முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்  பதியூதீனை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை   நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார, முஜீபுர் ரஹ்மான், புத்திக்க பத்திரண உள்ளிட்டவர்களும் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென கோரியிருந்தனர்.

ஏற்கனவே, ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகவும் அதேவிதமாக ரிஷாட் பதியுதீனையும் அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது, சுகாதார தரப்பினர் மற்றும் சுகாதார அமைச்சரின் ஆலோசனை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்துள்ளார்.