நிந்தவூர் பிரதேச சபையின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் கட்சியினதும் நிந்தவூர் மத்திய குழுவினதும் தீர்மானத்திற்கமைவாக, முன்மாதிரியான முறையில், ஏனைய வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையில், தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்து விடைபெற்றுக் கொண்டுள்ளனர்.
மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.மஜீத், எம்.எம்.சம்சுதீன், ஏ.றிபானா ஆகிய மூவருமே, நேற்று (25) நடைபெற்ற சபை அமர்வின் போது, தமது இராஜினாமா குறித்த தகவலைத் தெரிவித்து, சக உறுப்பினர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டனர்.
தமது கட்சியின் கோரிக்கையின்படி, கட்சிக் கட்டுப்பாட்டுடன், கட்சியின் ஏனைய மூன்று வேட்பாளர்களுக்கு உறுப்பினராகும் சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையிலேயே, தாம் உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்வதாக அவர்கள் சபை அமர்வில் தெரிவித்தனர்.
எதிர்காலத்திலும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் மக்கள் பணிக்காகவும் தங்களை அர்ப்பணித்து செயற்படவிருப்பதாக, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர் தலைமையில் நடந்த சபை அமர்வில், உபதவிசாளர் வை.எல்.சுலைமா லெப்பை உட்பட ஏனைய உறுப்பினர்களும், விடைபெற்றுச் செல்லும் மூன்று உறுப்பினர்களது சேவைகளைப் பாராட்டி உரையாற்றினர்.
இதற்கு முன்னரும் பெண் உறுப்பினர் ஒருவர், கட்சியினதும் மத்திய குழுவினதும் தீர்மானத்திற்கமைய, ஏனைய வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பத்தினை வழங்கி, முன்மாதிரியாக இராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.