அ.இ.ம.கா தலைவர் : துரோகிகளை துரத்தி, தனியனாக களத்தில்...!


இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது அரசியல் வாதிகளில் அதிகமானோர் திரைப்பட நடிகர்களையும் மிஞ்சிய நடிகர்கள். மக்களை ஏமாற்றும் தந்திரங்களில் கற்றுத் தேறியவர்கள். இன்று ஒன்று சொல்வார்கள், நாளை வேறொன்று செய்வார்கள். நேற்று சொன்னது என்னவோவாக இருக்கும், இன்று தலை கீழாக செய்வார்கள். இவை அனைத்தையும் மக்கள் சிறிதும் அறியாத வகையில் செய்வதே அவர்கள் திறமை எனலாம்.

உலகில் எந்த நாட்டிலும் நடக்காத ஒரு அநியாயம் இலங்கை முஸ்லிம்களுக்கு நடந்தேறியது. முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டன. இந்த அநியாயத்தின் விளைவால் இன்று வரை உலக முஸ்லிம் நாடுகள் இலங்கையை வேற்று கண் கொண்டே பார்க்கின்றன. இருந்த போதிலும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தவிர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு கூஜாவே தூக்கினர். இது யாவரும் அறிந்ததும், ஏற்றுக்கொள்ள கூடியதும், அருவருக்கத்தக்கதுமான ஒரு உண்மை.

இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏசிய ஏச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது அதனையெல்லாம் மறந்துவிட்டார்கள் என்றே எண்ண தோன்றுகிறது. மு.காவின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை தவிர, ஏனைய மூவரையும் மு.கா, தன்னோடு வைத்துள்ளது. அவர்கள் எவ்வித சிறு கூச்சமுமின்றி தீவிரமாக தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுமுள்ளனர். அமைச்சை பொறுப்பெடுத்துள்ள ஹாபிஸ் நஸீர் மாத்திரமே அக் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். ஏனைய மூவரையும் விட அமைச்சை பெறுப்பெடுத்தது மாத்திரமே ஹாபிஸ் நஸீர் செய்த பிழை எனலாம். இச் செய்தியின் மூலம் மு.காவும், அதன் தலைமையும் அமைச்சை பெறுப்பெடுத்ததை மாத்திரமே தவறாக கருதியுள்ளது என்பதை எம்மால் அறிய முடியும். இதன் மறுபொருளாக ஜனாஸா எரிப்பெல்லாம் தங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை இல்லை, அமைச்சை பொறுப்பெடுத்ததையே ஜீரணிக்க இயலாதது என்பதை மு.கா தலைவர் வெளிப்படுத்தியுள்ளார். இவ்விரண்டில் தீவிரமான, தண்டிக்கத்தக்க பிரச்சினை எது? தனது கட்சியில் மு.காவின் தலைவர் மாத்திரமே முழு அமைச்சராக இருக்க வேண்டும் என ஹக்கீம் செயற்படுவதான குற்றச் சாட்டை, இது மேலும் உறுதி செய்வதாக அமைகிறது.

அ.இ.ம.காவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசை ஆதரித்திருந்தனர். இம் மூவரையும் அ.இ.ம.கா, தனது கட்சியிலிருந்து  உடனே தூக்கி வீசியிருந்தது. இவ் விடயத்தில் அ.இ.ம.கா மக்களை ஏமாற்ற நாடகமாடவில்லை. இவர்களை தூக்கி வீசினால், அவர்கள் கட்சிக்கு சவாலாக அமைவார்கள் என்று சிறிதும் யோசிக்கவில்லை. நடந்தேறிய சமூக துரோகத்தில், தனக்கு பங்கில்லை என்பதை அ.இ.ம.கா, தனது செயற்பாட்டினூடாக வெளிப்படுத்தியுள்ளது. சமூக துரோகத்திலிருந்து தன்னை விடுவித்துள்ளது. இத் தேர்தலில் இந்த மூன்று பாராளுமன்ற  உறுப்பினர்களையும் எதிர்த்து அ.இ.ம.காவும், அதன் தலைமையும் அரசியல் களம் கண்டுள்ளது. அ.இ.ம.காவானது எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்த்தே இந்த தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதனை சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலான ஒரு தேர்தலாக குறிப்பிட்டாலும் தவறாகாது. இம் மாபெரும் உண்மையை மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு கட்சிக்கென்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால், கட்சி வேலைகளை முன்னெடுப்பது இலகுவானது. அதற்காக சமூக துரோகிகளால் கட்சியை வளர்க்க நினைப்பதும், வளரும் என கணக்கிடுவதும் மிக இழிவானது. அந்த இழி செயலை அ.இ.ம.காவோ, அதன் தலைவரோ செய்யவில்லை. சமூக துரோகிகளை கட்சியை விட்டு உண்மையாகவே துரத்தி, தனியனாக அ.இ.ம.காவின் தலைவர் இத் தேர்தலை எதிர்கொள்கிறார். இதுவே ஆளுமை. இதுவே மக்களை ஏமாற்றாத நேர்மையான அரசியல் பயணம். முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதே மக்கள் ஆவா! மக்களின் அவா எதுவோ, அதனை செய்ததால் தனித்து, தனியாக தேர்தலை சந்திக்கின்றார். நாம் யாரை ஆதரிப்பது எமது எண்ணங்களை செய்தவர்களையா, ஏமாற்றியவர்களையா? இதனை மக்கள் சரியாக உணர்ந்து, எதிர்வரும் தேர்தலில் துரோகிகளுக்கும், அவர்களை அரவணைக்கும் மு.கா போன்ற கட்சிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்.

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK