இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட 20 நாட்களே ஆன சிசு தகனம் செய்யப்பட்ட விவகாரத்தில் தங்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, உச்ச நீதிமன்றில் குழந்தையின் பெற்றோர் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அது பல்வேறு சட்ட சிக்கலுக்கும் வாய்ப்பாகலாம் என சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
கொழும்பில் வசிக்கும் எம்.எப்.எம். பாஹிம், என்.எம். பாத்திமா சப்னாஸ் ஆகிய குழந்தையின் பெற்றோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், குழந்தையின் உடலை தகனம் செய்த விவகாரத்தில் சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தங்களுடைய குழந்தையின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையை விசாரணைக்கு உட்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கோரியுள்ளனர்.
அந்த மனுவில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், குழந்தை சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலையான ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர், சுகாதார அமைச்சர், கொவிட் ஒழிப்பு ராஜாங்க அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
"எங்கள் குழந்தை கோவிட் தொற்றுக்கு உள்ளானதாக கூறப்பட்டதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆனால் கோவிட் தொற்று காரணமாகத்தான் குழந்தை மரணித்ததாக வைத்தியசாலைத் தரப்பு கூறியிருக்கிறது. அதனால் தனியார் வைத்தியசாலையில் ஒரு முறை பிசிஆர் பரிசோதனை செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு கோரினோம்.. ஆனால் அதை வைத்தியசாலை ஏற்கவில்லை".
"அது மட்டுமன்றி மரணித்த எங்கள் குழந்தையை கடைசி வரை எம்மிடம் காண்பிக்கவில்லை. குழந்தையை தகனம் செய்வதற்கான அனுமதியை கோரி, அதற்கான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு எங்களைக் கேட்டார்கள். நாங்கள் கையெழுத்திடவில்லை. ஆனாலும், அவசர அவசரமாக எங்கள் பிள்ளையின் உடலை தகனம் செய்து விட்டனர். இது மிகப்பெரும் அடிப்படை உரிமை மீறலாகும். அதனால்தான், உச்ச நீதிமன்றில் இவ்வாறான ஒரு மனுவை நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம்" என்றார் குழந்தையின் தந்தை பாஹிம்.
வழக்கு தொடர்ந்த சட்டத்தரணிகள் |
தர்க்க ரீதியான மற்றொரு வழக்கு
இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கோவிட் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அந்த நோயாளர்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, 'நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்படும் வரை, கோவிட் நோயாளர்களை அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாது' என்ற கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரி, அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் பொதுத் தொல்லை வழக்கு ஒன்றினை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரை அடக்கம் செய்தால், அந்த உடல்களிலுள்ள கோவிட் வைரஸ் - நிலத்தடி நீரைப் பாதிக்கும் என இலங்கை அரசு சமீபத்தில் தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், எஸ். ஆப்தீன், ஏ.எல். அலியார், பி.எம். ஹுசைர் மற்றும் ஏ.எல். ஹஸ்மிர் ஆகிய நபர்கள் இணைந்து மேற்படி வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகிய நால்வர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கோவிட் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள்; அரசு சார்பாக நீதிமன்றில் சமர்ப்பித்திருந்த 10 நிபுணர்களின் பிரமாணப் பத்திரங்களை, பாலமுனை வைத்தியசாலைக்கு எதிரான வழக்கில் மனுதாரர்கள் சான்று ஆவணங்களாகச் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி 10 நிபுணர்களும், 'கோவிட் தொற்று காரணமாக மரணிப்பவர்களைப் புதைப்பதனால் நிலத்தடி நீர் பாதிக்கும்' என்று உறுதிப்படுத்தி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்த வழக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை (21ஆம் திகதி) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினம் வழக்கின் பிரதிவாதிகள் நால்வரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் |
வழக்கின் நோக்கம்: வழக்கறிஞர் கருத்து
இந்த நிலையில், இந்த வழக்குத் தொடுநர்களில் ஒருவரான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் - பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவிக்கையில்; கோவிட் தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் நிலையொன்றினை அரசுக்கு ஏற்படுத்துவதற்காகவே, இவ்வாறான வழக்கு ஒன்றினை தாக்கல் செய்ததாகக் கூறினார்.
"கோவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்தால், நிலக்கீழ் நீர் பாதிக்கும் என நாங்கள் கூறவில்லை, அரசாங்கம்தான் கூறியுள்ளது. அந்தக் கூற்றை வைத்துதான் இந்த வழக்கை நாம் தாக்கல் செய்திருக்கிறோம்.
இந்த வழக்கில், 'கோவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்தால் நிலக்கீழ் நீர் பாதிப்படையும் என அரசு தரப்பு வாதிடுமானால், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் நோயாளர்களின் கழிவுகளாலும் நிலக்கீழ் நீர் பாதிப்படையும் என்கிற முடிவுக்கு வர முடியும். ஒருவேளை, அப்படி நிலக்கீழ் நீர் பாதிப்படையாது என அரசு தரப்பு வாதிட்டால், கோவிட் காரணமாக மரணிப்போரின் உடலை அடக்கம் செய்தாலும் நிலக்கீழ் நீர் பாதிப்படையாது என்கிற தர்க்க ரீதியான முடிவுக்கு வர வேண்டியிருக்கும்.
அவ்வாறான ஒரு முடிவு கிடைக்குனால், கோவிட் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டியிருக்கும்" என வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான சட்டத்தரணி அன்ஸில் மேலும் தெரிவித்தார்.
BBC
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK