(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில்லறைக் கடை உரிமையாளர் ஒருவரை மது போதையில் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை-10ம் கட்டை மற்றும் மட்கோ, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (31) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது நண்பரின் வீட்டிற்கு வருகை தந்து மது அருந்திவிட்டு பின்னர் கடைக்கு சென்ற வேளை கடை உரிமையாளர் சிகரெட் கொடுப்பதற்கு தாமதமாகியதால் கோபம் கொண்ட இளைஞர்கள் கடை உரிமையாளரை தாக்கியதாகவும் அதனையடுத்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்ததாகவும் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் சோதனையிட்டபோது மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்களின் தாக்குதலால் காயமடைந்த கடை உரிமையாளர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றையதினம் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.