விரல் நீட்டப்படும் சமூகங்கள் விவேகத்துடன் செயற்படுமா?


சுஐப் எம். காசிம்-

சிந்தனை வௌிகளில் ஒருமிக்க வேண்டிய ஒடுக்குமுறைகளுக்குள் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் வந்துள்ளன. நாட்டின் அண்மைக்கால நிலவரங்கள் அனைத்தும், சிறுபான்மை சமூகங்களை மாற்றாந்தாய் மனநிலைக்குள் இழுத்துச் செல்வதாக உள்ளதென்பதே, தமிழ் மொழி பேசுவோரின் கருதுகோள்கள். பெரும்பான்மைவாத அரசியல் சித்தாந்தங்களால் பலப்பட்டுள்ள இந்த அரசாங்கத்தில், சிறுபான்மையினருக்கு என்று எதையும் சாதிக்க இயலாதெனவும் இச் சமூகங்களுக்குள் பேசப்படுகிறது.

மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கருதுகோள்களும் இதுதான். ஆனால், இந்தக் கருதுகோள்கள் எதுவரை இருக்கப்போகிறது? நல்லடக்கத்துக்கான மத அனுமதி வரையா? அல்லது ஜெனிவா அமர்வில், தமிழர்களின் அரசியல் காய்நகர்த்தல்கள் பலப்படும் வரையா? இதுதான், சிறுபான்மை சமூகங்களுக்கு முன்னாலுள்ள வினாக்கள். ஒருவரை ஒருவர் பிரித்துவிட்டு எதையாவது சாதிப்பதற்கு பெரும்பான்மை சக்திகள் முயற்சித்தால், இச்சமூகங்களில் ஒன்று தனித்து விடப்படுவது உறுதி. வலுக்கட்டாயத்தில் இச்சமூகங்கள் ஒன்றிக்கிறதா? அல்லது சொந்தத்  தேவைகளை சந்தர்ப்பவாதத்தால் சாதிக்கத் தீர்மானித்துள்ளனரா? என்ற சந்தேகங்கள் இவர்களுக்குள் இருக்கும் வரை, பிரித்தாளும் தந்திரங்களுக்கு இச்சமூகங்கள் பலியாகவே செய்யும். எந்தச் சந்தர்ப்பங்களிலும், தனித்தனி வழி செல்வதில்லை என்ற முடிவில் இயங்க உறுதிப்படுவது அல்லது பிரித்தாளும் தந்திரங்களுக்குப் பலியாகாத வியூகங்கள், விவேகங்களில் இச் சமூகங்கள் தனிக் களப்பணி செய்வது. இப்போதைய சூழ்நிலையில் இவற்றில் ஒன்றைத்தான் சிறுபான்மையினர் தெரிவுசெய்ய வேண்டும்.
 
விரும்பியோ, விரும்பாமலோ விரல் நீட்டி குற்றம்சாட்டுமளவுக்கு இச்சமூகங்கள் சார்பான சாயம்பூசப்பட்ட போராட்டங்கள், தாக்குதல்கள் நாட்டில் இடம்பெற்றிருப்பதால், என்னைப் பொறுத்தவரை தனித்தனி வியூகம், விவேகங்களில் செயற்படுவதுதான், இன்றைய கள நிலவரங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். இதை ஒரு மொழிச் சமூகங்களின் ஒன்றிணைவுக்கு எதிரான கருத்தாடலென எவரும் நினைத்துவிடக் கூடாது.
 
கடும்போக்குவாதம், பேரினவாதங்களின் விழிப்பு, எழுச்சிக்கு மத்தியில், சாயம்பூசப்பட்ட சமூகங்களின் சந்திப்பு மற்றும் சிந்திப்பெல்லாம் உரிமைகளை உதறித்தள்ளும் மனநிலைக்குத்தான் பேரினவாதத்தை அழைத்துச் செல்லும். இலங்கைக்கு வௌியே, உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத பௌத்த, தேரவாத அரசுக்கு ஆபத்தான சக்திகளாகத்தானே இச்சமூகங்களின் உரிமைக் குரல்கள், அரசியல் சிந்தனைகள் காட்டப்படுகின்றன. இதற்குள்ளா நாம் மீள ஒன்றிணைவது?

தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள், மூன்று தசாப்தங்களாகத் தீர்வின்றி அலைக்கழிக்கப்படுவதற்கு சில விவேகமில்லா முன்னெடுப்புக்களும் பங்களித்தே இருக்கின்றன. இன்னமுமா இத்தவறுகளை இச்சமூகங்கள் தேர்ந்தெடுப்பது.? மேலும், ஜனாசாக்களின் நல்லடக்கம்  என்பது, இன்று அவசரமாகத் தேவைப்படும் தீர்வு. கொரோனா முடிந்த பின்னர், இப்பிரச்சினைக்குத் தீர்வு தேவைப்படாதே! எனவே, இதை ஜெனிவா வரை கொண்டுசென்று, வருடக் கணக்கில் இழுத்தடிப்பது விவேகமான செயற்பாடு இல்லையே! இதைத்தான் சொல்கிறோம். இழுத்தடிக்கும், காலத்தைக் கடத்தும், பெரும்பான்மை உதறித்தள்ளும் செயற்பாடுகளில் சிறுபான்மை சமூகங்கள் தூண்டப்படலாகாது.

ஒருகாலத்தில் ஒன்றுபட்டிருந்த இச்சமூகங்கள், பிரிந்து சென்ற மனத்தாங்கல்கள் இவர்களிடம்  இல்லாமலில்லை. இவ்வாறு பிரிந்தவர்களாவது, தத்தமது சமூகங்களுக்குள் ஒற்றுமைப்பட்டனரா? இல்லையே! இந்த லட்சணத்தில் சமூகங்களின் ஒற்றிணைவு, ஒற்றுமை சாத்தியமென, இத் தலைமைகளால் எவ்வாறு நிரூபிக்க முடியும்? இது முடியும் வரைக்கும் தனித்தனி வியூகங்களே சமூகக் களங்களைப் பலப்படுத்தும்.

சந்தர்ப்பவாதத்திலான ஒன்றிணைவுக்கு சிறுபான்மைச் சமூகங்கள் சென்றுவிடக் கூடாதென்பதே புத்தி ஜீவிகளின் நிலைப்பாடு. ஒன்றுபடுதலையே  எம்மை ஒடுக்குவதற்கான கருவியாக பெரும்பான்மைவாதம் பாவிக்கையில், சந்தர்ப்பத்துக்காக தற்காலிகமாக ஒன்றுபட்டு, இன்னும் எம்மை அழித்துக்கொள்வதா? இதுபற்றித்தான், இச்சமூகங்களின் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் சிந்திக்க வேண்டும்.

உண்மையில் ஆட்சியாளர்களின் மனநிலைகள், தென்னிலங்கையின் அபிலாஷைகள் பற்றி பெரிதாக தமிழ், முஸ்லிம் தலைமைகள் தெரிந்திருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் இன்னும் வௌிநாடுகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நம்பியிருக்கமாட்டார்கள். அரசியல் வாஞ்சனையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியை இழுத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் முகவரிக்கு நல்லதுதான், ஆனால் யதார்த்தத்துக்கு எட்டாதது. இவை, தேவையில்லை என்பதும் இல்லை. இவற்றைக் கையாளும் முறைகளில், காய் நகர்த்தும் இலக்குகளில் விவேகம் கலந்த அவதானம் அவசியம்.

மாலைதீவில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது பற்றிக் கருத்தாடல்கள் நிலவிய காலத்தில் கிளம்பியடித்த சக்திகள், இன்று அங்கேயாவது அடக்கம் செய்ய அனுமதி கிடைக்காதா? என ஏங்குமளவுக்கு நிலைமைகள் இறுகியுள்ளன. இருபதுக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்,பி க்கள் இரண்டும் கெட்டான் நிலைக்குச் சென்றது மட்டுமன்றி, நம்பிக்கையுடனிருந்த ஒரு சொற்பத் தொகையினருட்பட ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமே விரக்திக்குள் மூழ்கிக் கிடக்கிறது.

எதை முதலில் செய்வது? என்றாவது முஸ்லிம் சமூகத்தின் அரசியல், மதத் தலைமைகள் சிந்திக்காதமை கவலைக்குரியதுதான். "அப்படி என்ன இதில் பெரிதாகச் சிந்திப்பதற்கு உள்ளது? மதக் கடமையைத்தானே கேட்கிறோம்" என்கின்றனர் சிலர். அரசியல் கலக்காது, அந்நிய சக்திகளை இணைக்காது இதைக் கேட்பது பற்றிச் சிந்தித்தாவது, மத உரிமைகளைப் பெறுவதுதான் உள்ள வழி. நல்லடக்கம் எங்கு நடந்தால்தான் என்ன? மண்ணறைக்குள் சென்று, மத நம்பிக்கையின் பிரகாரம் மறுமை வாழ்வை ஆரம்பித்தால் போதும்தானே! என்றுதான் இன்றைய நிலைமைகள் சிந்திக்க வைக்கின்றன.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK