எம்.எம்.ஜபீர்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி முஸர்ரப் முதுநபீன் நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள ஒவ்வெரு கிராமங்களும் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள வீரத்திடல், 4ஆம் கிராமம், 5ஆம் கிராமம், 6ஆம் கிராமம், 12ஆம் கிராமம், மத்தியமுகாம் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்களித்த மக்களிடம் பாராளுமன்ற ஆசனத்தில் அமர்வதற்கு முன்பாக நேரில் சென்று நன்றி தெரிவிக்க வருகைதந்த சட்டத்தரணி முஸர்ரப் முதுநபீனிற்கு நாவிதன்வெளி பிரதேச மக்களால் பெரும்வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது கிராம மக்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் நான் அறிந்தவன் என்றவகையில் பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர் நாவிதன்வெளி பிரதேசத்தில் ஒரு அலுவலகத்தினை திறந்து மாதத்தில் ஒரு முறையேனும் வருகை தந்து இக்கிராம மக்களின் குறைபாடுகளையும் தேவைகளையும் அறிந்து தீர்த்துவைக்க முடியுமான நடவடிக்கையை மேற்கொள்ளுவேன் எனவும் நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி முஸர்ரப் முதுநபீன் மக்களிடம் உறுதியளித்தார்.