இலங்கையிலும், ஏனைய உலக நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் கொவிட் - 19 நோய்த் தொற்று உட்பட பல்வேறு இன்னல்களால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இஸ்லாத்தின் இறுதி தூதுர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் நினைவு கூரப்படுகின்றது.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள “மீலாதுன் நபி” செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம்களைப் பொறுத்தவரை, வாழ்வின் எத்தகைய நிலைமைகளிலும் அல்லாஹ்வினால் அருளப்பட்ட அல்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை என்பவற்றிலிருந்தே உரிய வழிகாட்டுதல்களை பெறுகின்றனர்.

அந்தவகையில், எல்லா விதமான நெருக்கடிகளுக்கும் மனவலிமையுடன் முகம் கொடுத்து இக்கட்டான நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்கான திராணியை உலகளாவிய முஸ்லிம் சமூதாயம் பெற்றிருப்பது இறைவன் வழங்கிய பெரும் பேறாக அமைந்துள்ளது.