இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் கனடா தலைமைத்துவம் வழங்குவது மீண்டும் தேவையாக உள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் கனடாவுக்கான இயக்குநர் பரீடா டெய்வ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போருக்குப் பின்னர் நல்லிணக்கத்தையும், நீதியையும் ஏற்படுத்துவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்த நாடுகளில் ஒன்றாகக் கனடா காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை நிலைவரம் மீண்டும் மோசமடைகின்றது எனவும், இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்துவது குறித்து கனடா கவனம் செலுத்துவது முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை அதன் தற்போதைய பாதையில் செல்ல அனுமதிப்பதா அல்லது பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களைப் பாதுகாத்து, சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதா என்ற முக்கிய கேள்வியுடன் இம்முறை மனித உரிமைகள் சபையின் அமர்வு ஆரம்பமாகின்றது எனவும் பரீடா டெய்வ் கூறியுள்ளார்.

இந்த முயற்சிகளுக்குத் தலைமை தாங்கக்கூடிய இடத்தில் கனடா இருக்கின்றது எனவும், சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை தீவிரப்படுத்துவது பயங்கரங்களைத் தடுத்து நிறுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.