இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? - அண்மைய தகவல்கள்


இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகி அரசு அரசியல் நெருக்கடியாக மாறியிருக்கிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தொடங்கியிருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சியினர் யாரும் ஆதரவளிக்கவில்லை.

செவ்வாய்க்கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ஆளும் கூட்டணியை விட்டு வெளியேறி சுயேச்சையாகச் செயல்படப் போவதாக அறிவித்தனர்.

இதனிடையே அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருக்கிறது.

இலங்கையில் என்னெவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது? அண்மைத் தகவல்களை இந்தக் கட்டுரையில் அவ்வப்போது தொகுத்து வழங்குகிறோம். இலங்கையில் நடப்பவற்றை ஒரே இடத்தில் படிப்பதற்கு நேயர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவசரச் சட்டம் வாபஸ்

சில நாள்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை, ஜனாதிபதியே வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியினால் நேற்றைய தினம் (05) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக, அவசர கால சட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


இலங்கையில் உடன் அமலுக்குவரும் வகையில் கடந்த முதலாம் தேதி முதல் அவகர கால சட்டத்தை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்தார்.

எனினும், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்ட வர்த்தமானிக்கு எதிராக எதிர்கட்சிகள் மாத்திரமன்றி, பொதுமக்களும் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மீள வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கோட்டாபாயவைக் கைவிட்ட எம்.பி.க்கள்

இலங்கையில் ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த 10 கட்சிகள், கடந்த சில காலமாகவே சுயாதீனமாக செயற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் கூறினார்.


இந்த 10 கட்சிகளை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொடர்ச்சியாகவே அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, விமல் வீரவங்ச, உதய பிரபாத் கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டிரான் அலஸ், அத்துரெலிய ரத்த தேரர், கிவிது குமாரதுங்க, வீரசுமன வீரசிங்க, அசங்க நவரத்ன, மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ, காமினி வலேபொட, ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, கயாசான், ஜயந்த சமரவீர ஆகியோர் சுயேட்சையாக நாடாளுமன்றத்தில் செயற்படவுள்ளதாக தெரிவித்தனர்.

பெரும்பான்மையை இழந்த அரசு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளது. தமது கட்சியிலுள்ள 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று முதல் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதேவேளை, ஆட்சி பீடத்திலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் கூட்டணி வகித்த கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.;இதன்படி, இன்று (05) முதல் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக சபையில் அறிவித்தனர். இதன்படி, அரசாங்கம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை இழந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்ட மக்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி செயலக வளாகத்தை திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இளைஞர், யுவதிகள் முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன், ராஜபக்ஸ குடும்பத்தை வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டிருந்தன.

கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்து வாகனங்களில் பேரணியாக வருகைத் தந்த பெருந்திரளான இளைஞர், யுவதிகள், ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

தேசிய கொடிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க முடியாதவாறு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

போலீஸார், கலகத் தடுப்பு பிரிவினர், விசேட அதிரடி படையினர் என அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் இந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் நீடித்து வரும் மோசமான நெருக்கடிக்கு மத்தியில் நான்கு புதிய அமைச்சர்கள் திங்கள்கிழமையன்று பதவியேற்றுக் கொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பு அலி சாப்ரியிடமும் கல்வித்துறை தினேஷ் குணவர்த்தனவிடமும், வெளியுறவுத்துறை ஜீ.எல் பீரிஸிடமும் நெடுஞ்சாலைத்துறை ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி அரசு அமைக்க அழைப்பு

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விதமாக உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி அமைச்சரவையில் சேரும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். இது தொடர்பான தகவலை அவரது ஊடக அலுவலகம் திங்கட்கிழமை காலையில் வெளியிட்டது.

அமைச்சர்கள் பதவி விலகல்

பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் சமாளிக்க ஏதுவாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் மொத்தமாக தங்களுடைய பதவியில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று விலகினார்கள்.

பதவி விலகியோரில் பிரதமரின் மகன் நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார். "மக்கள் மற்றும் அரசாங்கத்தை பலப்படுத்தும் தீர்மானத்திற்கு" ராஜபக்ஷ சகோதரர்களின் நடவடிக்கை உதவும் என்று நம்புவதாக அவர் ட்வீட் செய்திருந்தார்.

அமைச்சர்கள் பதவி விலகினாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்கள்.

ஊரடங்கை மீறி போராட்டங்கள்

போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 36 மணி நேர ஊடரங்கு உத்தரவை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்தார். இதன்படி, அதிபரின் எழுத்துபூர்வ அனுமதியின்றி எந்தவொரு பொது வீதி, பூங்கா, ரயில்கள், அல்லது கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு சனிக்கிழமை மாலையில் அமல்படுத்தப்பட்டது.


ஊரடங்கு அமலில் இருந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஞாயிற்றுக்கிழமை பல நகரங்களில் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்கட்சி அரசியல் தலைவர்களும் இந்த போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

சமூக வலைத்தள முடக்கத்தை தளர்த்திய அரசு

போராட்டங்களை தூண்டும் வகையிலும் நாட்டின் நிலைமை தொடர்பான தவறான தகவல்கள் பரப்பப்படும் முயற்சியை தடுக்கும் வகையிலும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இலங்கை அரசு முடக்கியது. வி.பி.என். உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தி பலரும் சமூகவலைத்தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்தினர். அரசின் நடவடிக்கை கேலி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

அதிபரின் மாளிகை அருகே வாகனங்கள் தீக்கிரை

கடந்த வியாழக்கிழமையன்று அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்குழுவைச் சேர்ந்த சிலர் தீக்கிரையாக்கினர்.

காவல்துறையினர் போராட்டக்குழுவினரை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

கொழும்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் வாகனங்கள்

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, இந்த மோதல்களின் போது குறைந்தது இருபத்து நான்கு காவல்துறையினர் காயமடைந்தனர்.

இந்த போராட்டம் மறுநாளான வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. அப்போது 53 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் ஐந்து செய்தி புகைப்படக்காரர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

காவல்துறை மூலம் ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டபோதும் மக்களின் போராட்டங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி பதவி விலகக் கோரி பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு முழக்கமிட்டனர்.

நாடு முழுவதும் அவசரநிலை


இலங்கையில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 2) முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, அவசர கால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தினார்.

இலங்கையில் நீடித்து வரும் மோசமான நெருக்கடியை சமாளிக்கத் தவறியதாகக் கூறி கொழும்பில் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவர்கள்

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை அமுல்படுத்தும் வகையில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 155ஆவது உறுப்புரையினூடாக அவசரகாலச் சட்டத்தினை பிரகடனப்படுத்தப்படும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியவசியத் தேவைகள் என்பனவற்றைப் பேணும் பொருட்டு - அவசரகால நிலையை, ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம்.

அவசரகால நிலைமையின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகளை உருவாக்குவதற்கான தத்துவம் ஜனாதிபதிக்கு உள்ளது. யார் யாருக்கு என்னென்ன அதிகாரங்களை வழங்குவது, எவ்வாறான நடைமுறைகளையெல்லாம் அமுல்படுத்துவது அல்லது நீக்குவது என்பது தொடர்பிலான ஒழுங்கு விதிகளை அவர் உருவாக்க முடியும். அல்லது வலுவில் இருக்கின்ற ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தலாம்.


நன்றி BBC தமிழ் 


News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK