வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபை வரவு செலவுத் திட்ட அமர்வில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையானது சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசமுள்ளது. குறித்த பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றல் தொடர்பான அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

குறித்த அமர்வில் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பும் நடைபெற்றது. இந்த அமர்வுக்கு செய்தி சேகரிப்பதற்கு சென்ற பிராந்திய ஊடகவியலாளருக்கு சபை தவிசாளர் ஆசிர்வாதம் அந்தோனி அவர்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சபைக்கு வருவதாயின் தம்மிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதனால் குறித்த அமர்வுக்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்து அவர் ஊடகவியலாளரை வெளியேற்றியிருந்தார்.

இதேவேளை, 17 அங்கத்தவர்களைக் கொண்ட குறித்த பிரதேச சபையில் பல உறுப்பினர்கள் சபை தவிசாளரின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தியில் உள்ள நிலையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.