“கொரோனா வைரஸ் தொடர்பான உண்மையான தரவுகளை அரசு வெளிப்படுத்தவேண்டும். தரவுகளை மறைப்பதால் பாரிய அனர்த்தம் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  கொரோனா சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

“கொரோனாத் தொற்று கொத்தணியாக நாட்டில் பல பிரதேசங்களில் இருந்து பரவி வருகின்றது.

இவ்வாறான கொத்தணிகள் சமூக மட்டத்துக்குப் பரவும் அபாயம் இருக்கின்றது என அரச வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், அரசு அதை மறைத்து வருகின்றது.

கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய சில ஆலோசனைகளை கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் தெரிவித்து வந்தோம். ஆனால், அரசு அதனைநகைச்சுவைக்கு எடுத்துக்கொண்டு அரசியல் ரீதியில் விமர்சித்து வந்தனர்.

நாங்கள் அன்று தெரிவித்த விடயங்களை விமர்சித்த அரச தரப்பினர் தற்போது அதனை உணர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களின் காலதாமதத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

அரச தரப்பினர் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதை விட அரசியல் நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.

நாட்டில் மூன்றாவது அலையாக மீண்டும் தலைதூக்கி இருக்கும் கொரோனாத் தொற்று கொத்தணியாக வியாபித்து பல கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருக்கின்றது.

கொத்தணிகளின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர். இவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்து பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள காலதாமதம் ஏற்படுகின்றது.

இதனால் தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்கும் நிலையே இருக்கின்றது. அதேபோன்று பி.சி.ஆர். மாதிரிகள் பரிசோதனைக்காகக் குவிந்திருக்கின்றன எனவும் தெரியவருகின்றது. அதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனை இன்று வியாபாரமாக மாறி வருகின்றது" - என்றார்.