நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபையினால் வழங்கப்படும் சம்பளத்தைக் கொண்டு "மாதம் ஒரு வேலைத்திட்டம்" எனும் நிகழ்ச்சி திட்டத்தை  ஆரம்பம் செய்திருக்கின்றேன்.  அதன் பிரகாரம் எனது முதல் சம்பளத்தினை அல்- மினன் பாடசாலைக்கு அர்ப்பணித்து இருக்கின்றேன். மேலும் அல் - மினன்  பாடசாலைக்கு நாங்கள் உதவிகள் செய்வது இது முதல் தடவை அல்ல. ஸம்ஸ் நண்பர்கள் வட்டம் 2004 அமைப்பின் தலைவராக இருந்து பாடசாலையை அழகுபடுத்துவதற்காக பூச்சட்டிகளையும் இந்தப் பாடசாலைக்காக  நாங்கள் வழங்கி வைத்திருக்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ.எம்.ஷிபான் தெரிவித்தார்.

மருதமுனை அல் - மினன் பாடசாலையில் மிக  நீண்டநாள் தேவையாக இருந்து வந்த துவிச்சக்கர வண்டி தரிப்பிட வசதியினை பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ. முபாரக் அவர்களினதும் , கல்லூரி அதிபர் அவர்களினது வேண்டுகோளின் பேரில் தனது முதல் மாத சம்பளத்தில் செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தமையை நிறைவேற்றி வைத்து அந்த சேவையை மக்களிடம் இன்று (11) வெள்ளிக்கிழமை  கையளித்து விட்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,  எனக்கு வாக்களித்த எனது வட்டார மக்கள் எந்தத் தேவையும் இன்றி எனக்காக வாக்களித்தவர்கள். அவர்கள் எனக்கு வாக்களிப்பதற்காக  பணமோ பொருளோ என்னிடம் கேட்டதுமில்லை.நான் கொடுத்ததும் இல்லை. சேவை நோக்கம் கருதி வாக்களித்த மக்களின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு எமது பிரதேசத்தில்  பொதுப்படையான தேவைகளை இனங்கண்டு செயலாற்ற வேண்டிய கடமைப்பாடு எனக்கு உள்ளது.  

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் "மாதம் ஒரு வேலைத்திட்டம்" நிகழ்ச்சிநிரலின் கீழ் பல வேலைத்திட்டங்களை செய்ய காத்திருக்கிறேன் என்றார். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் ,மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ,மருதமுனை  ஐந்தாம் வட்டாரத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.