இலங்கை தேசிய கொடியிலுள்ள சிங்கத்தின் உருவத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக, சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர் எனத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, அந்த யோசனைகள் அனைத்தையும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு பெற்றுள்ளது என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (1) நடைபெற்ற 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும், இதற்காக பாரிய வேலைத்திட்டம் தேவைப்பட்டாலும் இறுதியில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியைப் பெறவேண்டும். எனவே, இம்முறை சுதந்திர தினத்தில் ஏற்கெனவே, பயன்பாட்டில் உள்ள கொடியே பயன்படுத்தப்படும். உண்மையில் தேசிய கொடியில் மாற்றமில்லை. கொடியிலுள்ள வாளேந்திய சிங்கத்தின் உருவத்திலே சில மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.

இதைச் சீர்செய்ய அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான, பெப்ரவரி 4ஆம் திகதி, ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றும் போது, இசைக்கப்படும் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும். தமிழ் மொழியில் பாடப்படாது என்றார்.