பேரினவாத பலிக்களத்துக்கு படிப்பினையூட்டும் பக்குவம்!

 -சுஐப் எம். காசிம்- 

"அடுத்தது காட்டும் பளிங்குபோல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்பார்கள். டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் இதற்கு நல்லதொரு உதாரணம். தீய நோக்கில் சோடிக்கப்பட்ட குற்றத்தால் முழு முஸ்லிம்களும் பதற்றத்தில் பதற, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் மாத்திரம் முழுமையிலிருந்தார். 2019.05.23 இந்த நாளிலும், இதே மாதத்தின் நாட்களிலும் நரவேட்டையாடும் சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்பட்டிருந்தனர். ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலிகளாகவே இந்த வேட்டைக்களமும் விஸ்வரூபம் எடுத்திருந்தது. விஞ்ஞான, மருத்துவ அறிவுகளையும் மிகைக்குமளவுக்கு பலிக்களங்கள் விரவிக்கிடந்தன. 


"மகப்பேற்று வைத்திய நிபுணரான ஷாபி ஷிஹாப்தீன், சிங்கள இனப்பெருக்கத்தை சூழ்ச்சி செய்தார்" என்பதுதான் சோடிக்கப்பட்ட சோகம். 'அவரது சேவைக்காலத்தில், அவர் செய்த 8000 மகப்பேற்று சிகிச்சைகளில் நாலாயிரத்தை மலடாக்கினார்' என்பதே சோடிப்பு. பத்திரிகை ஒன்று, முதல் பக்கத்தில் இதை பிரசுரிக்க, பேரினவாதம் இதைத் தூக்கிப்பிடிக்க, மாட்டிக்கொண்டது முஸ்லிம் சமூகம். '2050 இல் இலங்கையை இஸ்லாமிய சாம்ராஜ்யமாக்கும் அடிப்படைவாதிகளின் முயற்சிக்கு ஆணிவேரே இவர்தான்' என்றது இன்னொரு அடிப்படை வாதம். இவ்வாறு நகர்ந்தன நரபலிக் களங்கள். 


கற்பனைக்கும் சரிப்படாத இந்தச் சோடிப்பை மருத்துவ உலகம் சவாலுக்குட்படுத்தியிருந்தாலும், சில சந்தர்ப்பங்கள் இவர்களை மௌனிகளாக்கின. எதற்கெடுத்தாலும் ஈஸ்டர் தாக்குதலுக்கு பழிவாங்கப்படும் கடாக்களாக முஸ்லிம்கள் பார்க்கப்பட்டதால், இவர்களுக்காக பரிந்து பேசுவோர் எவரும் இருக்கவில்லை. இதனால், மருத்துவர்கள் கூற வந்த உண்மை சிலகாலம் மலடாக்கப்பட்டிருந்தது. 


இப்போதாவது இது உயிரூட்டப்பட்டிருப்பது எத்தனிக்கப்படும் இன ஐக்கியத்துக்கு ஒரு வகையில் அத்திவாரம்தான். இத்தனைக்கும் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீனின் குடும்பப் பின்னணியும் பின்புலங்களும் இத்தகைய இழிசெயலுக்கு இவர் உடந்தையாயிருந்திருப்பாரா? என்பதைச் சிந்திப்பதற்குக் கூட இனவாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. 


டொக்டர் ஷாபி ஷிஹாப்தீனின் பாட்டனார் (தந்தையின் தந்தை) பௌத்தத்தின் வேத மொழியான பாளி மொழியில் தேர்ச்சி பெற்ற சிறந்த ஆசிரியர். கெக்கிராவ பிரதேசத்தில்  அந்தக் காலத்திலேயே கல்விக்கு பேர் போன இவரது குடும்பத்தில், டொக்டர் ஷாபி உட்பட நான்கு பேர் டொக்டர்கள். மட்டுமல்ல ஷாபியின் மனைவி இமாராவும் டொக்டர்தான். ஷாபி "மஹாத்தயா" என சிங்கள சமூகம் போற்றிய இவரைத்தான், 'சிங்கள இனப்பெருக்கத்தை சீரழிக்க பெண்களை மலடாக்கியவர்' என்று பேரினவாதம் பழிசுமத்தியது. 


இதனால், இத்தனை பெரிய கல்விமான், பிரபல போதைவஸ்துக் கேடி "மாகந்துரை மதுஷுடன்" தடுப்புக்காவலில் தரையில் படுத்துறங்க நேரிட்டது. சுமார் 46 நாட்கள் தண்ணீர் போத்தலின் மேல் தலையை வைத்து, நிலத்தில் கிடையாக தூங்கியதாக, தான் அனுபவித்த துயரத்தை ஊடகமொன்றுக்கு வெளியிட்டார். எப்போது தெரியுமா? நிரபராதி என நிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டிருந்த அவரது 26 இலட்சம் ரூபா சம்பளத்தையும் மருத்துவ செலவுகளுக்காக அன்பளிப்புச் செய்த நிகழ்வில்தான். அனைவரது கன்னங்களையும் கண்ணீர்த்துளிகள் கோடிட்டுக்காட்டி, இப்படியொரு சோடிப்பும் கொடூரமும் இனி எவருக்கும் நிகழாதிருக்க எல்லோரையும் நினைக்க வைத்தது இந்நிகழ்வு.

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK