்திற்கு அருகில் புதன்கிழமை (23) நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

எமது நாட்டு அரசாங்கத்தினால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள மிக மோசமான, கீpழ்த்தரமான, அநியாயமான முறையில் கொவிட் - 19 தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம் ஜனஸாக்களை கட்டாய தகனம் செய்யுகின்ற தீர்மானத்திற்கு எதிர்ப்பை காட்டுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பொரளை, மயானத்தில் ஒன்று கூடியிருக்கின்றோம்.

நாட்டில் திட்டமிட்டு ஒரு சமயக் குழுவினருக்கு எதிராக அவர்களது அடிப்படை உரிமைகளை மீறி பலவந்தமாக ஜனாஸாக்களை எரிக்கின்ற விடயத்திற்காக ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல், நீதிமன்றத்திலும் கூட நியாயம் கிடைக்காத நிலையில் தான் நாங்கள் இவ்வாறான அடையாளப் போராட்டத்தில் இறங்கி இருக்கின்றோம்.

இத்தகைய அடையாளப் போராட்டங்களைக் கண்டு அரசாங்கம் படிப்படியாக அதிர்ந்து போவது மிகத் தெளிவாக எங்களுக்குத் தெரிகின்றது. அதன் வெளிப்பாடு தான், இந்த கனத்தை மயான பூமியில் இருக்கின்ற கம்பி வேலியில் கட்டப்பட்டிருக்கின்ற கபன் சேலையின் ஒரு பகுதியான வெள்ளைத் துணியை கழற்றி எறிகின்ற பீதியில் இந்த அரசாங்கம் மாறிவிட்டதையிட்டு நாங்கள் கவலையும், வேதனையும் அடைகின்றோம். 20வயது இளைஞர் ஒருவரை தகனம் செய்தபோதே மக்கள் கிளர்ந்தெழ ஆரம்பித்துவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல், தேர்ச்சியுள்ள விஞ்ஞான ரீதியான அறிவுள்ள குழுவென்று கூறி, எந்தவிதத்திலும் தொற்றுநோயியல் சம்பந்தமான நிபுணத்துவமற்ற ஒருவரை தலைவராக நியமித்திருக்கின்றனர். அவர் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்கான கபட நாடகத்தின் வெளிப்பாடு தான் இன்று இவ்வாறு முஸ்லிம்கள் போராட்டத்தில் இறங்கி நிற்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக இந்த அப்பட்டமான அநியாயம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுபட முடியாமல் அரசாங்கம் திகைத்துப் போய் நிற்கின்றது. நேற்று களுத்துரை மாவட்டத்தில் நாகொட வைத்தியசாலையில் இரண்டு ஜனாஸாக்களை அங்கிருக்கின்ற சட்ட மருத்துவ அதிகாரிகள் பலவந்தமாகச் சென்று எரியூட்டியிருக்கின்றார்கள்.

இந்த அரசாங்கம் தற்காலிகமாக ஜனாஸாக்களை குளிரூட்டிகளில் வைக்கலாமென எடுத்த முடிவைக் கூட கடைப்பிடிக்க முடியாத நிலையில், இந்நாட்டின் சட்ட வைத்திய அதிகாரிகளுள் ஒருசில இனவாதிகள் நுழைந்திருக்கின்றனர் என்பது மிகக் கவலைக்குரியது மாத்திரமல்ல, கண்டனத்திற்கும் உரியது.

எனவே, இந்த எதிர்ப்பு அலை நாடெங்கிலும் எழும்பிக்கொண்டிருக்கின்றது. இது முஸ்லிம்களுடைய போராட்டம் மட்டுமல்ல. எங்களுடன் தமிழ், பௌத்த, கத்தோலிக்கம் என இன வேறுபாடுகளை தகர்த்து சகல இன சகோதரர்கள், அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற ஏராளமானோர் இணைந்து இருக்கின்றார்கள்.

இவற்றை கருத்திற்கொண்டாவது இந்த அரசாங்கம் அதன் முடிவில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதனை மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற அரசாங்கம் இனிமேலாவது ஒரு உறுதியான அரசாங்கம் எனவும் பல்லின மக்களுக்கும் ஏற்றதொரு அரசாங்கம் எனவும் தன்னை நிரூபித்துக்காட்டுவதற்காக அதன் குறைந்தபட்ச நம்பிக்கையாவது காப்பாற்றிக்கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி - இதுவரையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் நிபுணத்துவமிக்க முஸ்லிம்கள் எவரும் உள்வாங்கப்படவில்லையா?

பதில் - இது பற்றி பாராளுமன்றத்தில் பல தடவைகள் கேட்டுவிட்டோம். சுகாதார அமைச்சரிடம் நான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி உட்பட ஏனையோரும் இக் கேள்வியை கேட்டுள்ளோம். முஸ்லிம் நிபுணர்களை உள்வாங்குவது ஒருபுறமிருக்க, இந்த நிபுணர் குழுவில் யாரெல்லாம் இருக்கின்றனர் என்பதைக் கூட இதுவரையில் அறிவிக்கவில்லை. பகிரங்கமாக யாருக்குமே இது தெரியாது.

ஏனெனில், நியமிக்கப்பட்டுள்ள இக் குழுவில் குறித்த வைரஸ் தொற்று நோயியல் பற்றி சரியான அறிவுள்ள, நிபுணத்துமிக்க ஒருவர் கூட இல்லை. தொற்று நோயியல் நிபுணரான நிஹால் ஜயசிங்க, பேராசிரியர் மலிக் பிரிஸ், மருத்துவ ஆராய்ச்;சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்றோர் பகிரங்கமாகவே தங்களுடைய நிபுணத்துவத்தை பற்றி அரசாங்கத்திற்கு எவ்வித பொருட்டும் இல்லை, தங்களிடம் எவ்வித அபிப்பிராயங்களும் கேட்பதும் இல்லை, இந்த அரசாங்கத்தோடு இணங்கிச் செல்பவர்களுக்கு தான் எந்த விடயத்திலும் முன்னுரிமை வழங்கி இடம் கொடுக்கப்படுகின்றது எனவும், தங்களுக்கு தேவையானவர்களை வைத்தே எல்லா விதமான குழுக்களையும் நியமிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இக்கூற்றுக்களை பார்க்கையில் நிபுணர் குழு என்ற பெயரில் இனவாதிகளின் கும்பலை வைத்துக் கொண்;டு தான் எமது சமூகத்திற்கு இந்த அநியாயத்தை செய்துக் கொண்டு இருக்கின்றார்கள். பழி தீர்க்க மேற்கொண்டிருக்கும் இந்தப் படுபாதக செயலை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

இனவாதிகளின் பணயக் கைதியாகவே இந்த அரசாங்கம் மாறி இருக்கின்றது.

இந்த அரசாங்கம் இந்த இனவாத பிடியிலிருந்து விடுபடுவதற்கு குறைந்தபட்சம் சிறிது காலம் குளிரூட்டிய பெட்டிகளில் ஜனாஸாக்களை வைத்துவிட்டு இந்த நிபுணர் குழுவை எப்படியாவது திருப்தியடைய செய்து விடலாமென எண்ணியதைக் கூட செய்வித்துக்கொள்ள முடியாத நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

இந்த போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு இந்த அரசாங்கம் இனவாத கும்பலின் கெடுபிடிகளிலிருந்து விடுபட்டு நியாயமான சர்வதேசம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் அடக்கம் செய்வதற்கும் அனுமதியுண்டு என்கின்ற தீர்மானத்தை அங்கீகரித்து, தங்களுடைய வர்த்தமானி அறிவித்தலை இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்றிவிட வேண்டும்.

இந்நாட்டில் தேவையில்லாத பிளவு பிரச்சினைகளும், துருவப்படுத்தல்களும், மக்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிக்காமலும், காலம் தாழ்த்தாமலும் மிக அவசரமாக அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் நல்லடக்கம் செய்வதற்குரிய அனுமதியை வழங்க வேண்டும்.

இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தினர் நிம்மதியாக இறுதி மூச்சை விட்டு இம் மண்ணிலேயே மரணித்த பின்னர் நல்லடக்கம் செய்வதற்கான அடிப்படை உரிமையை தந்து, எங்களுக்கு ஆறுதலை வழங்க வேண்டும் என பணிவாகவும், வினயமாகவும் வேண்டிக் கொள்கின்றோம்.

அத்துடன், வெட்கமில்லாமல் இங்கிருந்து மாலைதீவுக்கு ஜனாஸாக்களை ஏற்றுமதி செய்ய எத்தனித்தார்கள். அதற்கு மாலைதீவிலும் கூட எதிர்ப்பு வலுத்துவிட்டது என்றார்.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK