72 மணித்தியாலத்தில் உண்மைகள் தெரிய வரும்! மக்களை வீடுகளில் இருக்குமாறு எச்சரிக்கை


விதுஷன்
 

கம்பஹா, மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். எனினும் அவருக்கு கொரோனா தொற்றியமை தொடர்பில் இன்னமும் தகவல் கண்டுபிடிக்கப்படவில்லை.

இன்றைய தினம் கிடைக்கவுள்ள PCR பரிசோதனை அறிக்கையின் மூலம் கொரோனா தொற்றியமைக்கான காரணம் கண்டுபிடிக்க முடியும் என தான் நம்புவதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் வெளியிட்ட தகவலுக்கமைய, அங்கு பணியாற்றிய மேலும் சிலருக்கு இருமல் உட்பட நோய் அறிகுறிகள் காணப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண்ணுடன் அருகில் செயற்பட்ட 150 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று காலை கிடைக்கவுள்ளது. அத்துடன் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 1400 ஊழியர்களுக்கு இன்று மற்றும் நாளைய தினம் PCR பரிசோதனை மேற்றகொள்ளப்படவுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களை சந்திப்பதற்காக நாட்டின் பல பகுதியில் இருந்து பலர் அங்கு வருகை தந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய தற்போது மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையில் கொரோனா தொற்றியுள்ளதா என்பதனை அறிய எதிர்வரும் 72 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழில் அல்லது மிகவும் அவசியமான நடவடிக்கைக்காக மாத்திரம் வீட்டை விட்டு வெளியே வருமாறும், முகக் கவசம் அணிவது கட்டாயம் எனவும் ஒரு மீற்றர் தூர இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post