சுஐப் எம்.காசிம்-

மதங்களின் தோற்றுவாயல்மனிதாபிமானத்தின் மடியில்தான் கிடக்கிறது. எல்லோரையும் வாழ வைக்க வந்த வேதங்கள், இருப்போரையும் இன்று நெருக்கடிகளுக்குள் திணிக்கும் நிலையையே ஏற்படுத்துகிறதே! ஏன்?. விரிவான கோணத்தில் இந்தக் கேள்வி விரிய வேண்டும்.மதங்கள் பற்றித் தெளிவூட்டிய மூலகர்த்தாக்கள் மறைந்து, சுமார் பல ஆயிரம் வருடங்கள் கடந்துள்ள நிலையில்தான், இன்று இந்த நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

இந்து மதம் 5000 வருடங்களைக் கடந்து நிற்கின்றது.பௌத்த மதம் 2500 வருடங்களை எட்டி நிற்கிறது.கிறிஸ்தவம் 2020 ஐத் தொட்டுநிற்கிறது. இஸ்லாம் 1500 வருடங்களை நெருங்கி நிற்கிறது. எனினும்,  இம்மதங்களின் மூலகர்த்தாக்கள் மறைந்த பின்னரும், இவற்றின் கோட்பாடுகள் உயிரூட்டப்படுகின்றன. இதற்கு,  ஒவ்வொரு மதங்களின் கருத்துக்களையும் அடியொற்றி வந்த அமைப்புக்கள்தான் காரணம். ஆனால், இந்த அமைப்புக்கள் இன்று நாளாந்தம் அதிகரித்து வருவதன் அடிப்படை என்ன? ஏதாவது ஆதாயங்களுக்காக அதிகரிக்கின்றனவா? அவ்வாறானால், இந்த ஆதாயத்தில் ஆத்மீகமா, லௌகீகமா? அதிக பங்கெடுக்கிறது. எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சிந்திக்கையில், லௌகீக நோக்கில்தான், இந்த அமைப்புக்கள் அதிகரிப்பதாகத் தோன்றுகிறது. ஏற்படுகின்ற ஒவ்வொரு சிறிய, சிறிய அபிப்பிராய பேதங்களும் அடுத்த அமைப்பைத் தோற்றுவித்து விடுகிறதே. இதனால்தான் இன்று இத்தனை அமைப்புக்கள்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இந்த அமைப்புக்கள் எவையும் இந்த சமூகத்தின் அரசியல் தலைமைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது அரசியலில் விழிப்பூட்டவோ இயலாதிருக்கின்றன. இவற்றுக்குப் பொதுவான தலைமையை வழங்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின், ஆலோசனைகள் கூட, சபையேறாமல் போன சந்தர்ப்பங்கள் தான், இச்சமூகத்தின் அரசியலில் அதிகம். இந்நிலையில்தான், இன்று 11 இஸ்லாமிய அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்துள்ளது. எல்லாம் ஈஸ்டர் தாக்குதல்களின் எதிரொலிகள்தான். அப்படியானால், அடிப்படைவாதத்தில் இவற்றுக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறதோ? ஏன், ஈஸ்டர் தாக்குதலே, அடிப்படைவாதத்தின் அடையாளமாகத்தானே பார்க்கப்படுகிறது. இதுதான், இத்தடைகளிலும் இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஐந்து நாட்களின் பின்னர் ஏப்ரல் 26இல் சாய்ந்தமருதில் நடந்த சம்பவம் இருக்கிறதே! இதுதான், தாக்குதல் பற்றிய உளவுத்துறை விசாரணைக்கு ஆணிவேராக இருந்தது. இந்த விசாரணையில்தான் பல பக்க வேர்களும் முளைக்கத் தொடங்கின. அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பலவற்றில் ஒலிநாடாதான் இந்த விசாரணைக்கு ஒளியூட்டியது. "காபிரைக் கொல்லுங்கள், குfப்பாரை வெட்டுங்கள்" என்று அந்தச் சாய்ந்தமருது வீட்டிலிருந்த பயங்கரவாதிகள், ஆவேஷமிட்ட ஆத்திரக் குரல்கள்தான் அந்த ஒலிநாடா.  பின்னரென்ன. காபிரென்றால் யார்? குfப்பார் யார்? என இஸ்லாத்திலுள்ள கருத்தியல்கள் நன்றாகத் துருவித் துருவி ஆராயப்பட்டன,அறியப்பட்டன.

இறை நிராகாரிப்போரை (முஸ்லிமல்லாதோர்)சிலை வணங்குவோரைக் கொல்லுமாறு, இஸ்லாம் சொல்லுகிறதா? இதற்காகவா இந்தத் தாக்குதல் என்றுதான் அனைவரும் முஸ்லிம்கள் மீது ஆச்சர்யம் கலந்த ஆத்திரத்தில் இருந்தனர். இதிலுள்ள கவலை என்ன தெரியுமா?. இத்தனை இஸ்லாமிய அமைப்புக்கள் இருந்தும் இதைத் தெளிவுபடுத்தவில்லையே! ஏனைய சமூகத்தினருக்கு இஸ்லாத்திலிருந்த ஐயம், அச்சத்தைப் போக்கவில்லையே! அவ்வாறு ஒரு அமைப்பு, சந்தேகத்தைக் களையும் வகையில் தெளிவூட்டினாலும், இன்னொரு இஸ்லாமிய அமைப்பு அதைக் குழப்பும் வகையில் விளக்கம் சொல்கிறதே. எந்த இயக்கங்களும் தேவையில்லை என்ற மனநிலையை முஸ்லிம்களிடத்தில் இது,ஏற்படுத்தாதா? புனித அல்குர்ஆன்" எதிரியைப் போர்க்களத்தில் கண்டால் அல்லது மோத நேரிட்டால் கொல்லுங்கள், வெட்டுங்கள்" இவ்வளவுதான் கூறுகிறது. சாதாரண சமாதான நேரத்தில் கண்டால் அவர்களை (எதிரிகள்) வெட்டவோ அல்லது கொல்லவோ தடைவிதித்திருக் கிறது இஸ்லாம். கண்ட இடத்திலென்பது போர்க்களக் காட்சிகளில் மட்டுமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதைப் பலரும் உணர்வது அவசியம். ஆனால், இஸ்லாத்தின் எதிரிகள் "போர்க்களத்தில்" என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு, கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்ற புனித குர்ஆனின் வசனத்தை மட்டும் தூக்கிப்பிடிக்கின்றனர். இதில், இன்றைய சில கடும்போக்குவாதிகளுக்கு உள்ள சாதகம் என்னவென்றால், இஸ்லாத்தின் அன்றைய (அரேபிய) எதிரிகள் சிலைவணங்கிகளாக இருந்ததுதான்.

மேலும்  சாய்ந்தமருது ஒலிநாடாவும் மாவனல்லை சிலை உடைப்புக்களுடன் சம்பந்தப்படுவதுதான், சகோதர சமூகங்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. இது, போதாததற்கு சில இஸ்லாமிய அமைப்புக்களின் கொதிநிலைப் பேச்சுக்கள், போக்குகளே நிலைமைகளைச் சீரழிக்கின்றன. சமூகங்களின் சகோதரத்துவத்துக்கு சவால்களாகவும் உள்ளவை இவ்வாறான பொறுப்பற்ற பேச்சுக்கள்தான். இந்தப் போக்குகள் இங்குமட்டுமல்ல ஏனைய சமூகங்களிலும் விரவுவதுதான் கவலை.

மானிடத்தின் வாழ்வுக்கு வழிகோலாத அமைப்புக்கள் தோன்றுவதில், யாருக்கும் என்ன இலாபம்? இலட்சக் கணக்கில் நிதியைச் செலவு செய்து கட்டடங்களைக் கட்டி அமைப்புக்கள் நடாத்துவதால், அமைதி, ஆனந்தம் மக்களுக்கு ஏற்படுகிறதா? வயிற்றுப் பசிக்காக நாளாந்தம் அலையும் நமது ஜீவன்களைக் கேளுங்கள். மக்கள் வாழ்ந்தால்தானே, மதம் தேவைப்படும். மனிதர்கள் மாண்ட பின்னர், மதத்தின் இருப்பு யாருக்குத் தேவை. உண்மையில், ஒருகருத்தின் இருப்பைப் பலப்டுத்தும் நோக்கில், மற்றொரு நம்பிக்கையில் வாழும் அப்பாவிச் சிவில் சமூகத்தை அழித்தொழிக்க நினைப்பது அடிப்படைவாதம்தான்.

இந்த அழிப்புக்களின் செயற்பாடுகள்தான் தீவிரவாதம், கடும்போக்குவாதம், பயங்கரவாதமாகப் பரிணாமம் அடைகிறது. சிந்தனையால் மாற்றுவது, பணத்துக்காக மாற்றுவது, பலாத்காரத்தால் மாற்றுவது, வறுமையில் மாற்றுவதெல்லாம் கருத்தியலை அழிப்பதற்கான வெவ்வேறு வடிவங்களே. மனித உயிர்களைக் காவுகொண்டு வன்முறையால் மனிதனை மாற்றுவதே பயங்கரவாதமாகிறது.

எனவே, அறிவுக்கு அப்பாலான நமது ஆத்மீக நம்பிக்கைகள் மனச்சாட்சியின் நெறியில், மனிதாபிமானமாக இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம். "ஆடையணிகலன்கள் ஆண்டவன் விரும்புவதில்லை, அங்கொரு கண், இங்கொரு கண் ஆலய வழிபாடும் இல்லை".