தலைகீழாகத் தொங்கும் விஞ்ஞானத்தின் செருக்கு!

 


-சுஐப் எம்.காசிம்-

அண்ணாந்து பார்க்கும் அடுக்கு மாடிகள் அடியோடு வீழ்ந்து பெரும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது துருக்கி, சிரிய பூகம்பம். ஐரோப்பாவையே அதிர வைத்துள்ளது இந்த இயற்கைப் பேரிடி. மனிதனின் உச்சக்கட்ட அறிவியல் வளர்ச்சிக்கு இயற்கை விட்டிருக்கும் சவால் இது. நிலத்துக்கு அடியில் ஆழப்பதிக்கப்பட்ட "கொங்கிரீட்" அத்திவாரங்களைத் தகர்த்து, வானுயர்ந்த கட்டடங்களை தரைமட்டமாக்கியுள்ள இந்தப் பூகம்பம் சிலருக்கு ஆத்மீக ஞாபகங்களையும் உயிரூட்டியுள்ளது. மனிதனின் இயல்பே இப்படித்தான். உச்ச அளவில் முயற்சித்து முடியாவிட்டால் ஆண்டவனின் தலையில் திணித்துவிடுவது.

நித்திரையிலிருந்தவர்கள் இப்படி நிர்க்கதியாகுவர் என யார் நினைத்தது? எல்லாவற்றையும் எதிர்வுகூறும் விஞ்ஞானம் இதையும் எதிர்வுகூறி எச்சரித்திருக்கலாம். இதனால்தான், இன்றைய நவீன உலகு விஞ்ஞானமா? மெய்ஞ்ஞானமா? என்ற ஊசலாட்டத்தில் உள்ளது.  இந்த அனர்த்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் உண்மைத் தொகையை எந்தக் கணினியும் கணிக்க இயலாது. தேடும் பணிகள், மீட்புப்பணிகளாலும் இந்த உண்மையைக் கொண்டுவர இயலாது. இந்நிலையே நாளாந்தம் நகர்கிறது. சடலங்களைத் தேடுவதா? குற்றுயிராகக் கிடப்போரைக் கரையேற்றுவதா? அல்லது அங்கங்களையிழந்து அவதிப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதா? இந்த அவலங்களே அங்கு நீடிக்கின்றன.

ஐந்து மாதங்களுக்கு அவசரகால நிலையைப் பிரகடனம் செய்துள்ள துருக்கி அரசாங்கம் சர்வதேசத்திடம் கையேந்துகிறது. சிரியாவிலும் இதுதான் நிலை. உள்நாட்டுப் போருக்கு 2011இலிருந்து முகங்கொடுக்கும் இம்மக்கள், இயற்கையின் நியதியாலும் நிர்க்கதியாகி உள்ளனர். மருத்துவம், உணவு, இருப்பிடம், வாழ்வாதாரம் உள்ளிட்ட உதவிகள் ஒரே நேரத்தில் தேவைப்படுகிறது. விநியோகப்பாதைகள் இடிபாடுகளால் மூடிக்கிடக்கின்றன. வான்மார்க்கங்களால் வருமளவுக்கு காலநிலையும் கை தருவதாக இல்லை. இதனால், அவசரமாக உதவிகள் வந்தும் அடைந்த ஆதாயம் எதுவும் இல்லை. அவல நிலைமைகள் மேலும் மோசமாவதற்கு விநியோக வழிகள் தடைப்பட்டிருப்பது பிரதானமாகியுள்ளது.

ஐரோப்பாவின் நோயாளி என அழைக்கப்படுகிறது “துருக்கி”. ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் பெறாதுள்ள ஒரே ஐரோப்பிய நாடு என்பதால்தான் துருக்கிக்கு இந்தப் பெயர். ஆயினும், சர்வதேச அளவில் சிறந்த இராஜதந்திர உறவுகளைப் பேணுகிறது. இதனால், நாலாபுறங்களிலும் உதவி, ஒத்தாசைகள் துருக்கிக்கு வருகின்றன.

கட்டட இடிபாடுகளால் எழும்பும் புழுதிகள், திடீரெனப் பற்றிக்கொள்ளும் தீ, பாரிய தீப்பிழம்புகளிலிருந்து வெளியாகும் புகை என்பவற்றால், மீட்புப் பணியாளர்கள் உணர்விழந்து மயங்குவதையும் திடீரெனக் காயப்படுவதையும் கள நிலவரங்கள் காட்டுகின்றன.

இந்த அவலத்தின் கொடூரங்கள் மனங்களிலிருந்து மறையும் வரைக்கும் மானிடவர்க்கத்துக்கு தூக்கம் ஏது? அவ்வாறு தூங்குவதானால், விஞ்ஞானத்தின் உத்தரவு வேண்டும், இல்லாவிடின் மெய்ஞ்ஞானத்தின் பாதுகாப்பு அவசியம். இன்றைய நிலவரங்களால் மக்களின் மனங்களை இந்தப் பீதிகளே பீடிக்கின்றன. ஊழிக்காலம் குறித்து ஆகமங்கள், வேதங்களில் எச்சரிக்கப்பட்ட காட்சிகளையா சிரியாவிலும், துருக்கியிலும் காண்கிறோம். இவ்வாறான அழிவுகள்தான், மதங்களின் இருப்பைப் பாதுகாக்கிறதோ? இவ்வாறு எண்ணுமளவில் மானிடத்தின் பதறல்கள், மனித உணர்வுகளைப் பதப்படுத்துகின்றன. விஞ்ஞானத்தின் செருக்குத்தனத்தை தலைகீழாகத் தொங்கவிடுவதும் இவ்வாறான இயற்கைத் தாண்டவங்களே!


News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK