இரட்டை நிலைப்பாடும் இழுத்தடிக்கும் அரசியலும் .


கல்வி அமைச்சினால் தரம்-10 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விஞ்ஞான பாடப் புத்தகத்தின் 8ஆம் அத்தியாயத்தின்,

'வைரஸ்' என்கின்ற தலைப்பை விளக்கும் இரண்டாவது பந்தியானது, 'வைரஸின் உள்ளே எவ்வித அனுசேபத் தொழிற்பாடுகளும் நடைபெறுவதில்லை. அதற்குரிய புன்னங்களும் காணப்படுவதில்லை. எனவே வைரஸ்கள் விருந்துவழங்கிக் கலங்களில் மாத்திரமே தொழிற்படும். வைரஸ்கள் உயிருள்ளவற்றில் மாத்திரம் வாழக் கூடியவை...' என்று குறிப்பிடுகின்றது.

தமிழ் மொழிமூல பாடப் புத்தகத்தில் மட்டுமன்றி, ஆங்கில  மற்றும் சிங்கள மொழிமூல புத்தகங்களிலும் வைரஸிற்கான வரைவிலக்கண விளக்கம் இவ்விதமே குறிப்பிடப்பட்டுள்ளது.  அதுமட்டுமன்றி, தரம் - 9 மற்றும் 8 விஞ்ஞான பாடப் புத்தகங்களிலும் வைரஸின் பண்பியல்புகள் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன. 

பக்டீரியாக்களைப் போலன்றி, வைரஸ்கள் உயிருள்ள கலத்தில் மாத்திரமே உயிர் வாழும், உயிரற்ற உடல்களில் வாழாது. எனவே இறந்த ஒருவரின் உடலை முறையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி புதைப்பதால் நிலத்தடியில் வைரஸ் பரவுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என்றே உலகின் பெரும் விஞ்ஞானிகளும் துறைசார்;ந்தவர்களும் கூறி வருகின்றனர். 

இலங்கையில் காலகாலமாக வைரஸ்கள் பற்றி இலட்சக்கணக்கான மாணவர்களுக்கும் இவ்வாறான விளக்கமே கொடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில், இலங்கையிலுள்ள ஒருசிலர் மாத்திரம் 'இல்லை அது பரவும்' என்று நிறுவுவதற்கு முற்படுவார்;களேயானால், அதற்குப் பின்னால் பின்வருவனவற்றுள் ஏதாவது ஒரு காரணமே இருக்க முடியும் என்று ஒரு சிரேஷ்ட விஞ்ஞான ஆசிரியர் ஹாஸ்யமாக சொன்னார்.; 

அதாவது, அவர்கள் மேற்குறிப்பிட்ட பாடசாலைப் பாடப்புத்தகங்களில் உள்ள வைரஸ் பற்றிய வகுப்பிற்கு சமூகமளிக்காமல் இருந்திருக்க வேண்டும். அல்லது கல்வி அமைச்சு தனது பாட விதானத்தில் வைரஸ் பற்றி தவறான அடிப்படை விளக்கத்தை மாணவர்களுக்கு கொடுத்துள்ளது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும். 

இவை இரண்டு காரணங்களும் இன்றி, உடல்களை நிலத்தில் புதைப்பதால் நிலத்திற்கு கீழாக வைரஸ் பரவி தொற்று ஏற்படும் என்று யாராவது கூறுவார்களேயானால், அதற்குப் பின்னால் தெளிவான இனப் பாகுபாடும், இனவாதத்தை மையமாகக் கொண்ட அரசியல் ஓர்மமும் இருக்க வேண்டும்.

தோல்விகண்ட அரசியல்

கொவிட்-19 தொற்றுள்ள ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை நிறுத்தி சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய நல்லடக்கம் செய்வதற்கு இடமளிக்குமாறு கடந்த வருடத்திலிருந்து முஸ்லிம்கள் கோரி வருகின்றனர். கி;;ட்டத்தட்ட நூறு முஸ்லிம்கள் கொரோனாவினால் இறந்த பிறகும் ஒரு அதற்கான உரிமை மறுக்கப்பட்டே வருகின்றது. 

இதற்காக ஓரிரு முஸ்லிம் எம்.பி.க்கள் மட்டும் உழைக்கின்றனர் என்று சொல்வது தவறானது. மாறாக, ஓரிரு எம்.பி.க்கள்தான் தூங்குகின்றனர். மற்றைய (ஆளும் மற்றும் எதிர் தரப்பு) முஸ்லிம் எம்.பி.க்கள் அனைவரும் தமக்கு இயலுமைக்கு  அமைய முயற்சிக்கின்றனர். நீதி அமைச்சர் அலிசப்ரி போன்றோர் பகீரத பிரயத்தனங்களை செய்வதாக தெரிகின்றது. 

ஆனால், ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸூம் சரி,  றிசாட்டின் ளமக்கள் காங்கிரஸூம் சரி, அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸூம் சரி ஏனைய முஸ்லிம் எம்.பிக்களும் சரி இலங்கையில் ஒரு பலமான முஸ்லிம் அரசியலை நிலை நிறுத்தவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளாக அவர்கள் இருந்தார்களேயொழிய முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல்வாதிகளாக தம்மை முன்னிறுத்தவில்லை. 

பல வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைக்கத் தொடங்கிய போது விழித்துக் கொண்டிருந்தால், 'நக்குண்டு நாவிழக்காமல்' பேரம்பேசும் அரசியலை சரியாகச் செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்படாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு மாற்றமான அரசியலைச் செய்ததன் விளைவையே இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்கொண்டுள்ளது. இதற்காக, தற்போதைய எம்.பிக்கள் மட்டுமன்றி முன்னாள் முஸ்லிம் எம்;.பி;க்களும்  பொறுப்பாளிகள்.  

சகோதர ஒத்துழைப்பு 

இதனையும் தாண்டியே இப்போது பல்பக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முஸ்லிம் எம்.பி.க்களின் முயற்சிக்கு தமிழ், சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்கின்றனர். பெருமளவான சிங்கள விஞ்ஞானிகள், மருத்துவர்கள் 'நிலத்தடியில் வைரஸ் பரவாது' என பகிரங்கமாக குறிப்பிடுகின்றனர். அத்துடன் கிறிஸ்தவ பாதிரியார்கள், சில பௌத்த பிக்குகள் கூட முஸ்லிம்களின் கோரிக்கைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர். 

இவ்வாறு, நிலத்தில் அடக்குவதால் வைரஸ் பரவாது என்பதை கணிசமான மக்கள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு பலமான, காத்திரமான தெளிவுபடுத்தல்கள் முன்வைக்கப்பட்டாயிற்று. ஐ.நா. அலுவலகம், சில சர்வதேச நாடுகள், பொது அமைப்புக்கள் மாத்திரமன்றி, முக்கியமான பௌத்த மகா சங்கங்களான அமரபுர, ராமான்ய நிக்காயாக்கள் கூட 'அவரவர் சமய நம்பிக்கையின் படி அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு' கோரியுள்ளன. 

நிலத்தடியில் வைரஸ் பரவாது என்பதற்கு ஆயிரத்தெட்டுக் காரணமும் விளக்கமும் இருக்கத்தக்கதாக, 'பரவலாம், நடக்கலாம்..' என்ற கோணத்தில் சிலர் கருத்துக்களை முன்வைத்து வருவதையும் காண முடிகின்றது. அதாவது, ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி வழங்காமல் விடுவதற்கு ஏதாவது புதுக் காரணங்களை இவர்கள தேடுகின்றனர். 

இந்நிலையில், இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி இதுபற்றி தெளிவான ஒரு அறிக்கையை இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. 'கொரோனாவினால் மரணிப்போரின் உடல்களை நிலத்தில் புதைப்பதால் வைரஸ் பரவும் என்பதற்கு எவ்வித உறுதியான ஆதாரமும் கிடையாது. கொவிட்-19 தொடர்பாக இதுவரை 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு தடவையேனும் இறந்த உடலில் இருந்து வைரஸ் பரவியதாக இதுவரை அறிக்கையிடப் படவில்லை' என்று இச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

'வைரஸ் தொற்றுறுதி செய்யப்படும் உடல்களுக்கான மரணச் சடங்கின் போது, உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் போன்றவற்றின் இறுக்கமான சுகாதார விதிகள் கடைப்பிடிக்கப்படுவது கட்டாயமானது. மற்றப்படி, உடல்களை புதைக்கவோ அடக்கம் செய்யவோ முடியும் என்பது தெளிவான விடயமாகும்' என்றும் மேற்படி கல்லூரி குறிப்பிட்டுள்ளது. 

இதன்பின்னர், இலங்கை மருத்துவ சங்கம் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை நிலத்தில் புதைப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. 

மூடுமந்திரமான நிபுணர்குழு

இப்படி, எல்லா தரப்பினரும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்க இதுபற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் நடவடிக்கைகளே மூடுமந்திரமாக உள்ளன. இக்; குழுவின் தலைவர் பேராசியர் ஜெனிபர் பீரிஸ் என்பதைத் தவிர அதில் உள்ளடங்கியுள்ளவர்கள் யார் என்பது பற்றியோ, அவர்களது துறைசார் தகுதி பற்றியோ சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவில்லை.  

இவ்வாறிருக்க, டிசம்பர் 28 ஆம் திகதி மேற்படி நிபுணர் குழு தமது சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது. அந்த அறிக்கையை நாட்டிலுள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் பகிரங்கப்படுத்துவதெல்லாம் ஒருபுறமிருக்க, 'அவ்வறிக்கை கிடைத்திருக்கின்றது, தீர்மானம் சில தினங்களில் அறிவிக்கப்படும்' என்று கூட அரசாங்கம் இரு தினங்களாக அறிவித்திருக்கவில்லை.

இந்நிலையில், பேராசிரியர் ஜெனீபர் பெரேரா தலைமையில் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நிபுணர் குழுவானது, கொரோனாவினால் மரணிப்போரின் உடல்களை இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் புதைக்கவோ எரிக்கவோ முடியும் என்று சிபாரிசு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், மற்றைய நிபுணர் குழு எரிக்கவே வேண்டும் என்ற சிபாரிசை முன்வைத்துள்ளதால் இது விடயத்திலும் இரட்டை நிலைப்பாடும் முரண்பாடும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன. 

இதன்பின்னர், பிரதமர் அலுவலகம் அவசர அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அறிக்கை இரு நிபுணர்கள் குழுவினதும் சிபாரிசு அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் அலுவலகம், எவ்வாறிருப்பினும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. இதன்மூலம் எதனைச் சொல்ல வருகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

ஆனால் ஒரு விடயம் மட்டும் தெளிவானது. அதாவது, நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையின் பிரகாரமே அரசாங்கம் தனது தீர்மானத்தை எடுக்கும். இன்னுமொரு வகையில் கூறினால், அரசாங்கம் என்ன நினைக்கின்றதோ அதுவே நிபுணர் குழுவின் தீர்மானமுமாக பகிரங்கப்படுத்தப்படும்;. இந்த யதார்த்தம், இலங்கை அரசியல் பற்றிய அறிவுள்ளோருக்கு புரியும். 

2020 ஏப்ரல் மாதத்தில் இருந்த சூழலில் அரசியல் ரீதியாகவோ அல்லது விஞ்ஞான ரீதியாகவோ உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருந்தது. பிறகு, அரசாங்கம் இது விடயத்தில் இறங்கி வந்த போதும், 'உடல்களை அடக்கவும் முடியும்' விஞ்ஞான அடிப்படையில் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. மாறாக, அரசியல் தீர்மானமாக அடக்கம் செய்யும் அனுமதியை வழங்க முடியாது. 

ஆனால் இப்போது சிங்கள மக்களுக்கு போதுமான விளக்கங்களை சிங்கள ஆய்வாளர்களே கொடுத்திருக்கி;ன்றனர். சிங்கள, தமிழ் மக்களில் கணிசமானோர் முஸ்லிம்களி;ன் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகக் கருதுகின்றனர். கத்தோலிக்க மக்களும் முஸ்லிம்களின் போராட்டத்தில் கைகோர்த்திருக்கின்றனர். எனவே அரசாங்கம் முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான களம் முன்னரை விட இப்போது சாதகமாக உள்ளது. 

இரட்டை நிலைப்பாடு

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அவருக்கு நெருக்கமான அரசியல்வாதிகளும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இறுக்கமான கட்டுப்பாடுகள், சுகாதார விதிமுறைகளின் கீழ் அடக்குவதற்கு அனுமதி வழங்குவது பற்றி சாதகமான நிலைப்பாட்டில் உள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொங்கிறீட் அல்லது பைபர் கல்லறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், ஜனாஸாக்களை அடக்குவதற்கு உயரமான இடங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்தப் பின்னணியில், 'இதோ முஸ்லிம்களுக்கு சந்தோசமளிக்கும் வர்த்தமானி இன்று வரும், நாளை வரும்' என்று வெளியாகும் 'கோயாபல்ஸ்' கதைகளை நம்பி, முஸ்லிம் சமூகம் ஏமாறிக் கொண்டிருக்கின்றதே  தவிர, அப்படி எந்த நல்ல செய்திகளும்; இதுவரை வந்து சேரவில்லை. 

இவ்விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதமானது, அரசாங்கத்திற்குள் இரண்டு நிலைப்பாடுகளைக் கொண்ட இரு வேறு பிரிவுகள் இருப்பதை காட்டுகின்றது. பிரதமரைச் சார்ந்து ஒரு குழுவினரும் மாற்றுக் கருத்துடன் இன்னுமொரு தரப்பும் இருந்து கொண்டு, ஜனாஸா நல்லடக்கத்திற்கு எதிராக காய்களை நகர்த்துவதாகச் சொல்லப்படுகின்றது. அப்படியில்லை என்று யாராவது சொன்னால், அரசாங்கமே இரட்டை வேடம் போடுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேணடியிருக்கும்.  

குறிப்பாக, தமிழர்களின் பிரச்சினை பற்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேரிடையாக பகிரங்கமான கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று தமிழ்த் தரப்பு கூறி வருகின்றது. அதுபோலவே, ஜனாஸாக்களை மாலைதீவுக்கு அனுப்ப ஜனாதிபதி முஸ்தீபுகளைச் செய்தார் என்றாலும், ஜனாஸா  எரிப்பு விவகாரம் பற்றி பகிரங்கமாக ஆறுதலான கருத்தொன்றை வெளியிடவில்லை என்பதை சாதாரண முஸ்லிம் மக்களும் குறிப்பெடுத்துக் கொண்டுள்ளனர்.

பிரதமரும் வேறு பலரும் முஸ்லிம்களின் கோரிக்கை விடயத்தில் சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்கள் என்பதும், இன்னுமொரு தரப்பு தடையாக இருக்கின்றது என்பதும் உண்மையான தகவல் என்றால், அந்த மறுதரப்பு பிரதமருக்கு சமமான பலமுள்ளதாக இருக்க வேண்டும். அப்படியானால், அந்த மறுதரப்பிற்கு அரச உயர்மட்டத்தின ஆசீர்வாதம் இருக்கின்றதா என்ற கேள்வி முஸ்லிம் அரசியல் பரப்பில் இப்போது முன்வைக்கப்படுகின்றது. 

இழுத்தடிக்கும் போக்கு

மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் பொதுஜனப் பெரமுண அரசாங்கம் ஆட்சியமைத்தது. 20ஆவது திருத்தத்தையும் நிறைவேற்றியது. ஆகவே, முஸ்;லிம்களின் கோரிக்கையை நிறைவேற்ற, நிபுணர் குழுவின் அறிக்கை என்பது ஒரு பெரிய விடயமே அல்ல என்பது சிறுபிள்ளையும் அறிந்த அரசியலாகும். 

ஆனபோதும், ஜனாஸா எரிப்பு விவகாரம் மேலும் பூதாகரமாக்கப்படுகின்றதே தவிர இதற்கு ஒரு நியாயமான தீர்வு இன்னும் கிட்டவில்லை. பல வைத்தியசாலைகளில் ஜனாஸாக்கள் தொடர்ந்தும் எரிக்கப்படுகின்றன. 'எரிக்கும் நடைமுறையே இன்னும் நாட்டில் நடைமுறையில் உள்ளதாக' சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீளவும் அறிவித்துள்ளார். 'கடல்வற்றி கருவாடு தின்ன காத்திருக்கும் கொக்கு' போல முஸ்லிம்களின் நிலை மாறியிருக்கின்றது. 

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தீர்மானம், கடும்போக்கு சக்திகளை திருப்திப்படுத்தல், ஆட்சியில் அதிர்வுகளை தவிர்த்தல் ஆகியவற்றுக்கும் முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் தொடர்புகள் உள்ளனா? எனவே ஜனாஸா விவகாரத்திற்கு தீர்வுகாண அரசாங்கம் 'நல்லநாள்' பார்க்கின்றதா? என்றும் புரியவில்லை.

முட்டாள்தனம் வேண்டாம்

எவ்வாறிருப்பினும், முஸ்லிம்கள் இவ்விவகாரத்தை மிகக் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. ஜனாஸாக்களை பொறுப்பேற்பதில்லை என்ற நூதன போராட்டத்திற்கு சமாந்திரமாக, 'வெள்ளைத் துணி' கட்டும் சாத்வீக போராட்டத்தையும் முஸ்லிம் சமூகம் முன்னெடுத்தது. இவற்றுக்கு சகோதர இனங்களின் ஆதரவும் கிடைத்தது. வெளிநாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இது அரசிற்கு பெரும் சிக்கலை தோற்றுவித்தது. 

இந்நிலையில், எதிர்க்கட்சி ஏற்பாட்டில் பொரளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமைந்தது. ஆனால், இதற்குப் பிறகு இவ்விவகாரம் வேறு ஒரு பரிமாணம் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இனவாதிகள் இவ்விடயத்தை கையிலெடுத்துள்ளதுடன் பிக்குகளும் கடும்போக்காளர்களும் ஜனாஸாக்களை எரிக்கவே வேண்டுமென்று ஏட்டிக்குப்போட்டியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைக் காண முடிகின்றது. 

அரசாங்கத்திற்குள் இரட்டை நிலைப்பாடு காணப்படுகின்றது. கடும்போக்குவாத பௌத்த பிக்குகள் சிலர் இதனை எதிர்க்கின்றனர். ஆனால், அதைவிட அதிக பலம்கொண்ட அமரபுர மற்றும் ராமான்ய மகா நிக்காயாக்கள், அடக்குவதற்கு இடமளிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஏன்? சுpல சிங்கள வைத்தியர்கள் எதிர்;க்கின்ற போதிலும் அதைவிட அதிகமான சிங்கள விஞ்ஞானிகள் முஸ்லிம்களுக்கு பக்கபலமாக நிற்கின்றனர். எனவே நிலைமைகளை குழப்பிவிடக் கூடிய வாய்ப்புள்ளதால் முஸ்லிம்கள் முட்டாள்தனமான நகர்வுகளைச் செய்யக்கூடாது.

வெகுஜனப் போராட்டமாக, சாத்வீக வழியில் போராடுவது நல்ல முயற்சி. ஆனால் அரசியல் சாயம் பூசுவதோ அல்லது சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் சிங்கள மக்களால் வேறுகண்ணோட்டத்தில் பார்க்கப்படும் குறிப்பிட்ட முஸ்லிம் பெயர்தாங்கி அமைப்புக்கள் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடாத்துவதோ இன்னும் இனவாதிகளை சூடாக்குவதுடன், நிலைமைகளை குழப்பிவிடும். இதனால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமூகம்தான். 

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 03.01.2021)

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK