சுஐப் எம். காசிம்-

மூன்றாவது இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்திய வடபுல முஸ்லிம்களின் ஒக்டோபர் வெளியேற்றம், இப்போது மூன்று தசாப்த காலத்தை எட்டி நிற்கின்றது. விடுதலைப் போராட்டத்துக்கு வேண்டாதவர்கள் அல்லது வேறு ஒரு காரணத்துக்காகவே இவர்கள் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். எந்தக் காரணங்களானாலும், தமிழர்கள் என்ற அரசியல் அடைமொழிக்குள் இந்த முஸ்லிம்களை உள்வாங்க வடக்கு, கிழக்கு விடுதலைப் போராளிகள் விரும்பியிருக்கவில்லை. ஏன், இந்த விருப்பமின்மை ஏற்பட்டதென்று இன்றுவரைக்கும் தமிழ் மொழி மண்ணில் விவாதங்கள் இடம்பெறவே செய்கின்றன.

முட்டை முதல் வந்ததா? அல்லது கோழி முதல் உயிரெடுத்ததா? என்ற பாணியில் அமைந்துள்ள இந்த விவாதங்கள்தான், சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பொதுமைகளை இன்னும் அடையாள அரசியலிலிருந்து மறைத்து வருகின்றன. போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக வெளியேற்றப்பட்டிருந்தால், இதிலுள்ள இராணுவக் காரணங்கள் நியாயமாக இருந்திருக்கும். மேலும், காட்டிக்கொடுக்குமளவுக்கு இப்போராட்டத்தில் முஸ்லிம்கள் அந்நியப்பட்டிருக்கலாமோ அல்லது ஒதுக்கப்பட்டிருக்கலாமோ என்றும் சிந்திக்க இடமிருக்கிறதே.

கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களின் எதிரொலிகள், வடக்கு முஸ்லிம்களை பழிவாங்கலுக்கு ஆளாக்காமலிருக்க, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள் என்ற விவாதம் ஆறுதலளிக்கிறதுதான். ஆனாலும், வடபுல முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு, நிபந்தனைகள், நடாத்தப்பட்ட முறைகள் எல்லாம் மாற்றுச் சமூகம் ஒன்றை நாடு கடத்தும் வடிவில் அமைந்தமைக்கு அன்றைய வரலாறுகள் சாட்சி. இதில், முஸ்லிம் தரப்புக்கு சிந்திப்பதற்கு சிறந்த விடயமும் இருக்கிறது. புலிகள் செய்த தவறுக்காக, மிதவாதத் தமிழ் தலைமைகளையும் வேண்டாத மாமியாரின் கண்ணோட்ட உறவில் காலம் கடத்தக் கூடாதென்பதே, அவ்விடயமாகும்.

பலவந்த வேளியேற்றம் தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல் அந்தஸ்த்தைப் பலவீனப்படுத்தும் என்ற தீட்சண்யத்துடனிருந்த தமிழ் தலைவர்கள், இதை எதிர்க்கத் துணிவின்றி மனச்சாட்சிகளால் விரோதித்தனர். இன்று நடந்திருப்பதும் இதுதான். அடைக்கலம் தேடி புத்தளம், குருநாகல், கம்பஹா, அனுராதபுரம் மாவட்டங்களில் குடியேறிய, இம்முஸ்லிம்கள், தேவையின் நிமித்தம் சிங்களத்தில் தேறியது மட்டுமன்றி, வீட்டு மொழியாக மட்டும் தமிழை மட்டுப்படுத்திக்கொண்டனர். இது, விரிந்த தமிழ் தேச மண்ணில் கலப்பு மொழிக் கட்டமைப்பை காண்பிக்கத் தவறவில்லை. வேற்று மொழி பேசுவது, வெறுப்புடன் பார்க்கப்படும் சூழல் அன்று இந்த மண்ணில் இருந்ததால்தான், இது சுட்டிக் காட்டப்படுகிறதே தவிர வேறு நோக்கம் எனக்கில்லை என்பதை வாசகர்கள் முதலில் புரியவேண்டும். அது மட்டுமல்ல, மொழியை மையப்படுத்திய வடக்கு, கிழக்கு விடுதலைப் போரில், மதங்கள் மற்றும் கலாசாரங்கள் கலப்பது ஒரு பொருட்டாகவும் கொள்ளப்படவில்லையே. பின்னர்தான் மத வேறுபாடுகளே வெளியேற்றத்தின் அக, புற பின்புலங்களாக இருந்தமை ஊகிக்கப்பட்டது. இன்று வரைக்கும் இந்த வடபுல முஸ்லிம்களின் சவால்கள் வேதனையளிக்கவே செய்கின்றன.

இப்பகுதியில் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவங்கள் எதிர்கொள்ளும் சில நெருக்கடிகளும் இந்தச் சவால்கள் சிலவற்றுடன் சார்ந்தவைதான். இதற்காக வாய் திறக்கும் தமிழ் தலைமைகளின் தோள்களூடாகத்தான் பிரிந்துபோன அரசியல் சந்தியில் மீண்டும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் சந்தித்து, மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளன. தென்னிலங்கையின் எல்லை மீறிய எழுச்சியால், அநாதையாகும் நிலைக்கு வந்துள்ள சிறுபான்மை அரசியல் தைரியமடைவதற்கு இந்த வரலாற்றுச் சந்தியில், நாம் சந்தித்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் வடபுல வெளியேற்றத்தில் நியாயம் கண்டு, ஒரு மொழிக்குள் இரு சமூகங்கள் என்ற நிலைப்பாட்டில், தமிழ் மொழி அரசியல் பயணிப்பதற்கு தயாராதல் அவசியம். வெளியேற்ற காலத்திலிருந்து வேறுபடத் தொடங்கிய, இந்த அரசியலின் வேற்றுமைகள், வெறுப்புக்களில்தான் பேரினவாதிகளின் பிரித்தாளும் தந்திரம் பலப்படுகிறது. இந்தப் பலப்படல்கள் தயாரித்த பல வியூகங்கள், சிறுபான்மையினர் சந்திக்க வேண்டிய வரலாற்றுச் சந்தியைத் தூரப்படுத்திக்கொண்டே செல்கின்றன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கள், வரலாற்றுச் சந்தியில் இணைய விரும்பும் சகலருக்கும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களை வழிநடாத்தும் அரசியல் தலைமைகளுக்கு காலக் கண்ணாடியாக சகலதையும் காட்டிக்கொண்டிருக்கிறது. தமிழரை முஸ்லிம்களிடமிருந்து பிரித்து, உளவுக்காகப் பயன்படுத்த வேண்டிய தேவை, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு இருந்திருக்கிறது. உளவுக்காக மட்டுமல்ல தமிழைப் பேசுகின்ற சமூகங்களின் ஒன்றிணைவு, தமிழ் தேசியத்தின் மிகப்பெரிய அடையாளம் என்பது, சிங்களத் தேசம் ஏற்றுக்கொண்டிருந்த கசப்பான உண்மையாகவும் இருந்தது. இதற்காகத்தான் இப்போராட்டத்தில் மதம் நுழைக்கப்பட்டு, சமூகங்களின் இணைவு மற்றும் பொதுமைகள் இடைவெளியாக்கப்பட்டிருக்கலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதியைத் தவிர சகல பதவிகளிலிலும் இருந்த ரணிலின் கருத்திலிருந்து இந்த ஊகத்துக்கே வர முடிகிறது. எனவே,தமிழ் மொழிக்கான போராட்டம், தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்தில் முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டு செல்வதை, ஏதோவொரு சக்தி அல்லது பல சக்திகள் விரும்பவில்லை என்பது மாத்திரம் ஊகிக்கப்படக் கூடிய உண்மை. இந்த உண்மைதான், இலங்கையில் மூன்றாவது தேசிய இனமாக முஸ்லிம்களை அடையாளப்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளர் ஷேகு இஸ்ஸதீனின் பார்வைதான், வடபுல முஸ்லிம்களின் பலவந்த ஒக்டோபர் வெளியேற்றம் சிங்களவர், தமிழர் போன்று முஸ்லிம்களையும் ஒரு தனித் தேசியமாக அடையாளப்படுத்திவிட்டது என்ற அரசியல் கருத்தை முதலாவதாக முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

கைவிடப்பட்ட வாழிடங்கள், கால் நடைகள், இழக்கப்பட்ட உடமைகள், காணாமலாக்கப்பட்ட இம்மக்களின் உறவுகள் இதுவரைக்கும் அரசியல் காரணங்களுக்காக, இம்மக்கள் இழந்த உறவுகள் எல்லாம் சகோதர தமிழ் தேசியம் எதிர்கொள்ளும் சாயலிலே உள்ளன. இழப்புக்கள் ஒன்றென்பதால் நிச்சயமாக வலிகளும் அதே ஒன்றாகவே இருக்கிறது. எனவேதான், ஒன்றித்தலில் இணையும் தேசியமாக நமது வலிகள், இழப்புக்கள் இருக்கட்டும்.

இல்லாவிட்டால் ஒருமொழிக்குள் இரு தனித்தனி சமூகங்கள் என்ற சிறுபான்மை அரசியல் வரலாற்றுச் சந்தி பிரிந்து செல்லட்டும்.