கடந்த 35 நாட்களுக்கும் மேலாக அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட எங்கள் தலைவர் ரிஷாத் பதியுதீனின் விடுதலை எமது தாய்மார்களும் சகோதரர்களும் நோற்ற நோன்புக்கும் பிரார்த்தனைகளுக்குமான பரிசாகும் என அ.இ.ம.கா. இன் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் தலைவரின் பிணை விடுதலையின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபான்மை மக்களின் தேசியத் தலைவர்களுள் ஒருவராக இருக்கின்ற பெருவாரியான ஆதரவுத்தளத்தோடு வளர்ந்து வரும் ரிஷாட் பதியுதீன் என்கின்ற அரசியல் ஆளுமையை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற பெருந்தேசிய இனவாதத்தின் கபடநாடகத்தின் ஓரங்கமாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திய போதிலும் இன்று எமது திறமையான சட்டத்தரணிகளாலும், உண்மையான முன்வைப்புகளாலும் எமது தலைவருக்கு பிணை கிடைத்துள்ளது. 

எமது தலைவர் மீது இது மட்டுமல்ல இன்னும் பல குற்றச்சாட்டுகளை சுமத்திய போதிலும் அவை ஒவ்வொன்றாக பொய் என நிரூபணமாகி வருகின்ற சூழலில் இன்றும் கூட எமது தலைவருக்கு கிடைத்திருக்கும் இந்த பிணை விடுதலை இந்த தேசத்தில் நீதித்துறை சுயாதீனம் ஓரளவு காப்பாற்றப்பட்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை தந்திருக்கிறது.

எமது தலைவரின் இந்த பிணை விடுதலைக்காக நோன்பு நோற்று பிரார்த்தித்த அனைத்து தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள் என அனைவருக்கும் இத்தருணத்தில் என் சார்பிலும் எமது கட்சி சார்பிலும் மகத்தான நன்றிகளை சொல்லிக்கொள்ள விழைகிறேன். இன்ஷா அல்லாஹ் அனைத்து பொய்யான குற்றச்சாட்டுக்களிலும் இருந்து தலைவர் ரிஷாத் நிரபராதி என இந்த நாடு உரத்து சொல்லும் நாட்கள் தொலைவில் இல்லை என தொடர்ந்தும் முஷாரப் எம்.பி தெரிவித்தார்.