மலையக மக்களின் அபிலாசைகள் பிரிவினைவாதமாக புரிந்துகொள்ளப்படக் கூடாது அடையாளத்துவ அரசியலை பாதுகாத்தலிலும் ஆறுமுகன் தொண்டமான் நாட்டம்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மறைந்த ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை

பாராளுமன்றத்தில் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் மீதான அனுதாபப் பிரேரணையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்டு அவர் பற்றி உரையாற்றுகின்ற போது பிரதானமாக இந்திய வம்சாவளி மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றி எங்களை விட்டுப் பிரிந்து சென்றுள்ள யுகப் புருசர் ஒருவருக்கு இங்கு அனுதாபம் தெரிவிக்கின்றேன். 

இந்த நாட்டின் ஓர் அங்கமான மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஆறுமுகன் தொண்டமானும், நானும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே சந்தர்ப்பத்தில் தான் இந்தப் பாராளுமன்றத்தில் பிரவேசித்தோம். அதிலிருந்து இதுவரை நாங்கள் இடையறாது தொடர்ச்சியாக இந்த சபையில் சிறந்த முறையில் பணியாற்றியிருக்கின்றோம். அவர் ஒரு சிறந்த அரசியல் ஞானியாக காணப்பட்டார். அவரின் அரசியல் தீர்மானங்கள் மூலம் பலரை ஈர்த்திருந்தார். அவரது அபார திறமைகளை நான் நெடுகிலும் அவதானித்து வந்திருக்கின்றேன். அவரது பாட்டனார் சௌமிய மூர்த்தி தொண்டமான் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதில் ஒரு தலை சிறந்த கொள்கை வகுப்பாளராகவும் செயல் வீரராகவும் திகழ்ந்திருக்கின்றார். 

மறைந்த ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க அனைத்து அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளார். அவரை எதிர்கட்சியில் பார்ப்பது மிகவும் க~;டமாகும். ஆனால், கடந்த நல்லாட்சியில் அவர் எதிர்கட்சியில் அமர்ந்திருந்தார். கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரச்சினைகள் எழும் சந்தர்ப்பத்தில் மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதில் அவர் அயராது ஈடுபட்டிருந்தார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மெதுவாக வேலை செய்யும் யுக்தியை அவர் காண்பித்தார். இறுதியில் அந்த முயற்சி; அவர் எதிர்பார்த்ததை நிறைவேற்றி வைத்தது. தொழிற்சங்க அரசியலில் அவர் தமது முதிர்ச்சியை பலவாறாக வெளிப்படுத்தியிருந்தார். பேரம் பேசி விடயங்களை சாதித்துக்கொள்வதில் அவர் சிறந்து விளங்கினார். 

பெருந்தலைவர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான், எம்.எச்.எம். அஸ்ரப்  ஆகியோரை அடுத்து அதே வழியில் நாங்கள் பின்தொடர்ந்தோம். எங்களது கட்சிகளை இனவாதக் கட்சிகள் எனக் கூறுபவர்களும் இருக்கின்றனர். ஒருபோது முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு “இனவாத அரசியல் விரும்பத்தகாதது. சிறுபான்மை சமூகங்களுடைய இனவாத அரசியல் பாரதூரமாகாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், பெரும்பான்மையினரிடத்தில் ஏற்படக் கூடிய இனவாதம் பெருந்தேசியவாதம் என்ற போர்வையில் உருவெடுக்கும் அபாயம் உள்ளது” எனக் கூறியுள்ளார். 

இந்தச் சபையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_டைய அரசியலை பற்றி வேறுபடுத்திக் கூறப்பட்டுள்ளது. அது தோட்டத் தொழிலாளரின் தனித்துவ அரசியலாக மட்டும் அடையாளப்படுத்தப்பட்டு வந்தது. அது பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தவறான புரிதல் இருந்து வந்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியலை பொதுவான தமிழர்களின் அரசியலிருந்து வேறுபடுத்தி நோக்க எத்தனிக்கப்பட்டது. அதில் நான் முரண்படுகின்றேன்.

1976ஆம் ஆண்டு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி தோற்றம் பெற்றபோது மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அதில் ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். ஆனால், மலையக மக்களின் அடையாளத்துவ அரசியலை பேணிப்பாதுகாத்ததில் நாட்டமுள்ளவராக மட்டுமல்லாது, பிரிவினைவாதத்திலிருந்து தனது மலையக மக்களை பாதுகாத்துக் கொள்வதிலும் அவர் கவனமாக நடந்திருக்கின்றார்.

எனது நண்பர் ஆறுமுகம் தொண்டமான் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான தமிழ்செல்வனை கிளிநொச்சியில் சந்தித்தது சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்பட்டது. அத்துடன் அவர் வடக்கிலும், தெற்கிலும் இருந்த தமிழ் கட்சிகள் ஓர் ஐக்கிய முன்னணியாக தோற்றம் பெற வேண்டும் என்பதிலும் கரிசனைக் கொண்டிருந்தார். தமது மக்களுக்கு எது தேவை என்பதில் அவர் குறியாக இருந்திருக்கின்றார். அதேவேளையில், தனது மக்களின் அபிலாகள் பிரிவினைவாதமாக தவறாக புரிந்துகொள்ளப்படக் கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்து வந்தார்.  

தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களை பாதிக்கக் கூடிய நெருக்கடிகள் தோன்றிய போதெல்லாம் அவற்றை அவர் உரிய முறையில் கையாண்டு வந்துள்ளார். மறைந்த நண்பர் ஆறுமுகத் தொண்டமான் தனது இளவயதில் எங்களை விட்டுப் பிரிந்து சென்றிருந்தாலும், அவரின் மறைவின் பின்னணியில் அவரது திறமைகளைப் பற்றி பின்னோக்கிப் பார்க்கின்ற போது மிகவும் துணிகரமாக தனது மக்களின் உய்வுக்காகவும், ஈடேற்றத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அவர் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் எங்கள் கண்முன் நிழலாடுகின்றன.  

தோட்டத்துறைமார் சங்கங்களோடு கூட்டு ஒப்பந்தங்களை செய்துகொண்ட போதிலும் சரி, ஆட்சி தலைவர்களோடு தமது அமைச்சுப் பொறுப்புக்கள் சம்பந்தமான விவகாரங்களில் வாதிட்ட  போதிலும் சரி, ஆட்சியாளர்கள் அவரது பூர்வீக இல்லமான வெவண்டன் தோட்டத்தில் மக்களுக்குப் பகிர வேண்டிய பொருட்களை ஒழித்து வைத்திருக்கிறார் எனக்கூறி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரை அனுப்பிச் சோதனைகளை மேற்கொண்ட போதிலும் சரி, அவருக்கு எதிராக இம்சிக்கின்ற நோக்கில் அரசியல் ரீதியாக எந்தவிதமாக நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அவை எவற்றிற்குமே அஞ்சாமல் தனது மக்கள் சார்பில் துணிகரமாக நின்று போராடக் கூடியவராக அவர் இருந்திருக்கின்றார். 

தன்னுடைய பாட்டனாரான இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் தானைத் தளபதி என்று அனைவரும் பெருமையாகப் பேசுகின்ற மறைந்த சௌமிய மூர்;த்தி தொண்டமானின் வழி நின்று பல சாதனைகளை புரிந்த இளந் தலைவரொருவரை நாங்கள்; இழந்துவிட்டோம் என்று பெரும் துயருறுகின்றோம். 

சௌமிய மூர்த்தி தொண்டமானுடைய சிலை முன்னாள் பாராளுமன்றம் மற்றும் தற்போதைய ஜனாதிபதி செயலக வளாகத்தில் இந்நாட்டின் பெருந் தேசிய தலைவர்களான பொன்னம்பலம் இராமநாதன், டி.எஸ்.சேனாநாயக்க, எஸ்.எபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க ஆகியோரின் சிலைகளுக்கு மத்தியில் அமையப்பபெற்றுள்ளமை தொண்டமான் சந்ததி என்பது இந்த நாட்டின் தேசிய வீரர்களின் பட்டியலில் அடையாளச் சின்னமாக அடங்கியிருப்பதை நினைவூட்டுகின்றன.  

எனவே, அந்த நீண்ட பாரம்பரியத்தின் அடுத்த வாரிசாக அவரது அரசியல் இடைவெளியை நிரப்புவதற்கு முன்வந்துள்ள அன்னாரின் மகன் ஜீவன் தொண்டமானுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குறிப்பாக, அவரது பாரியார் இராஜலக்ஸ்மி தொண்டமான், சகோதரிகள் விஜயலக்ஸ்மி, கோதை நாச்சியா ஆகியோர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்கின்ற பரந்து விரிந்த குடும்பம் உட்பட அனைவருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை இந்த உயர் சபையில் சமர்பித்துக் கொள்கின்றேன்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK