தீச்சுவாலைகளுக்குள் திணறிய தீர்க்கதரிசிகளின் தேசம்!

 


-சுஐப் எம்.காசிம்-

வேதங்கள் வழங்கப்பட்டோரின் புண்ணிய பூமி என அழைக்கப்படும், பலஸ்தீனப் பிரதேசம் இன்று வேதனை பூமியாகப் பெருமூச்சு விட்டு வருகிறது. இங்குள்ள "பைதுல்முகத்தஸ்" என்கின்ற ஆத்மீகத் தலம் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய ஊற்றுக்களின் அத்திவாரமும்தான். இந்த மதங்களின் இறைதூதர்களும் ஒரே, தோற்றுவாயிலின் வெவ்வேறு வாசல்கள்தான். இவர்கள் எல்லோரையும் இஸ்லாமியர்கள் ஏற்கின்றனர். ஆனால், ஏனையோர் தத்தமது தீர்க்கதரிசிகளுடன் நம்பிக்கைகளை நிறுத்திவிட்டனர்.

விவிலிய வேதங்கள் விளிக்கும் ஆப்ரஹாம் என்ற இறைதூதரை இஸ்லாம், இப்ராஹீம் என விளிக்கிறது. இதேபோன்று, மோசே, சாலமன், யாகோப், எலியாஸ், தாவீது, இயேசு, அஹமட் என விவிலிய வேதங்கள் அழைக்கும் இறைதூதர்களை, மூஸா, சுலைமான், யாகூப், இல்யாஸ், தாவூத், ஈஸா, முஹம்மத் எனக் குறிப்பிடுகிறது இஸ்லாம். மொழிகளின் உச்சரிப்புக்களில் ஒலிக்கும் இந்த மாற்றங்கள், இவர்களை ஒன்றுபடாமல் வைத்திருப்பதால்தான், இந்த பூமிக்கு இத்தனை வேதனை.

இங்கு எழும் சர்ச்சைகளிலும், ஆத்மீகமும் ஆயுதமும்தான் அதிக செல்வாக்கில் இருக்கின்றன. அறுபது வருடங்களுக்கும் அதிகமாக இந்தப் பூமி, அனலும் அமைதியுமென, அலைக்கழிக்கப்படுவதும் இதனால்தான். இப்போது எழுந்துள்ள இந்த அனல், 2014க்குப் பின்னர் ஏற்பட்டாலும், போரிடும் ஆவேசத்தை இரு தரப்பிலும் அதிகரித்திருந்ததாக அவதானிகள் கவலைப்பட்டனர். காஸாப் பள்ளத்தாக்கில் இஸ்ரேலின் விமானங்கள், ஒரு நிமிடத்துக்கு பத்துக் குண்டுகளைக் கொட்டினால், அதே நிமிடத்துக்கு நூறு ரொக்கட்டுகள் இஸ்ரேலை நோக்கித் தெறித்தன. வீரங்களைப் பறைசாற்றியதால், இந்தப் பதினொரு நாட்களிலும் இரு தரப்பிலும் மரண ஓலங்களே இருந்தன. இப்போது, யுத்த நிறுத்தம் வந்ததால், ஓலங்கள் ஓய்ந்துவிட்டன.

சமாதான விரும்பிகளும் இதைத்தான், விரும்பிக்கொண்டிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரக் கூட்டத்தில் ஹங்கேரி, ஆஸ்திரியா, போலந்து ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு விரும்பியிருந்தால்,11 தினங்களாக இந்தத் தீர்க்கதரிசிகளின் தேசம் தீப்பிழம்பாகியிருக்காது. என்ன செய்வது?

ஹமாஸின் ஆயுதக் களஞ்சியசாலையிலுள்ள, சுமார் 12000 ரொக்கட்டுக்களை அழிக்கும் வரை, தாக்குதல்கள் தொடர்வதைத்தானே இந்நாடுகள் விரும்பியிருந்ததே! இதுமட்டுமா, போரை நிறுத்துவதற்கான இலக்கை, தாக்குதல்களைத் தொடர்வதால்தான் எட்ட முடியுமென்று இஸ்ரேலியப் பிரதமரும் நம்பியிருந்தாரே!இதை, நம்பி தாக்குதல்களைத் தொடர்ந்தது இஸ்ரேல். இதனால் தீயின் நாக்குகளுக்குள் இந்தத் தேசத்தின் பல பகுதிகள் சாம்பல் தீவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு இலட்சியக் குறிக்கோள்களுடன், வான் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய, யூத அரசின் ஆசையில், ஹமாஸ் கரியைப் பூசிவிட்டதால்தான், இந்த யுத்த நிறுத்தமோ தெரியாது.

ஹமாஸின் ஆயுத அமைப்பான "இஸ்ஸடீன் அல்கஸ்ஸாம்" அமைப்பின் தலைவர், மொஹமட் தையிபைக் கொல்வது, ஹமாஸ் அமைப்பை ஆத்திரமூட்டி ரொக்கட்டுக்களை ஏவச் செய்வது. இவ்வாறு செய்தால், காஸாவில் உள்ள சுமார் 12000 ரொக்கட்டுக்களைத் தீர்ந்துவிடச் செய்யலாமென இஸ்ரேல் எதிர்பார்த்ததுதான் அந்த இலக்குகள். ஹமாஸின் ஆயுதப்பலம், இஸ்ரேலின் இருப்புக்கு ஆபத்தென்ற அங்குள்ள நியதியில், இஸ்ரேலுக்கு இது நியாயமான இலக்குகள்தான். இதற்காகத்தான் உதவிகள் வரும் வழிகளை அடைத்து, சுரங்கப் பாதைகளையும் குண்டெறிந்து தகர்த்தன இஸ்ரேலிய விமானங்கள்.

ஏவப்படும் ரொக்கட்டுக்களை "அயர்ன்டோம்" என்ற வான் பாதுகாப்பு முறைகளில் அழித்து வந்ததால், இஸ்ரேலுக்கு உள்ளூர அதிகளவு இதில் பாதிப்பில்லைதான். 3750 ரொக்கட்டுக்களை ஹமாஸ் ஏவியும் சுமார் ஐநூறுதானே இஸ்ரேலில் விழுந்திருந்தன. ஆனால், அடிக்கடி எழுப்பப்பட்ட "சைரன்ஒலி" வாசலுக்கே வந்து விழுந்த ரொக்கட்டுக்கள்தான், இஸ்ரேலிலும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள மேற்கு கரையின் சில பகுதிகளிலும் சலசலப்பைக் கிளப்பியிருந்தன. என்ன செய்வது, மொஹமட் தையிபையாவது தீர்த்துக்கட்ட முடியவில்லை. ஏன், ஹமாஸின் ஆயுதக் களஞ்சியமும் நலிந்ததாகவும் தெரியவில்லை. இதனால்,தோல்வியின் விளிம்புக்குள் செல்ல முன்னர் திரும்பிக் கொண்டதோ இஸ்ரேல்.

2014 இல் நடந்த யுத்தத்திலும் இந்த தையிபைக் கொல்லக் கிடைக்கவில்லை. இப்போதும் இவர் கைக்கு எட்டவில்லை. அப்போது (2014) எட்டியிருந்தால், ஹமாஸின் ஆயுதக் கட்டமைப்பு இப்படிப் பெருகியிருக்காது என இஸ்ரேல் வயிறெரிகையில், இப்போதுமா மொஹமட் தையிபை உயிருடன் விட்டுத்திரும்புவது? இஸ்ரேலிய பாதுகாப்புக் கவுன்ஸில் கூட்டத்தில் எதிரொலித்தது இவைகளே.

அதிகரித்த அழுத்தங்களால், திரும்புவதைத் தவிர, இஸ்ரேலுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. மேலும், சளைக்காது நின்று போராடிய ஹமாஸின் துணிவிருக்கிறதே, இதுதான் அனைத்துக்கும் ஆணிவேராகியது. காஸா குடிமனைகளில் குண்டுகளை வீசி, குடும்பங்களுக்குள் குழப்பத்தையும், இழப்புக்களையும் ஏற்படுத்தியும், ஹமாஸின் இராணுவ மன வலிமைகளைக் குலைக்கும் இஸ்ரேலின் யுக்தி, வெற்றியளிக்கத் தவறியிருப்பதென்பதுதான் இராணுவ ஆய்வாளர்களின் முடிவு.

காஸாவில் கட்டடங்களைத் தகர்த்திருக்கலாம், 232 பேரைக் கொன்றிருக்கலாம் மட்டுமா,1900 அப்பாவிகளை அங்கவீனர்களாக்கி இருக்கலாம். இவற்றை எல்லாம் செய்ய முடிந்த இஸ்ரேலுக்கு ஹமாஸைக் கதிகலங்க வைக்க முடியவில்லையே!மேலும், அரபு மொழி தெரியாத வீரர்களைத் தேர்ந்தெடுத்து, காஸா போர்க்களத்துக்கு படைகளை அனுப்பிய இஸ்ரேலிய அரசு, போர்க்களத்தில் எந்தக் கருணையும் காட்டப்படக் கூடாதென்ற கொடூரத்தையும் காட்டியிருந்தது. இருந்துமென்ன, கடைசியில் கைகுலுக்கும் சமாதானம், பேச்சுவார்த்தை இவைகள்தான் தீர்வாகியிருக்கிறது இப்போது.

தூங்கச் சென்ற காஸாக் குழந்தைகள், நாளைக்கு இறந்துவிடுவோமா? என்றும், நள்ளிரவில், எழும்பி ஓட நேருமா? என இஸ்ரேல் குழந்தைகளும் தத்தமது, தாய்மார்களிடம் கேட்டுவந்த கேள்விகளும் இன்று நின்றுவிட்டன. இன்னும், இந்தத் தந்தைமார்களின் மனச்சாட்சிகள் தூங்கவா வேண்டும்? தூங்கும் வரைக்கும் இஸ்ரேலியத் தாய்மார்களும், காஸாத் தாய்மார்களும் குழந்தைகளைத் தேற்றுவதற்கு வழியில்லாமல் விழிகளையா நனைக்கப்போகின்றனர்?

இதையுணர்ந்த எகிப்து மற்றும் துருக்கிய தலைவர்கள் பாப்பரசருடன் தொலைபேசியில் பேசியுமிருந்தனர். பலங்களைப் பிரயோகித்த பின்னர் ஏற்படும் பேச்சுவார்த்தையை விடவும், அழிவுகளைத் தடுக்கும் அறிவுகள்தான் பலமானவை என்பதையே, இவ்விரு நாடுகளின் தலைவர்களும் பாப்பரசருடன் பேசியுள்ளனர். எனவே, ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தம், ஆத்மீகத் தோற்றுவாயிலுள்ள பலஸ்தீனப் பிரதேசம், இறைதூதர்களை நம்பும் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கட்டும் என்ற இணக்கத்தை ஏற்படுத்தட்டும். இதுவே, எமது பிரார்த்தனை.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK