ஆணைக்குழு அறிக்கை; தப்பியிருக்கலாமென்ற மூளை எது?

 


-சுஐப் எம்.காசிம்-

"எந்தக் கொள்கைகளையும் பலப்படுத்தும் நோக்கில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படவில்லை. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாகக் கருதவும் முடியாது". உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையில் இப்படியும் உள்ளதாம். இந்த ஆணைக் குழுவை நியமித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதுதான், இதிலுள்ள ஆச்சரியம். இந்தத் தாக்குதல் நடக்கவிருந்த ஒரு தினத்துக்கு முன்னர், ஏப்ரல் (20) வௌியான பயங்கரவாதி சஹ்ரானின் ஒலி நாடாவில், "நாங்கள் குண்டுதாரிகளாக வெடித்துச் சிதற கடும்போக்கர்தான் காரணம்" என்ற ஆவேசமும் அடங்கியிருந்தது வௌிநாடுகளில் நடாத்தப்படும் ஐ.எஸ் தாக்குதல்களுக்கும் இந்தக் கடும்போக்கரா காரணம்? என எழும், நியாயங்களால் குண்டுதாரிகளின் இந்த கூற்றுக்கள் அர்த்தமிழக்கின்றன. மாறாக, துரதிஷ்டமாகக் கட்டமைக்கப்படும் மதத் தீவிரத்தின் கட்டவிழ்ப்புக்கள் இந்தத் தாக்குதலுக்கு காரணமாற்றியிருக்கலாமா? அல்லது ஐரோப்பாவில் இன்றளவுமுள்ள மத நம்பிக்கைகளின் (கிறிஸ்தவ, இஸ்லாம்) இடைவௌிகள் பங்காற்றியதா? இதனால், சர்வதேசம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியதா? அல்லது பாதுகாப்பு பலவீனமாக இருந்த சந்தர்ப்பத்தை, இந்தியா தூண்டியதா? அப்படியானால், தனக்குச் சார்பான இலங்கை அரசை வீட்டுக்கு அனுப்பி, சீனா சார்பு அரசை ஆட்சிக்கு கொண்டு வருமளவுக்கு ராஜ்ய, ராணுவ, ராஜதந்திர அறிவு "ரோவுக்கு இல்லையா? என்ற கேள்விகளும் எழவே செய்கின்றன. 

அறிக்கையிலுள்ள இந்த குழப்பங்கள் மக்களையும் இவ்வாறுதான் குழப்புகின்றன. சகல தரப்பும் இந்த ஆணைக் குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ளதால், பல கோணங்களின் பார்வைகளுக்கு இது உட்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட தரப்பு தப்பிக்கலாம் என நினைக்கிறது. புதிய அறிக்கை வௌியானால், நாமும் குற்றம் சாட்டப்படலாமென இன்னும் சில தரப்பும் அஞ்சுகிறது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, யாரைத் திருப்திப்படுத்த இந்த விசாரணை நடத்தப்பட்டதோ, அந்தச் சமூகத்தின் உயர்மட்ட மதத் தலைமை இந்த அறிக்கையை அடியோடு நிராகரித்துவிட்டது.

உலக சனத் தொகையின் முதலாவது சமூகமான கிறிஸ்தவர்களின் அதிருப்தியையும் இது ஏற்படுத்தலாம். இது மட்டுமா? அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வௌியேறுமளவுக்கு அரசியல் நிலைமை மோசமடைந்துமுள்ளது. தாக்குதலுடன் தொடர்புள்ள மிக முக்கிய சக்திகள், தப்பித்திருப்பதையே, பேராயர் மல்கம்ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டுக்கள் தத்துவார்த்தமாகக் காட்டுகின்றன. அப்படி எந்தச் சக்தி தப்பியிருக்கும்? ஆட்சிக்கு வருவதை ஆசையாகக் கொண்டு எதிர்க் கட்சி செய்திருக்குமா? பேராயரின் குற்றச்சாட்டுக்களில் இதுவும் புலப்படவில்லையே! நல்லாட்சியிலிருந்த சிறுபான்மை பிரதிநிதிகளுக்கு இது தெரிந்துள்ளதாகவா பேராயர் சந்தேகிக்கிறார்? 

இத்தனை குழப்பங்களுக்கும், சட்டமா அதிபரிடம் இன்னும் ஒப்படைக்க எஞ்சியுள்ள அறிக்கையின் 22 இணைப்புக்களில் பதிலிருந்தால் போதுமானது. ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட 65 பாகங்களை மாத்திரம் வைத்து, எவருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதால், எஞ்சிய அறிக்கைகளும் சட்டமா அதிபருக்கு கையளிக்கப்பட்டேயாக வேண்டும். பயங்கரவாதத்தை ஒழித்த பெருமையிலுள்ள இந்த அரசாங்கம், நிச்சயம் இதையும் தோற்கடிப்பதில் விழிப்புடனிருக்கும். இதில், முஸ்லிம் சமூகம் நிம்மதிப்பட  நிறையவுள்ளன. ஒட்டுமொத்த சமூகமும் குற்றவுணர்வுடன் நோக்கப்பட்ட நிலை நீங்கியுள்ளது. தாக்குதலுடன் இலங்கை முஸ்லிம்களுக்கு எவ்விதப் பின்புலமும் இல்லை எனத் தௌிவாகியுள்ளது. பயங்கரவாதி சஹ்ரான் முழு முஸ்லிம் சமூகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யாதது, ஏற்கனவே விரல்நீட்டப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் மீது கை விலங்குகள் நீட்டாதது, சர்வதேச சக்திகளின் தேவைக்காக இது நடந்ததாவென, பேராயர் சந்தேகிப்பது என்பவைகளே அவை.

இன்று "கறுப்பு ஞாயிறு" பிரகடனப்படுத்தப்பட்டு, ஏப்ரல் 21ல் கிறிஸ்தவ சகோதரர்களின் வீடுகள், தேவாலயங்களில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுமளவுக்கு ஒருவிடயத்தை நம்பியே, இந்த அறிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் சகல சிறுபான்மை சமூகங்களும் கரிநாள் (கறுப்பு தினம்) கொண்டாடி, எதிர்ப்பு அரசியல் முழுமையடைகிறது. 

மேலும் சில முஸ்லிம் எம்.பிக்கள் நடந்து கொண்ட விதமும், அரசியல் ஆலோசனைகளை ஆணைக் குழு உள்வாங்கியதாக ஊகிக்கப்படுவதும் தான் இந்தச் சந்தேகத்துக்கு வலுச் சேர்க்கிறது. அரசைக் கை நீட்டும் பக்கங்களா நீக்கப்பட்டுள்ளன? என்பதுதான் இந்த ஊகம். எனினும், அறிக்கையில் சந்தேகம் இருப்பதை அரசாங்கம் பொருட்படுத்தவுமில்லை பொறுப்பெடுக்கவுமில்லை. சந்தர்ப்பம் வாய்த்ததால், அரசுக்கு சகலதும் கை கூடியே வருகிறது. எஞ்சியுள்ள அரசியல் சவால்களை அடியோடு பிடுங்க, பௌத்த கடும் போக்குகளுக்கு கடிவாளமிட, மதங்களிள் பெயரிலான தீவிரத்துக்கு அனுமதியை மறுக்க இதைவிடச் சந்தர்ப்பம் ஏது? 

ஆட்சிக்கு கொண்டு வர உதவும் இதே கடும்போக்குகள்தான் சில வேளைகளில் அரசையும் வம்புக்கு இழுக்கிறதே. இவற்றை ஒரு கை பார்க்க இதைவிட நல்ல சந்தர்ப்பமும் உருவாகுமா? பங்காளிக் கட்சிகள் எதுவும் வௌியேறி, 52 நாள் நிலையை ஏற்படுத்தலாமெனக் கனவுகாணக் கூடாது, விரும்பினால் வௌியேறலாமென்று கதவையும் திறந்து விட்டுள்ளது இந்த அரசு. அப்படியென்ன குடியா மூழ்கிப்போகும்? 150 பெரும்பான்மை இப்போது எதற்கு? மாகாண சபையை நடத்த ஒரு திருத்தம் தேவை, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர இவர்களது பலம் தேவை., இவ்வளவுதானே! புதிய அரசியலமைப்பை பின்னர் பார்ப்போம். தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளின் அடையாளமான, அதிகாரப் பகிர்வின் ஆரம்பமான, முப்பது வருடப் போராட்டத்தின் முகவரியான மாகாண சபையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர, சிறுபான்மை கட்சிகள் குறிப்பாக, தமிழ் கட்சிகள் ஆரவளிக்கத்தானே வேண்டும். இவ்வாறு நடந்தால் ஏனையதும் இனிதாகவே நடக்கும்.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK