துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,அநீதிக்கெதிரான அறவழிப் போராட்டங்களில் கருப்பு கொடி ஏந்தலும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை. அ.இ.ம.கா தலைவரின் கைது அநீதியானது என்பதால், அதனைச் செய்த இவ்வரசை உணரச் செய்ய, கருப்பு கொடி ஏந்தலை செய்வது பொருத்தமான வழிகளில் ஒன்று. இதனை பா.உறுப்பினர் முஷர்ரப் மக்கள் மத்தியில் முன் வைத்த போது, அது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. வெளிப்படையாக சொல்வதானால் மக்களால் சிறிதும் கணக்கில் கொள்ளப்படாது தூக்கி வீசப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை மக்கள் ஏற்கும் விதத்தில் நெளிவு, சுழிவு பார்த்து முன் வைப்பதில் பா.உறுப்பினர் முஷர்ரப் வல்லவர். அவ்வாறிருக்க இது ஏன் இத்தனை விமர்சனத்தையும், தோல்வியையும் பெற்றிருந்ததென ஆராய்வது மிகவும் அவசியமானது.

பா.உறுப்பினர் முஷர்ரப் ஒவ்வொருவரும், தங்களது வீடுகளில் பெருநாள் தினமன்று கருப்பு கொடியை ஏற்றுமாறு கூறியிருந்தார். சிலர் சிறு பிள்ளைகளை வைத்து அங்கும், இங்கும் கொடிகளை கட்டியிருந்தனர். பா.உறுப்பினர் முஷர்ரப், தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை நன்கு அவதானம் செலுத்தி பாருங்கள். அதிகமான கொடிகள் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும். மனிதர்களை வீடுகளில் கொடி ஏற்றச் சொன்ன பா.உறுப்பினர் முஷர்ரபுக்கு, மின் கம்பங்கள் கொடியேற்றி எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இதுவே அவருடைய இன்றைய நிலை என்பதுவே கவலைக்குரிய விடயம்.

ஒரு மனிதன் மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டால், அவர் செய்யும் அனைத்தையும் சந்தேக கோணத்திலேயே நோக்குவது வழமை. தற்போது பா.உறுப்பினர் முஷர்ரப் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அவர் எது சொன்னாலும் மக்கள் சந்தேக கோணத்திலேயே நோக்குவர். இதுவே இத் திட்டம் தோல்வியடைய பிரதான காரணம் எனலாம். ஒரு அரசியல் வாதி மக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம். இதனை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. நீங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதை அறிய இதனை விட சான்றேதும் தேவையில்லை.

பா.உறுப்பினர் முஷர்ரப் ஒவ்வொரு ஊரிலும், தன் சார்பாக சிலரை வைத்துள்ளார். அவர்கள் மக்கள் செல்வாக்கற்றவர்கள் . அவர்கள் கொந்தராத்துக்களுக்காகவே அவருடன் உள்ளார்கள். இதனை இச் சந்தர்ப்பத்தில் பா.உறுப்பினர் முஷர்ரப் நன்கு உணர்ந்திருப்பார் என நம்புகிறேன். கொடியை நாலு வீடுகளில் கட்ட இயலாதவர்கள், உங்களை மீண்டும் பா.உறுப்பினராக்கப் போகிறார்களா? நீங்கள் மீண்டும் பா.உறுப்பினராவது அவர்களது எண்ணமல்ல. மீண்டும் பா.உறுப்பினராபவரோடு அவர்கள் இருப்பார்கள். பா.உறுப்பினர் முஷர்ரப், தன் நிலை பற்றி சிந்திக்க இதனை விட நல்ல சந்தர்ப்பம் இருக்காது.

பா.உறுப்பினர் முஷர்ரப் எம்.பியானது ஒரு கட்சியின் வலிமையினால் என்பதை அவர் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது. அதனை இக் கொடியேற்றிய நிகழ்வு அவருக்கு நினைவு படுத்தியிருக்கும் என நம்புகிறேன். கொடியேற்றும் தீர்மானத்தை உரிய இடத்தில் கலந்துரையாடி, கட்சியின் தீர்மானமாக செய்திருந்தால், அது வேற லெவலில் விழிப்புணர்வை வழங்கியிருக்கும். அது கட்சியின் தன் மான பிரச்சினையாக உருவெடுத்திருக்கும். ஒரு தனி நபரின் தீர்மானத்திற்கும், ஒரு கட்சியின் தீர்மானத்திற்கும் இடையிலான வேறுபாடு அதுவே. இன்னுமின்னும் தன்னிலையை உணராது, உங்கள் செயற்பாடுகளை தொடர வேண்டாம்.

நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் தீர்மானத்தை அ.இ.ம.கா கட்சியின் முக்கியஸ்தர்கள் எடுத்த போது, இன்றைய சூழ்நிலையில் ஆர்ப்பாட்டம் செய்வது பொருத்தமானதா என அறிவார்ந்தவர்கள் போன்று வாதிட்டவர்கள் ( பா.உறுப்பினர் அல்ல ), எதிர்ப்பின் மிகச் சிறிய வடிவமான கொடியேந்தலை செய்யுமாறு மக்கள் மத்தியில் கூறினால், அதனை எப்படி மக்கள் ஏற்பார்கள்? முதலில் உறுதியான கொள்கை வேண்டும்.

இங்கு சுட்டிகாட்டியுள்ளது போன்ற பல விடயங்களே கருப்பு கொடி போராட்டம் தோல்வியுற்றமைக்கான காரணங்களாக குறிப்பிட முடியும். இதனை பா.உறுப்பினர் முஷர்ரப் கவனத்தில் கொள்வார் என நம்புகிறேன். மொட்டுவை ஆதரித்து, தடயமே இல்லாது அழிந்து போன பா.உறுப்பினர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் வரலாறுகள் பல இக் கட்சிக்கு உண்டு என்பதை நினைவு படுத்திகொள்ள விரும்புகிறேன்.