அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..! - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Friday, July 31, 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை..!
தியாகத் திருநாளின் படிப்பினைகளில், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இலக்குகள் வெற்றிகொள்ளப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இறைதூதர் இப்றாஹிம் நபியின் தியாகத்தை, இறைவன் முழுச் சமூகத்திற்கும் மார்க்கமாக்கியுள்ளதாக இஸ்லாம் போதிக்கின்றது. அல்லாஹ்வின் கட்டளைக்கு தமது அருமை மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இறைதூதர் இப்றாஹிம் நபியின் துணிச்சல் மிக்க செயல்களில், எமக்குப் பல படிப்பினைகள் உள்ளன.
சத்தியத்துக்கு எதிரான சக்திகளுக்கு அடிபணியாத இலட்சியத்தையே அவரின் துணிச்சல்கள் காட்டுகின்றன. தீங்குகளை எதிர்த்துப் பணியாற்றி, வெற்றி கண்ட இறைதூதர், இறுதியில் சத்தியத்தை நிலைக்கச் செய்தார். இதேபோன்றுதான், இன்று முஸ்லிம்களும் ஒரு சத்திய இலட்சியத்தைச் சாதிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
சாத்வீகச் சமூகத்தவரான முஸ்லிம்களை, பயங்கரவாதிகளாகக் காட்ட முனையும் சக்திகள் தோற்க்கடிக்கப்பட வேண்டும். இதில் எமக்கு இரண்டு மனநிலைகள் கிடையாது. சகோதரத்துவத்தைப் போதிக்கும் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற எங்களையே, இந்த இனவாத சக்திகள் பயங்கரவாதிகள் என்கின்றன. அன்பு, கருணை, மனிதாபிமானத்துக்கு கட்டுண்ட முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக, இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இதை நிரூபித்து வருகின்றனர். எனவே, அரசியலுக்காக எம்மை நோக்கி நீட்டப்படும் கை விலங்குகளை நாம் தகர்த்தெறிய வேண்டும். இதற்காக எந்தத் தியாகங்களைச் செய்யவும் நாம் தயார்.
கொரோனாவின் கொடூரத்தால் எமது வணக்க வழிபாடுகளும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் நாம் வாழ நேரிட்டுள்ளது. இதனால் புனித ஹஜ்ஜூக் கடமைக்குச் செல்லவும் இயலாது போயுள்ளது. ஏற்கனவே, இதற்காக எண்ணம் வைத்தோர், இந்தப் புனிதப் பயணத்துக்காகத் தயார்படுத்தி வைத்த பணத்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தொழில் இழந்து,  வருமானம் முடங்கிய நிலையில், வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்போருக்கு வழங்குவதும் பெரும் பாக்கியமாகவே கருதப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் எண்ணங்களை அறிந்தவனாக உள்ளான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment