இன்றுள்ள அரசியல் வாதிகளில் மு.மா.ச.உ ஜவாத் மிகவும் வேறுபட்டவர். அவரின் தோற்றம் சிங்கத்தை நேரடியாக பார்ப்பது போன்றிருக்கும். அவரின் பேச்சு சிங்கத்தின் கர்ஜனையாகவே இருக்கும். தோற்றத்திலும், பேச்சிலும் மாத்திரமல்ல வீரத்திலும் அப்படியே இருப்பார். இவரிடம் பல நல்ல பண்புகளுள்ளன. அதில் மிக முக்கியமானதே சுயநலம் பார்க்காது நீதிக்காக எதனையும் இழக்க துணிவதுதான்.
மறைந்த தலைவர் அஷ்ரபோடு மிகவும் நெருங்கிப் பழகியவர்களில் இவரும் ஒருவர். அவரது மேடைப் பேச்சுக்கள் எப்போதும் மறைந்த தலைவரை விழித்ததாகவே இருக்கும். இது அவர் மறைந்த தலைவர் மீது கொண்டுள்ள அன்பை அறிந்துகொள்ள போதுமான சான்றுகளில் ஒன்று. அந்த மாமனிதர் மரணித்ததும், அவரின் குடும்பத்திற்கு ஆதரவு கூட வழங்காது, அரசியல் தலைமைத்துவ சண்டை ஆரம்பமானது. அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்ற சிந்தனையில் இருந்தவர்கள் போன்றே சிலர் தங்களது செயற்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
அந்த தலைமைத்துவ சண்டையில், எப் பக்கம் நீதியுள்ளது என்பதை சிந்திப்பதற்கு அப்பால், மாமனிதரின் குடும்பத்திற்கு ஆதரவு தேவைப்பட்டது. அன்று மாமனிதர் அஷ்ரபோடு இருந்த பலரும் அவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வரவில்லை. அதனை உணர்ந்த மு.மா.ச.உ ஜவாத் மறைந்த தலைவரின் குடும்பத்தின் பக்கம் நின்றார். அன்று பேரியல் அஷ்ரப் அணியை விட ஹக்கீம் அணியே பலமிக்கதாக இருந்தமை வெளிப்படையான உண்மை. மு.மா.ச.உ ஜவாத் ஒன்றும் அரசியல் அறியாதவருமல்ல. அவ்வாறானால் எதற்காக அப் பக்கம் நின்றார் என கேள்வி எழுப்பினால், வேறெதற்காகவுமல்ல, மாமனிதர் அஷ்ரபின் குடும்பத்திற்காகவே நின்றார் என்பதை தவிர வேறு பதில் இருக்க முடியாது.
அன்று அவர் ஹக்கீம் அணியின் பக்கம் நின்றிருந்தால், இன்று ஹரீஸின் இடத்தில் மு.மா.ச.உ ஜவாதே இருந்திருப்பார். கல்முனையின் காவலன் என்ற பெயரையும் பெற்றிருப்பார். இன்னும் பல பதவிகளையும், பட்டங்களையும் பெற்றிருப்பார். இருந்தும் அது அவருடைய சிந்தனையில் இருந்திருக்கவில்லை. தான் நேசித்தவர் மரணித்ததும், அவருடைய குடும்பத்துக்கு, தான் ஆதரவு வழங்க வேண்டும் என்பதாகவே அவருடைய சிந்தனை இருந்தது.
தன் சுயநலத்தையும் விட அஷ்ரப் எனும் மாமனிதரின் குடும்பமே அவருக்கு பெரிதாக தெரிந்தது. இன்றுவரை அவர் மாமனிதர் அஷ்ரபின் குடும்பத்தோடு சீரிய உறவையும் பேணுகிறார். தான் நேசித்த ஒருவருக்கு செய்ய வேண்டிய கடமையை செவ்வனே செய்தும் வருகிறார். இதுவல்லவா மனிதப்பண்பு. மாமனிதர் அஷ்ரபின் குடும்பத்தை கௌரவிப்பதில், பாதுகாப்பதில் மு.கா எனும் கட்சியின் பங்கு என்ன எனக் கேட்டால் எதுவுமல்ல என்றே கூற முடியும். தனது தந்தையின் கட்சியை தாங்க வேண்டிய மாமனிதர் அஷ்ரபின் மகன், இன்று மு.காவினர், தனது தந்தையின் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என கூறும் நிலையில் உள்ளார். மு.மா.ச.உ ஜவாத் எங்கே உள்ளார் என்பதை இவ்விடயத்தை வைத்து ஒப்பிட்டு நோக்கும் ஒருவரால் அறிய முடியும்.
இதனை நான் இச் சந்தர்ப்பத்தில் கூற காரணம், " தான் நேசித்த ஒருவருக்காக எதனையும் இழக்க துணிந்த " அவரது சுயநலமற்ற பண்பை வெளிப்படுத்துவதற்கேயாகும். இந்த பண்பே அரசியல்வாதிகளுக்கு மிக முக்கியமானது. தாங்கள் நேசித்து, நம்பி வாக்களித்த மக்களை பதவி, பட்டங்களுக்காக ஏலமிட்டு, ஏப்படும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் மு.மா.ச.உ ஜவாத் வேறுபட்டவர். ஒரு குடும்பத்துக்காக பதவி, பட்டங்களை இழக்க துணிந்தவர், ஒரு சமூகத்துக்காக யாது செய்வார் என்பதை சொல்லவா வேண்டும்.
சிந்திப்போம்... செயற்படுவோம்..
எம் மீதான அடிமை சங்கிலிகளை உடைத்தெறிவோம்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK