சுஐப் எம்.காசிம் – 

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் பொருளாதாரம், மதம், அரசியல் என்பவற்றில் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வர இருக்கிறது. இக்கொடிய கொரோனாவை ஒழித்துக்கட்டி, உலகைப் பழைய இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கான விஞ்ஞான முயற்சிகள் வெற்றியின் வாயிலுக்கு வருவதாகவே நம்பப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தியாவின் பெரும் பிரயத்தனங்கள், இந்த வாசலை விரைவில் திறக்கலாம். அயல்நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷே், மியன்மார், பூட்டான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை என்பவற்றுக்கும் முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசிகளை இந்தியா வழங்கவுள்ளது. 

அயல்நாடுகளிலும் கொரோனாவை ஒழித்தால்தானே, இந்தியாவுக்கும் பாதுகாப்பு. இதனால்தான், சுற்றத்தார்களுக்கு முன்னுரிமையோ அல்லது வேறு ஏதும் இதிலுள்ளதா? அவ்வாறு இருந்தாலும் வெளிப்பார்வைகளுக்கு இவை, இப்போது தெரியப்போவதில்லை. ஒரு வகையில், அடையாளம் தெரியாமல் அயல்நாடுகளுக்கு, ஆளுமையை புலப்படுத்தும் ராஜ வியூகங்களும் இதில் இருக்கலாம். இந்து சமுத்திர அயல்நாடுகள், இந்தியாவை மீறிச் செயற்படுவதன் அசாத்தியங்கள் இந்த உதவிகளில் மறைமுகமாக உணரச் செய்யப்படுகின்றன. 

ஜெனிவா கூட்டத் தொடரைக் குறிவைக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள், இது பற்றித்தான் சிந்திக்க நேரிடுகிறது. இலங்கையின் விவகாரங்களை சர்வதேசமயப்படுத்துவதில், இந்தியாவின் பங்களிப்புகளை விட வேறெந்த நாடுகளாலும் அதிகமாகச் செய்ய முடியாது. இந்த நம்பிக்கைதான் இன்றளவும் இருந்து வருகிறது. இதுதான், வௌிநாடுகள் வாழ், இலங்கை இஸ்லாமிய உணர்வாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது. எனினும், கிடைக்கும் சந்தர்ப்பங்களை கைவிடாமல் பயன்படுத்தும் இவர்களின் முயற்சிகள், மதத்திலுள்ள உறுதிப்பாட்டுக்கான நிலைப்பாடுகளையே உணர்த்துகிறன. இதனால்தான், இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமரின் கவனத்திற்கும் ஜனாஸாக்களின் நல்லடக்க கோரிக்கையை இவர்கள் கொண்டுவந்துள்ளனர்.

நல்ல விடயம்தான், நடக்குமா? என்றுதானே மனம் விரக்தியடைகிறது. பாகிஸ்தானின் அரசியல், உள்நாட்டில் பலமாக இருந்தாலும் அயல்நாடுகளில் ஆதிக்கம் அல்லது தாக்கம் செலுத்தியதாகச் சரித்திரம் இல்லையே! அவ்வாறு, செலுத்துவதானாலும் சீனாவின் சாயலில் காய்கள் நகர்த்தப்பட்டதுதான் கடந்த கால வரலாறுகள். ஜெனிவா அமர்வுகளில் தொடர்ந்தும் இலங்கையைக் காப்பாற்றி வரும் பாகிஸ்தானுக்காகவாவது, முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க விடயத்தை (கொரோனா) சாத்தியமாக்க இலங்கை அரசு சிந்திக்குமா? 

இந்தக் கோணத்திலேதான், வௌிநாடு வாழ் இலங்கை இஸ்லாமிய உணர்வாளர்கள் சிந்திக்கின்றனர். இதிலிருந்து ஒன்றை விளங்க முடிகிறது. இலங்கை முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதை விடவும் இஸ்லாமிய உணர்வில் (மத) ஒன்றுபடுத்துவது இலகுவானது. வௌிநாடு வாழ் இலங்கை மத உணர்வாளர்களும் இதையே உணர்த்துகின்றனர். வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டத்தில் சிக்கித் தவித்த முஸ்லிம்களின் அரசியல் நகர்வுகளுக்காக இதுநாள் வரைக்கும் குரல் கொடுக்காத இவர்கள், இன்று முழு இலங்கை இஸ்லாமியருக்கும் உழைக்கப் புறப்பட்டுள்ளனர். எனவே, “முஸ்லிம்” என்கின்ற சொற்றாடல் அரசியலுக்கும், “இஸ்லாமியர்” என்ற சொற்பதம் மதத்துக்கும் பாவிக்கப்படும் அத்தியாயமே இனி ஆரம்பிக்கப் போகிறது.

இந்த மத (இஸ்லாம்) உணர்வுகள்தானே வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டத்தில், முஸ்லிம்களை வேறு இனமாகப் பார்க்கவும் வைத்திருந்தது. அன்றிருந்தாவது, இலங்கையின் முஸ்லிம் அரசியல், இஸ்லாமிய உணர்வு, உரிமைகளை முன்னிறுத்தி நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நகர்ந்திருந்தால் கிழக்கு, தெற்கு என்ற பேதம் ஏற்பட சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது. தென்னிலங்கையப் பின்புலமாகக் கொண்டுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தேவைகளைப் பொருட்படுத்தாது செயற்பட்டதும் இந்த அசாத்தியங்கள் கருதித்தானோ! இதனால், தனித்துவ தலைமைகள் தோன்றியது எல்லாம் வேறு கதைகள். 

தென்னிலங்கை முஸ்லிம்கள் அரசியலை விடவும் மத ரீதியில்தான் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். 2015இல் ஆட்சி மாற்றத்துக்காக தூக்கிப்பிடிக்கப்பட்டதும் மத உணர்வுகள்தானே! இன்று இந்தத் தனித்துவங்களும் தென்னிலங்கை வாடையுடன் செயற்படுவதுதான், முஸ்லிம் அரசியலை மேலும் குழப்பியடித்துள்ளது. எனவே, சிறுபான்மையினருக்கு அபிவிருத்தியைத் தவிர எதுவும் கிடையாதென, ராஜபக்ஷக்களின் அரசு கூறுகையில், தெற்கு, கிழக்கென அரசியலில் வேறுபடத் தேவையில்லை.

இஸ்லாமிய உணர்வை (மத) முன்னிலைப்படுத்தியாவது, தேசப்பற்றை வௌிப்படுத்துவதுதான் முழு முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு. சிறுபான்மையினரின் அரசியல் கோஷங்கள் பிரிவினையாகவும், மதப் பற்றுக்கள் அடிப்படைவாதமாகவும் காட்டப்படும் இன்றைய அரசியல் சூழ்நிலையில், எதைத் தேர்ந்தெடுப்பதென்ற குழப்பமே நீடிக்கிறது.

இதையுணர்ந்த, வௌிநாடு வாழ் இலங்கை இஸ்லாமிய உணர்வாளர்கள்தான், மத உணர்வுகளுக்கு குரல் கொடுக்கின்றனர். இருந்தும் அரசாங்கம் ஒன்றை மட்டுமாவது புரிந்துகொள்ளுமா? முஸ்லிம்களின் அரசியல் தேவை என்பது, ஆடியடங்கும் வாழ்க்கையைப் போன்றது. மத உரிமை, உணர்வுகளோ ஆறடி நிலத்துக்குள் அடங்கக் கோருவது. இந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் பிரதமரின் வருகை வென்று தருமா? என்பதுதான் இவர்களின் ஆதங்கம்.

ஜெனிவாவில் இதுபற்றிப் பேசுவதற்குத் தயாராகவுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு, இது பற்றிய புரிதல்களை ஏற்படுத்தும் பொறுப்பும் இன்று, இந்த வௌிநாடு வாழ் இஸ்லாமிய உணர்வாளர்களிடமே ஒப்படைக்கப்படுவதே பொருத்தமானது.