அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் ஐ.ம.சக்தி, மு.கா மற்றும் அ.இ.ம.கா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சிலரால் முன் வைக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையின் பின்னால் அடித்து போடப்பட்டுள்ள சில கொடிய நச்சு பாம்புகள் உயிர்பெற முயற்சிக்கின்றமை தெளிவானது. இவ்வாறானவர்களின் சித்து விளையாட்டுக்களை எல்லாம் மக்களும் அறியாமலில்லை.
இவ் இணைவு தொடர்பில் அ.இ.ம.கா ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது. " மு.காவானது கோத்தா அரசை பலப்படுத்திய யாரையும் திகாமடுல்லவில் பாராளுமன்ற வேட்பாளராக பெயரிடக் கூடாது " என்பதே அந் நிபந்தனை. இந் நிபந்தனையில் என்ன தவறுள்ளது. கோத்தா அரசை பலப்படுத்திய, தனது மூன்று பா.உறுப்பினர்களையும், தங்களது கட்சியையிலிருந்து தூக்கி, வீசிவிட்டு, இவ்வாறு நெஞ்சை நிமிர்த்தி, நிபந்தனைகளை முன் வைப்பதில் எந்த தவறுமில்லை. இது எமது சமூகத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக தெரியவில்லையா?
சரி விடயத்துக்கு வருவோம், " கடந்த ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சியினரும் ( மு.கா, அ.இ.ம.கா ) ஒரே மேடையில் அமர்ந்தீர்கள் தானே, இப்போது ஏன் நிபந்தனை " என சிலர் கேட்கின்றனர். இது ஒரு முதிர்ச்சியற்ற வாதம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் மற்றும் ரணில் ஆகிய இருவர் மாத்திரமே அ.இ.ம.காவின் ஆதரவை கோரியிருந்தனர். இவ்விருவரில் ஒருவரை தான் அ.இ.ம.கா ஆதரிக்க முடியும். இவ் இரு அணியிலும் கோத்தாவை பலப்படுத்தியோர் ஏராளமாகவே இருந்தனர். இந் நிலையில் அன்று இந் நிபந்தனையை முன் வைப்பது பொருத்தமாகாது. அது சிறுபிள்ளை தனமான அரசியலாகவே அனைவராலும் நோக்கப்பட்டிருக்கும்.
அன்று அ.இ.ம.கா இக் காரணத்தை கூறி, சஜிதோடு முரண்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? எந்த பயனும் யாருக்கும் கிடைத்திருக்காது. எதிரணியின் வெற்றியை மேலும் மெருகூட்டியிருக்கும். இத் தேர்தலில், அ.இ.ம.கா, தனது நிபந்தனையை முன் வைத்துள்ளது. இதற்கு கட்சிகள் உடன்படாவிட்டால் தனித்து களமிறங்கும். இது இந் நிபந்தனையை விதிக்க தகுந்த ஒரு நேரம். சந்தர்ப்ப அறிவு மிகவும் அவாசியமானது. சந்தர்ப்பத்திற்கு ஏற்றாப் போல் கட்சிதமாக காயை நகர்த்தியுள்ளது மயில்.
ஜனாதிபதி தேர்தலில் இவ் இரு கட்சியினரும் இணைந்து பலப்படுத்தியது சஜிதையே! பாராளுமன்ற தேர்தல் என்பது அவ்வாறானதல்ல. இவ் இரு கட்சியை சேர்ந்தோரையும் தனிப்பட்ட ரீதியில் பலப்படுத்தும் தேர்தல் அது. அம்பாறையில் அ.இ.ம.காவானது ஐ.ம.சவோடு இணைந்தால், அ.இ.ம.கா வாக்குகளும் மு.காவை சேர்ந்த ஒருவரை பாராளுமன்றம் அனுப்ப வழி வகுக்கும். இதனை பாரிய நியாயங்கள் கொண்டு நிறுவ தேவையில்லை. சாதாரணமாகவே ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு விடயம். அதனால் தான் மு.காவினரும் அ.இ.ம.காவினரையும் இணைத்துக்கொள்ள இத்தனை பாடுபட்டார்கள்.
கடந்த கோத்தாவின் ஆட்சியை ஹரீஸ் மற்றும் பைஸால் காசிம் ஆகியோர் ஆதரித்து செயற்பட்டமை வெளிப்படையான ஒரு விடயம். இவர்கள் இருவரையும் அம்பாறையில் மு.காவானது களமிறக்க வேண்டிய நிர்ப்பத்தில் உள்ளது. இவ்விருவரையும் களமிறக்கினால் மக்களின் பாரிய எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். இது அ.இ.ம.காவுக்கு சாதகமாக மாறிவிடும். இவ் இருவரோடும் அ.இ.ம.காவையும் பிணைத்துவிட்டால், இவ் இருவர் மீதான விமர்சனங்கள் மறைந்துவிடும். இதனை வைத்து விமர்சிப்பவர்கள் அ.இ.ம.காவையும் சேர்த்தே விமர்சிப்பார்கள். இந்த கணக்கை அ.இ.ம.கா நன்கே அறியும். மு.காவினர் எவ் விடயத்தில் மக்களை முட்டாளாக்க முயற்சித்தார்களோ, அதனையே அ.இ.ம.கா, தனது நிபந்தனையாக்கியுள்ளது. அ.இ.ம.காவானது மக்கள் முட்டாளாகாது தடுத்துள்ளது எனலாம். இதனை அ.இ.ம.கா அரசியலின் நேர்மையின் வெளிப்பாடாகவே நோக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மு.கா மற்றும் அ.இ.ம.கா ஆகிய இரு கட்சிகளும் சஜிதை ஆதரித்திருந்தன. இவ் விரு கட்சிகளும் ஒருபோதும் கொள்கை அடிப்படையில் ஒன்றிணையவில்லை. ஒரே மேடையில் அமர்வதால் இரு கட்சிகளும் ஒன்றிணைந்துவிட்டதாக கூறுவது, நம்புவது முட்டாள் தனமானது.
ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK