மருத்துவர்களின் அலட்சியமா ஹம்தியின் மரணத்துக்கான காரணம்?

 



"சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது எனது மகன் ஹம்திக்கு நடத்த அநியாயம் இனி யாருக்கும் நடைபெறக் கூடாது. ஹம்தியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட வலது சிறுநீரகம் எங்கே என்று இதுவரை யாருக்கும் தெரியாது? இது எப்படி மாயமாகியது? ஹம்திக்கு நீதி கோரி எனது இறுதி மூச்சு வரை போராடுவேன்".

கொழும்பு– 13, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வாழும் நான்கு பிள்ளைகளின் தந்தையான 57 வயதான எம்.என்.எம். பஸ்லினுடைய அழுகுரலே இதுவாகும்.

பஸ்லினின் இறுதிக் குழந்தையே ஹம்தியாகும். இவர் பிறந்து ஒன்பதாவது மாதத்திலேயே இவரின் வயிற்றில் கட்டி உள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது இவருடைய இடதுபக்க சிறுநீரகம் செயழிலந்துள்ள விடயம் தெரியவந்தது.

அதாவது, இடது பக்க சிறுநீரகம் 9 சதவீதமும் வலது பக்க சிறுநீரகம் 91 சதவீதமும் செயற்பாட்டில் இருப்பதாக பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சத்திரசிகிச்சை

இதனால் வலதுபக்க சிறுநீரகத்தினை அகற்றிவிட்டால் இடதுபக்க சிறுநீரகத்துடன் ஹம்தியினால் வாழ முடியும் என கொழும்பு  சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் மலிக் சமரசிங்க தலைமையிலான வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் டிசம்பர் 24ஆம் திகதி ஹம்திக்கு வலது சிறுநீரகத்தினை அகற்றும் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் நவீன் விஜயகோன் தலைமையிலான குழுவினாரால் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், சத்திரசிகிச்சை இடம்பெற்று சில நாட்கள்; கழிந்த நிலையிலும் ஹம்தியினால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. இதனால், மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் ஹம்தியின் இரண்டு சிறுநீரகங்களும் சத்திரசிகிச்சையின் போது அகற்றப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வைத்திய நிபுணர்களான மலிக் சமரசிங்க, நவீன் விஜயகோன் மற்றும் ஜெரார்ட் பெர்ணான்டோ உள்ளிட்ட வைத்திய குழுவினர் ஹம்தியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

 ஸ்கேன் அறிக்கை


அது மாத்திரமல்லாமல், இதற்கான முழுத் தவறினையும் ஏற்றுக்கொண்ட வைத்தியர்கள், ஹம்திக்கு நான்கு மாதங்களில் புதிய சிறுநீகரமொன்றினை ஏற்பாடு செய்வதாகவும் பெற்றோரிடம் உறுதியளித்தனர்.

இதன் பின்னர் வீடு வந்த ஹம்தியினை மேற்குறிப்பிட்ட வைத்தியர்கள் ஒருபோதும் தொடர்புகொள்ளவுமில்லை, புதிய சிறுநீரகமொன்றை பெற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையினையும் முன்னெடுத்திருக்கவுமில்லை என ஹம்தியின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பில் வைத்திய நிபுணர் மலிக் சமரசிங்கவினை ஹம்தியின் தந்தை தனியார் வைத்தியசாலையொன்றில் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடிய போது விரைவில் தீர்வுபெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் ஹம்தியின் உடல் நலம் நாளுக்கு நாள் மோசமடைந்ததால் மீண்டும் கடந்த மே 23ஆம் திகதி சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போதே, ஹம்திக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்திய நிபுணர் நவீன் விஜயகோன் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற விடயம் ஹம்தியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

எதிர்ப்பலைகள்

ஹம்திக்கு வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் சிகிச்சை எந்தவித பலனுமின்றி அவர் கடந்த ஜுலை 27ஆம் திகதி உயிரிழந்தார்.

இவ்வாறான நிலையில், ஹம்திக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவுகள் வைரலாகின. அதுமாத்திரமல்லாமல், ஹம்தியின் இரண்டு சிறுநீகரமும் அகற்றப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் ஏற்பட்டாளர் ரவி குமுதேஷ் கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாடொன்றின் போது கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.


Histopathology அறிக்கை


இதேவேளை, ஹம்தியின் ஜனாஸா கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டதை அடுத்து மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஹம்திக்கு நீதிகோரி இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியரான நவீனை கைது செய்யுமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

வைத்தியசாலை பணிப்பாளரின் அறிக்கை

இதேவேளை, செயழிழந்த சிறுநீரகத்துடன் மற்றைய சிறுநீரகம் பிறப்பிலேயே ஓட்டியிருந்தமையினாலேயே இரு சிறுநீரகங்களும் செயழிலந்திருக்கும் என நான் நம்புகின்றேன்.

இதன் காரணமாகவே செயழிலந்த சிறுநீரகத்தினை அகற்றும் போது மற்றைய சிறுநீரகமும் அகற்றப்பட்டுள்ளது என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜயசூரிய தெரிவித்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்று ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், இந்த விடயம் தொடர்பில் சிறுவனின் பெற்றோரிடமிருந்து எந்தவித முறைப்பாடும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை எனவும் பணிப்பாளர் கூறினார்.

குறித்த சத்திரசிகிச்சையினை மேற்கொண்ட வைத்தியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இருப்பினும், குறித்த சிறுவனுக்கு சிகிச்சைகளை மேற்கொண்ட வைத்தியர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிருமி உட்சென்றமையினாலேயே இந்த சிறுவன் உயிரிழந்துள்ள விடயம் தற்போது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், இம்மரணம் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என வைத்தியர் விஜயசூரிய மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழு கடந்த புதன்கிழமை (02) தற்போது வெளிநாட்டிலுள்ள வைத்திய நிபுணர் நவீன் விஜயகோனின் வாக்குமூலத்தினை இணைய வழியினூடாக பதிவுசெய்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

"இந்த விவகாரத்தை வெளியே கசியவிட வேண்டாம், தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று மருத்துவ நிபுணர்கள் வழங்கிய வாக்குறுதியை நம்பியமையினாலே குறித்த சம்பவம் தொடர்பில் எந்தவித முறைப்பாட்டினையும் மேற்கொள்ளவில்லை" என ஹம்தியின் பெற்றோர் தெரிவித்தனர்.

மருத்துவ பரிசோதனைகள்

இதேவேளை, ஹம்தியின் சிறுநீரகங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கவில்லை என்பதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட பல மருத்துவ பரிசோதனைகளின் அறிக்கைள் சான்றுகளாக இருக்கின்றன.

அது மாத்திரமல்லாமல், சத்திர சிகிச்சையின் போது மேற்கொள்ளப்பட்ட  intra operative ultra sound scan பரிசோதனையில் வலது சிறுநீரகம் இருப்பதாகவும் வைத்தியசாலையின் மருத்துவ அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சத்திரசிகிச்சையின் பின்னர்  மேற்கொள்ளப்பட்ட histopathologyயின் போது அதை பெற்றுக்கொண்ட வைத்தியர், "அனுப்பப்பட்ட மாதிரியோடு ஒரு திடமான பகுதி சேர்ந்திருப்பதாகவும், பரிசோதனையின் போது அதில் குறிப்பிடப்படாத சிறுநீரக மாதிரி" (unremarkable renal tissue on other end) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற விசாரணை

இதேவேளை, ஹம்தியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, குறித்த மரணம் தொடர்பில் பொரளை பொலிஸார் சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்தனர். இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணைகளை 8ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையில் வைத்தியரும், சட்டத்தரணியுமான வை.எல்.எம். யூசுப் மற்றும் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு சட்டத்தரணிகள் ஹம்திக்கு சார்பாகமன்றில் ஆஜராகினர்.

சட்ட மருத்துவரின் அதிகாரியின் அறிக்கை





கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி எம்.என். ரூஹுல் ஹக்கினால் வழங்கப்பட்ட இக்குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையை பொரளை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், குழந்தை ஹம்தி ஒற்றை சிறுநீரகத்துடன் இருந்துள்ளதாகவும் அது தற்செயலாக நடந்த விபத்தை ஒத்த சம்பவத்தால் அகற்றப்பட்டமையால் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் மன்றில் பரவலான விமர்சனத்துக்கு உள்ளானது. குழந்தை ஹம்தி சார்பில் நேற்று மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் பிரேத பரிசோதனை அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் நீதிவானின் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

சிறு பிள்ளை வைத்திய நிபுணரின் கருத்து

இதேவேளை, "வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறுவது போன்ற பிறப்பிலேயே சிறுவனின் சிறுநீரகங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருப்பதற்கான (Horse Shoe Kidney) வாய்ப்புகள் மிகக் குறைவாகும்" என பெயர் குறிப்பிட விரும்பாத சிறு பிள்ளை வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

அப்படி சிறுநீரகம் ஓட்டியிருக்கும் விடயம் நிச்சயமாக சத்திரசிகிச்சைக்கு முன்னர் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது தெரிந்திருக்கும். எனினும் தெரியாது போவதற்கும் மிக அரிதாக சாத்தியம் உண்டு. அப்படி தெரியவில்லை என்றாலும், சத்திரசிகிச்சை செய்யும் போது கூட, அதை கண்டுபிடித்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

"அதை விடுத்து முழு சிறுநீரகத்தினையும் முழுமையாக வெட்டிவீச இயலாது.  அப்படி செய்தால்  இது ஒரு தெளிவான மருத்துவ அலட்சியமாகும் (Medical Negligence) என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதன் உண்மையை அறிய வேண்டும் என்றால் கட்டாயம் பக்கசார்பற்ற விசாரணை அவசியம்" சிறு பிள்ளை வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

சிறுவன் ஹம்திக்கு நடத்த அநீதி தொடர்பில் அவரது தாய் அப்துல் காதர் பாத்திமா றிசானா கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 2020.04.11ஆம் திகதி ஹம்தி, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் எனக்கு நான்காவது பிள்ளையாக  பிறந்தார். அவருக்கு பிறப்பில் எந்த நோய் நிலைமையும் இருக்கவில்லை.

எனினும், ஒன்பதாவது மாதத்தில் ஹம்திக்கு வயிற்றில் கட்டியொன்று ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்த நேரத்தில் ஹம்தியின் சிறுநீரகத்தில் பிரச்சினை உள்ள விடயமும் தெரியவந்தது.

இது தொடர்பில் பல பரிசோதனைகள் செய்த போது இடது பக்க சிறுநீரகம் செயலழிந்த விடயம் தெரியவந்தது. இதனால் குறித்த சிறுநீரகத்தினை ஓரமாக்க வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

குறித்த சிறுநீரகத்தினை அகற்றாவிட்டால் எதிர்காலத்தில் இவர் வளரும் போது பாரிய பிரச்சினைகள் வரும் என வைத்தியர்கள் அறிவுறுத்தினார்கள். பல பரிசோதனைகளின் பின்னரே அவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்தனர்.

நோய் நிருணய அட்டை



இந்த சிறுநீரகத்தினை அகற்றினாலும், வலது பக்க சிறுநீரகத்துடன் அவர் வாழ முடியும். புதிதாக சிறுநீரகம் எதுவும் வைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் வைத்தியர்கள் கூறினார்கள்.

இதனையடுத்து சத்திர சிகிச்சை மூலம் வலது பக்க சிறுநீரகத்தினை அகற்ற நாங்கள் சம்மதித்தோம். எனினும் பல தடவைகள் குறித்த சத்திரசிகிச்சைக்கான தினம் மாற்றப்பட்டது. இவ்வாறான நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் திகதியே சத்திர சிகிச்சை இடம்பெற்றது.

இதன் பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் ஹம்தி அனுமதிக்கப்பட்டார். இதன்போது அங்குள்ள தாதியிடம் இவரது நலன் தொடர்பில் நான் கேட்ட போது சிறுநீர் கழிக்காத விடயத்தினை அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து வைத்தியர்கள் ஹம்தி தொடர்பில் பதற்றத்துடன் பேசிக் கொண்டதையும் என்னால் அவதானிக்க முடிந்தது. அச்சமயத்தில் மகனுக்கு எதுவும் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளதை நான் உணர்ந்துகொண்டேன்.

இதேவேளை, ஹம்திக்கு உடனடியாக டையலைசிஸ் செய்ய வேண்டும் என்றார்கள். இது வழமையாக சிறுவர்களுக்கு செய்வதில்லை. ஆனால் ஹம்தியின் தற்போதைய நிலைமையில் அதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்றமையினால் அதற்கும் நாங்கள் சம்மதித்தோம்.

சுமார் மூன்று நாட்களின் பின்னர் நான்கு வைத்தியர்கள், என்னையும் கணவரையும் அழைத்து பேசினார்கள். இதன்போது தவறுதலாக ஹம்தியின் இரண்டு சிறுநீரகமும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பிழையினை ஏற்றுக்கொண்ட அவர்கள் ஹம்திக்கு புதிய சிறுநீரகமொன்றை அடுத்த நான்கு மாதங்களில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். பின்னர் ஹம்தியினை வீட்டுக்கு கொண்டு வந்து தனியறையொன்றில் இவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் சுமார் மூன்று மாதங்கள் சிறப்பாக செய்து வந்தோம்.

எனினும், தீடிரென முச்சுத் திணறல் ஏற்பட்டமையினால் நுரையீரலில் நீர் உள்ள விடயம் தெரிய வந்தது. அச்சமயத்தில் நீரினை அகற்றினோம். பின்னர் மீண்டும் கடந்த மே மாதம் காய்ச்சல் ஏற்பட்ட போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உடலில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதித்து மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்றோம். வைத்தியசாலையில் இருந்த போது ஒரு நாளை சுமார் 30 – 40 தடவைகள் வயிற்றோட்டம் ஏற்படும். இதனால் அவர் கடுமையாக பலவீனமடைந்திருந்தார்.

எப்படியும் இவருடைய உயிரைக் காப்பற்ற வேண்டும் வைத்தியசாலை நிர்வாகம் கூறிய அனைத்து விடயத்திற்கும் நாம் சம்மதித்தோம். எனினும், வைத்தியர்களின் பொடுபோக்கினால் அவருடைய உயிரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

சிறுநீரகம் பெற்றுத் தருவதாக உறுதியளித்த வைத்தியர்கள் இறுதி வரை அதனை செய்யவில்லை. அவர்கள் எங்களை ஒருபோதும் தொடர்புகொள்ளாமல் அவர்கள் வழங்கிய வாக்குறுதியினை மீறிவிட்டார்.   வைத்தியர்களின் வார்த்தைகளை கடுமையாக நம்பினோம். எனினும், அவர்கள் எம்மை ஏமாற்றி விட்டனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK