இத்தனை சிறிய தேர்தல் இவ்வளவு முக்கியமாவது ஏன்?

சுஐப் எம்.காசிம்-

நாட்டின் அரசியல் நிலவரங்கள் தேர்தலொன்றுக்கு தயாராகி வருவதையே புலப்படுத்துகிறது. 

புதுவருடத்தில் (2023) ஏதாவதொரு தேர்தலை எதிர்கொண்டேயாக வேண்டும்.  இவ்வாறு எதிர்கொள்ள நேரும் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்வது? இதுதான் கட்சிகளுக்குள்ள சிக்கல். பொருளாதாரம் அடியோடு வீழ்ந்துள்ள நிலையில், வாக்களிக்கும் விருப்புக்கள் மக்களிடம் இருக்குமா?

இதனால் விருப்புக்களை ஏற்படுத்தும் வியூகங்கள், பிரச்சாரங்களையே கட்சிகள் சிந்திக்கின்றன. ஜனாதிபதி  மற்றும் பொதுத் தேர்தலில் வகுக்கும் வியூகங்கள் உள்ளூராட்சித் தேர்தலுக்கு உதவுமா? இல்லை ஊர்ப் பிரச்சினையை உசுப்பேற்றுவதா? உள்ளூராட்சித் தேர்தலுக்கான களச் சாத்தியங்கள் தென்படுவதால், சுயேச்சைக் குழுக்கள் கூட உஷாரடையும் சூழலிது.

சமூகம், உரிமை மற்றும் இருப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் தேர்தலில்லை உள்ளூராட்சி. பாரிய கூட்டணிகள் அமைத்து எதிரிகளை  வீழ்த்துமளவுக்கு முக்கியமானதும் இல்லைதான் இத்தேர்தல். இந்தளவு இலட்சணமுள்ள இத்தேர்தலைத்தான் நடத்துமாறு எதிரணிகளும், இதற்கேற்ற சூழலில்லை என அரச அணிகளும் அடம்பிடிக்கின்றன. 

உள்ளூராட்சி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு, எதிரணிகள் வழக்கும் தாக்கல் செய்துள்ளது. ஜனவரி 18 இல்தான் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. இதனால், எதை எதிர்வு கூறுவதெனத் தெரியாத குழப்பமே சில வாரங்களாக விஸ்வரூபம் எடுக்கிறது. 21 ஆவது திருத்தம் நிறைவேறி ஆணைக்குழுக்களிடம்  அதிகாரம் வந்துள்ளதால், புஞ்சிஹேவாவின் அறிக்கைகளை வைத்துத்தான் அதிக ஆரூடங்கள் வெளியாகின்றன. 

நிதியில்லை, நேரமில்லை மற்றும் பணவீக்கம் எனக் கூறப்படும் வியாக்கியானங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கிய நிதி உள்ளதாக  புஞ்சிஹேவா பதிலளித்திருக்கிறார். மார்ச் 10க்கு முன்னர் தேர்தல், 20க்குள் வெற்றியீட்டியோர் விபரம் என்றும் அறிவித்துவிட்டார் புஞ்சிஹேவா. இவ்வளவும் நடந்தும் சிலருக்கு சந்தேகம். பலவீனமான நேரத்தில் பந்தயத்துக்கு துணியுமா அரசு. மலையேறுவது போன்ற ஒரு பலப்பரீட்சைதான் இது. சறுக்கினால் சவக்குழி. சாதித்தால் வெற்றிக்கொடி. எல்லாத் தரப்புக்கும் இதுதான் நிலை. ஆனாலும், எதிரணிகள் எதைப்பற்றியும் சிந்திப்பதாயில்லை. ஏறினாலே வெற்றிப்படிதான் எனக்குதிக்கிறது.

கட்சிகளின் உட்கட்டமைப்புக்களைப் பரீட்சிக்கும் தேர்தலாக இது இருக்கப் போவதுமில்லை. ஆட்சிக்கு ஆரூடம் கூறப்போகும் தேர்தலாகவே நடக்கப் போகும் தேர்தல் இருக்கும். ஒருவேளை அதிகமாக எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி தேர்தலாக இருந்தால் முஸ்லிம் தலைமைகள் என்ன செய்யும்? பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று முஸ்லிம் தலைமைகள் உள்ளன. எதைச் சொல்லி முஸ்லிம்களை இத்தலைமைகள் ஒன்றுசேர்க்கும். 

தெவட்டக்கஹ பள்ளிவாசலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி பிரார்த்தனை நடந்த பின்னணியோடு, தென்னிலங்கை முஸ்லிம்களின் தேடலும் தெரிவும் பெரிதாக மாற்றமுறாது. வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்களும் பட்டதெல்லாம் போதும், தொட்டதையே தொடர்வோம் என்றெண்ணுகின்றனர். பெரும்பான்மைச் சமூகத்துடன் பொருந்திப்போக முயலுமளவுக்கு, தமிழ் சமூகத்துடன் புரிந்துபோகும் போக்குகள் முஸ்லிம்களிடம் குறைவு தான். காரணம் களச் சண்டைகளா? 

வடக்கு, கிழக்கில் ஒரே மொழியைப் பேசும் இரண்டு சமூகங்களும் ஒரு தாய் பிள்ளைகள்தானா? அவ்வாறானால் தாய், பிள்ளைச் சண்டைகள் தண்ணீரில் எழுத்து என்பார்களே! இதுவோ, கல்லறைச் சுவரில் எழுதிய கல்வெட்டுக்களாக உள்ளதே! எதுவானாலும் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுமானால், இந்தப் பகைகளை மேலும் கூர்மையாக்கும் பிரச்சாரங்கள் தமிழ், முஸ்லிம் தரப்பு மேடைகளில் மேடையேறக் கூடாது.

நமது சமூகங்களின் மோதல்கள் கூர்மையடைந்தால், கையெடுத்து கேட்கும் நமது அதிகாரங்களை கையேந்திக் கேட்கும் நிலையே ஏற்படும்.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK