நடக்காத தேர்தலுக்கு 94 கோடி ரூபா செலவு

 

றிப்தி அலி

நாட்டின் பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி, நடாத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சுமார் 94 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இதில், 70 கோடி 10 இலட்சத்து 10 ஆயிரத்து 814 ரூபா தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்தினாலும், 24 கோடி 38 இலட்சத்து 72 ஆயிரத்து 978 ரூபா மற்றும் 38 சதம் மாவட்ட தேர்தல் அலுவலகங்களினாலும் செலளிக்கப்பட்டுள்ளன.

"உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பொறுப்பான மாவட்ட அதிகாரிகளை நியமிக்கும்   வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட 2022.12.21ஆம் திகதி முதல் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலேயே இந்த செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தேர்தல் திணைக்களத்தின் தகவல் அதிகாரியான மேலதிக தேர்தல் ஆணையாளர் பீ.பி.சி குலரத்ன தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலிலேயே இந்த விடயம் தெரியவந்தது.

வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தினால் பல்வேறு  நிபந்தனைகளுடன் 330 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி முதற் கட்டமாக கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே, ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தலுக்காக பாரிய தொகைப் பணம் செலவளிக்கப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262ஆம் அத்தியாயம்) 4(1)ஆம் பிரிவின் கீழ் 25 மாவட்டங்களுக்கான தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்கள் ஆகியோரை நியமிப்பதற்காக 2311/26ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் 2022.12.21ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பணிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய கடந்த ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வேட்புமனு கோரப்பட்ட இத்தேர்தலில் 80 ஆயிரத்து 672 பேர் போட்டியிட்டுகின்றனர்.

இதில், சுமார் 3,000 வேட்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பொது நிர்வாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தேர்தல் கடந்த மார்ச் 09ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான நிதி திறைசேரியிடமிருந்து கிடைக்காமையினால் ஏப்ரல் 25ஆம் திகதி வரை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 38 (3)ஆம் பிரிவின் கீழ் 25 மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்களினால் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட 2327/08ஆம் முதல் 2327/32ஆம் வரையான இலக்கங்களைக் கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் குறித்த தேர்தல் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு தேவையான நிதியை திறைசேரியிலிருந்து விடுவிக்க முடியாதென்ற விடயம் அறிவிக்கப்பட்டமையினாலேயே இந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தேர்தலுக்கு தேவையான நிதியினை வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடந்த மார்ச் 3ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறான சூழ்நிலையிலேயே, குறித்த தேர்தலுக்கு தேவையான நிதியை திறைசேரியிலிருந்து விடுவிக்க முடியாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட செலவுகளில் அதிகூடிய 18 கோடி 33 இலட்சத்து 55 ஆயிரத்து 377 ரூபா மற்றும் 50 சதம் அச்சிடல் பணிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 15 கோடி 45 இலட்சத்து 67 ஆயிரத்து 934 ரூபா மற்றும் 98 சதம் கொள்வனவுச் செலவாக காணப்படுகின்றது.

இதேவேளை, மாவட்ட தேர்தல் அலுவலகங்களினால் மேலதிக நேரம் மற்றும் விடுமுறை சம்பளம்; என்ற விடயத்திற்கே அதிக நிதி செலவளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 25 மாவட்டத் தேர்தல் அலுவலகங்களினால் 8 கோடி 86 இலட்சத்து 19 ஆயிரத்து 690 ரூபா 29 சதம் செலவளிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த ஜனவரி 31ஆம் திகதி முதல் ஒக்டோபர் 19ஆம் திகதி வரையான காலப் பகுதியில் எட்டு கட்டங்களாக திறைசேரியினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு  57.681 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 67 சதவீதமான நிதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னரே திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 10 கோடி 63 இலட்சத்து 89 ஆயிரத்து 365 ரூபா மற்றும் 55 சதம் அரசாங்க அச்சக் கூட்டுத்தாபனத்திற்கும், 2 கோடி 48 இலட்சத்து 67 ஆயிரத்து 478 ரூபா மற்றும் 31 சதம் பொலிஸ் திணைக்களத்திற்கும் இந்த தேர்தல் பணிகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் செலவளிக்கப்பட்டுள்ளது.


இத்தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால பெறப்பட்ட சேவைகளுக்காக 1 கோடி 87 இலட்சத்து 99 ஆயிரத்து 717 ரூபா மற்றும் 77 சதம் இன்னும் செலுத்த வேண்டியுள்ளது.

"மேற்படி கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு தேவையான நிதியினை வழங்குமாறு திறைசேரியிடம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் கோரியுள்ளோம்" என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

துரதிஷ்டவசம், குறித்த கோரிக்கைகான பதில் இன்னும் திறைசேரியிடமிருந்து கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை, இவ்வாறு பெருந் தொகைப் பணம் செலவளிக்கப்பட்டு  நடைபெறாதுள்ள இந்த தேர்தலை இரத்து செய்வதற்கான தீர்மானமொன்று பிரதமர் தலைமையில் கடந்த செப்டம்பர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் ஒருபோதும் குறித்த தேர்தலை இரத்துச் செய்ய முடியாது எனவும் தெரிவித்தன. இதனால் குறித்த தீர்மானம் தொடர்பில் எந்தவொரு அடுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது. எனினும், "இத்தேர்தல் இடைநிறுத்தப்படவில்லை. மீண்டுமொரு திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை (22) பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதேவேளை, அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலையும், மாகாண சபை தேர்தலையும் நடத்த 2 ஆயிரம் கோடி ரூபா தேவைப்படும் என தேர்தல் ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளது. அத்துடன் 2025 இல் பாராளுமன்றத் தேர்தலை நடத்த  ஆயிரத்து நூறு கோடி ரூபா செலவாகும் என தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது.

எனினும், எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட மதிப்பீட்டு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய கடந்த புதன்கிழமை (22) ஜனாதிபதி ஊடக நிலையத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பல கோடி ரூபா நிதி செலவளிக்கப்பட்ட பின்னரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்படுவது பிழையான செயற்பாடாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இத்தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பாராளுமன்றமே இதற்கு பொறுப்பாகும். எனினும்  நிதி அமைச்சரான தனிநபரரொருவரினால் இத்தேர்தலுக்கு தொடர்ச்சியாக தடை விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என அவர் குற்றஞ்சாட்டினார்.


"இந்த தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ஆளுங் கட்சியின் நோக்கத்திற்கமைய 30க்கு மேற்பட்ட தடைகள் பிறப்பிக்கப்பட்டு ஒத்திவைக்கபட்டுள்ளது" என ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.  

"நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ள நிலையில் பல கோடி ரூபா செலவளிக்கப்பட்டும் தேர்தல் நடத்தப்படாமைக்கு நிதி அமைச்சரோ, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரோ, அரசாங்கமோ, அல்லது அதிகாரிகளோ பொறுப்புக் கூற வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு தற்போது மீண்டுள்ளமையினாலேயே பல நலன்புரித் திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அது போன்று அரச உத்தியோகத்தர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், "உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று வரை நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமைக்கான முழுப் பொறுப்பினையும் நிதி அமைச்சின் செயலாளரே ஏற்க வேண்டும்" என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK