தமிழ், முஸ்லிம் மக்கள் பற்றி தொடர்ந்தும் அவதூறாக கருத்து வெளியிட்டு வரும் விமல் வீரவன்ச இன்று அந்த மக்களிடமே சென்று வாக்குப்பிச்சை கோரும் பரிதாபகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் -கலாநிதி வி.ஜனகன்..!

தமிழ், முஸ்லிம் மக்கள் பற்றி தொடர்ந்தும் அவதூறாக கருத்து வெளியிட்டு வரும் விமல் வீரவன்ச இன்று அந்த மக்களிடமே சென்று வாக்குப்பிச்சை கோரும் பரிதாபகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். என்று ஜக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் மனோகணேசனுடன் இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிட்டார். விமல் வீரவன்சவின் இந்த திடீர் மாற்றமும், தமிழ் பேசும் மக்கள் மீதான அக்கறையையும் பார்க்கும் போது நகைப்புக்குரிய விடயமாக தோன்றுகின்றது.
சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமலேயே தங்களால் ஆட்சியமைக்க முடியும் என்று மேடைகளில் மார்த்தட்டிக் கொண்ட விமல் வீரவன்ச இன்று கோவில்களுக்கு பயணித்து தன்னை நல்ல மனிதன் போல் காட்டுவதற்காக புதிய நாடகமொன்றை அரகேற்றி வருகின்றார்.
கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களின் முதுகெழும்பாக செயற்படுகின்ற வர்த்தகர்களை அழைத்து அவர்களிடம் வாக்குப்பிச்சை கேட்கும் அளவிற்கு அவருடை நிலைமை சென்றிருப்பதை பார்க்கும் போது மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது.
அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கிரிக்கட் துறை என்பது இலங்கைக்கு பெருமை சேர்க்கும் ஒரு கௌரவமான துறையாக இருக்கின்ற போதும், தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சுவீகரிப்பதற்காக, கிரிக்கட்டில் தமிழர்களின் அடையாளமாக விளங்குகின்ற முத்தையா முரளிதரனை வைத்து விமல் வீரவன்ச தன்னுடைய அரசியல் நாடகத்தை தொடங்கியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
கடந்த பல வருடங்களாக தமிழர்களுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் பாராளுமன்றத்திலும், ஏனைய கூட்டங்களிலும் அவர்களுக்கு எதிராக தனது கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார்.
முத்தையா முரளிதரனின் சகோதரர் மொட்டுச் சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதால் இந்த விடயத்தை வைத்துக் கொண்டு கிரிக்கட் விளையாட்டுத் துறையில் நட்சத்திரமாக விளங்கும், முத்தையா முரளிதரனை அரசியல் தேவைக்காக பயன்படுத்துவது எந்தவிதத்திலும் நியாயமற்ற விடயமாகும்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் பேசும் வர்த்தகர்களை அழைத்து அவர்களின் ஊடாக இந்த தருணத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற நினைப்பது ஏற்றுக் கொள்ள கூடிய விடயம் அல்ல.
முத்தையா முரளிதரன் போன்ற நட்சத்திர கிரிக்கட் வீரர்களை இவ்வாறான அரசியல் தளங்களில் விமல் வீரவன்ச போன்றவர்கள் பயன்படுத்துவது ஏற்புடையதாக இல்லை என்பதுடன், அந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ் மக்களின் ஆதரவு அவசியம் என்று மொட்டு அணியினர் கருதியிருந்தால் தமிழ் வேட்பாளர்களை கொழும்பு மாவட்டத்தில் நியமித்திருக்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டு மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்க தயார் என்று அவர்கள் கூறும் கருத்தை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் பகுத்தறிய முடியாதவர்கள் அல்ல.
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினரும் தமிழ் பேசும் மக்களை புறக்கணிக்கும் வகையில் ஏனோ தானோ என்று ஒரு சில தமிழ் பேசும் வேட்பாளர்களை நியமித்துள்ளது.
அதுமாத்திரமன்றி தமிழ் பேசும் மக்களிடம் வாக்குகளை பெறத் தகுதியானவர்களையே வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும், எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு சரியாக தமிழ் மொழியில் பேசுவதற்கு இயலாத நிலைமை உள்ளது. இன்னும் ஒருவருக்கு அவர் என்ன கருத்தை வெளியிடுகிறார் என்று அவருக்கே தெரியாது.
இவ்வாறான வேட்பாளர்களை அந்த கட்சியினர் நியமித்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் மறைமுகமாக என்ன கூற வருகிறார்கள் என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, பிரதமர் மஹிந்த தரப்பினர் நேரடியாகவே தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள். ஐக்கிய தேசிய கட்சித் தரப்பினர் பெயரளவில் இரண்டு வேட்பாளர்களை நியமித்து விட்டு மறைமுகமாக தமது கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதால் தங்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்பதை தமிழ் பேசும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.
மக்கள் தங்களின் தீர்மானத்தில் உறுதியாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில், மஹிந்த அணியினர் அவர்கள் மத்தியில் சென்று தங்களுக்கு வாக்களித்தால் நன்மைகளை வழங்குவோம் என்று கூறுவது மிரட்டும் தோரணையாகவே கருதவேண்டி இருக்கிறது.
இவ்வாறு மக்களை அச்சுறுத்தும் மொட்டு அணியினருக்கு ஏன் கொழும்பு மாவட்டத்தில் ஒரு தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதியை தேர்தலில் போட்டியிடச் செய்ய முடியாமல் போனது.
மொட்டு அணியினரின் எண்ணத்தில் களவு இருக்கின்றது ஆனால் நியாயமான கொள்கை இல்லை. அவ்வாறிருக்கையில் தமிழ் பேசும் மக்கள் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கலாநிதி வி.ஜனகன் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பினார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK