(அஸீம் முஹம்மத்)
ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க, நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு சென்ற அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் அவரது குழுவினர், ஆணைக் குழுவுக்கு பல பரிசுப் பொதிகளை எடுத்து சென்றதை அவதானிக்க முடிந்தது.
சுமார் 20 பொதிகள் இவ்வாறு எடுத்து செல்லப்பட்டதுடன் அதில் 12 பொதிகள் ஆணைக் குழுவின் சாட்சி விசாரணை இடம்பெறும் மண்டபத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டதுடன் ஏனையவை, ஆணைக் குழுவுன் ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதை அவதானிக்க முடிந்தது.
அந்த பொதிகளில் பலவற்றை ஆணைக் குழுவின் சேவையாளர்கள் சிலரும் இணைந்து ஆணைக் குழுவுக்குள் அந்த பொதிகளை எடுத்து சென்றதை அவதானிக்க முடிந்தது.
"அந்த பொதிகளில் ‘ வட்டிலப்பம் ‘ இருந்ததாக பின்னர் அறிய முடிந்தது."
நீதிமன்றத்துக்கு சமமான கெளரவத்துடன் இடம்பெறும் சாட்சி விசாரணை இடம்பெறும் இடத்துக்குள் சாட்சியாளர் ஒருவர் இவ்வாறு வட்டிலப்பம் எடுத்து சென்றமை பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
ஆணைக் குழுவுக்குள் செல்லும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அண்மைக்காலமாக கொவிட் நிலைமை காரணமாக அந் நிலைமையில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் குறித்த வட்டிலப்பம் பொதிகளை எடுத்து செல்லும் போது ஆணைக் குழுவின் சேவையாளர்களும் தொடர்புபட்டிருந்ததால் எந்த பரிசோதனைகளும் இன்றி அவை உள்ளே எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
குறித்த பொதிகளை சோதனைச் செய்ததாகவும், அதில் வட்டிலப்பம் இருந்தமை உறுதியான நிலையில், ஏனைய நாட்களிலும் ஆணைக் குழுவின் சேவையில் உள்ளவர்கள் உணவுகளை உள்ளே எடுத்துச் செல்வதால், இதன்போதும் சேவையாளர்களும் சேர்ந்து எடுத்துச் சென்றதாலும் அதனை தடுக்கவில்லை என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
பின்னர், அந்த பொதிகள் திருப்பி அனுப்பட்டதாக ஆணைக் குழுவின் ஊழியர் ஒருவர் தெரிவித்த போதும், அவை திருப்பி எடுத்துச் செல்வதை நாம் காணவில்லை.
ஏற்கனவே பொதுபலசேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்ய அப்போது உலமா சபையின் பொதுச் செயலாளர் தொலைபேசியை எடுத்துச் சென்றமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான பின்னணியிலேயே இன்று வட்டிலப்பம் பொதிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை விமர்சனந்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று மாலை வரை ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, எந்த உத்தியோகபூர்வ அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK