"சாயம் பூசப்படும் சமயக் கிரியைகள்"? சாத்வீக வழிகள் வெற்றி பெறுமா?

 


-சுஐப் எம். காசிம்-

முஸ்லிம் சமூகத்தின் ஏக்கப் பெருமூச்சு, உலகளவில்,மனிதாபிமானத்தின் வாசலைத் தட்டிச் செல்கையில், வேறு விடயத்தை எழுதும் வழிகளின்றியே, இம்முறையும் கொவிட் 19 பற்றி எழுத நேரிடுகிறது.

"கோடைக்கு கொச்சி வெச்சி,குளுந்த தண்ணி நானூற்றி, மாரிக்கு செத்த, மன வருத்தம் தீருதில்ல தோழி". இது நாட்டார் கவி. நல்ல முயற்சிகள் பயனற்றுப் போனதன் பரிதாபம் இக் கவியில்,கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அவலத்தைப் போக்கும் பொருட்டும், இவ்வாறு நல்ல பல முயற்சிகள் நடக்காமலில்லை. ஆனால், இவற்றின் மீது பூசப்படும் சாயங்கள்தான், சந்தர்ப்பத்தை தட்டிவிடுமோ? என்ற அச்சத்தைக் கிளறி விடுகிறது.மிக நீண்ட காலமாக,இழுபறிப்படும் இந்த ஜனாஸா விவகாரம் முஸ்லிம் அரசியல் களத்தை கொதிப்பாக்கி வருகிறது.இதில் சமூக, ஏனைய தரப்புக்களின் பங்களிப்புக்கள் எவ்வாறுள்ளன, என்ற கேள்விகளுக்கு பதில்களைத் தேடுவது யார்? ஒருவாறு இரகசியமாக எதுவும் நடந்தாலும்,அதன் எதிரொலிகளையாவது காண முடியவில்லையே!

இன்றைய சூழலில் இழக்கப்படும், மிகப் பெறுமதியான மத நம்பிக்கையை (நல்லடக்கம்) வென்றெடுக்க முஸ்லிம் சமூகத்தின் மதத் தலைமைகள் எதைச் செய்துள்ளன?. எதையாவது, இத்தலைமைகளே செய்ய வேண்டும். ஏனெனில் அந்தளவிற்கு, நாட்டின் அரசியல் களம் தலைபுரண்டு, முகம் சுழித்துக் கிடக்கிறது. இதனால்,அரசியல் தலைமைகள் முன்னிற்கும் அத்தனை முயற்சிகளும் இனவாதிகள், மதவாதிகள் மற்றும் கடும்போக்கர்களின் கண்களுக்கு அரசியல் சூதாகவே தென்படுகிறது. 

இந்தச் சக்திகளின் ஆசீர்வாதத்தால் கொண்டு வரப்பட்ட இப்புதிய அரசியல் கலாசாரத்தில், இவ்வாறான பார்வைகள் தவிர்க்க முடியாதவைதான். இதற்காகவே மதத் தலைமைகள், இவ்விடயத்தில் முன்னிற்க வேண்டியுள்ளது. சிவில் சமூக அமைப்புக்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகளை வழிகாட்டுவதாகவும் தென்னிலங்கைக்கு ஒரு பார்வை உள்ளதால், நல்லடக்கத்திற்கான உரிமைக்கு,இத்தலைமைகள் முன்னிற்பதும் ஆரோக்கியமாக அமையப் போவதில்லை.

2015 க்குப் பின்னர், தென்னிலங்கையில் ஏற்பட்ட, இப்பார்வையைப் போக்குவதற்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இன்னும் பல தூரங்கள் பயணிக்க வேண்டியுள்ளமை, மூன்றாம் சமூகத்தின் பலவீனங்களில் ஒன்றுதான்.

எனவே, மத மற்றும் ஆன்மீக அமைப்புக்கள்தான், "கபன்" சீலைக்கான சாத்வீக வழிகளை முன்னகர்த்த வேண்டும். ராஜபக்ஷக்களின் நிர்வாகத்துக்கு இன்றுவரை ஓரளவு நெருக்கமாக உள்ள மூன்றாம் சமூகத்தின், முக்கிய சக்தியாக இதுதானுள்ளது. 

இந்நிலையில், தென்னிலங்கையிலிருந்து அந்நியப்பட்டுள்ள போதிலும், பொரளை கனத்தை மயான ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்றுள்ளதில், தெளிவுகள் சில பிறக்கத்தான் செய்கின்றன. நிச்சயமாக இது அரசியலாக இருக்காது. சிங்கள, பௌத்த தளங்களில் வேரூன்ற வேண்டிய தேவை இருக்கையில்,நாட்டையே சர்வதேசப் பொறிக்குள் சிக்க வைக்குமா? இங்குள்ள (ஐ.ம.ச) முஸ்லிம் தலைமைகளைத் தொடர்ந்தும் கட்டிப்போடும் முயற்சியாகவும் இதை நோக்க முடியாதே! உள்ளவர்களே, எதுவுமின்றி வழி தெரியாது விழி பிதுங்குகையில், இவர்கள் சென்று எதைச் சாதிப்பது? இருபதுக்காக நெருங்கி,நல்லடக்கத்தை சாத்தியப்படுத்தத் துணிந்த சாணக்கியங்களும் சத்தமின்றியே உள்ளனர். எனவே,இன்னும் சில தசாப்தங்களுக்கு இங்குதான் தலைமைகளின் இருப்பிடம் என்பது, ஐக்கிய மக்கள் சக்தி தலைவருக்குத் தெரியாததா? ஆனால், அரசியலென்று வந்துவிட்டால், ஆளுக்கொரு பங்கு அண்ணன், தம்பிக்கு என்றில்லையே! "ஆதாயம் இல்லாட்டி,செட்டியார் ஆற்றோடு போயிருக்கார்" என்ற கதையாகவே ஐ.ம.ச வின் கள நிலைமைகள் தடுமாறுகின்றன.

இங்குதான்,மதத் தலைவர்களை இணைத்த ஒன்றுபடல் அவசியம் என்கிறோம்.

நல்லடக்கத்தில் நம்பிக்கை உள்ள "இப்ராஹிமிய" மார்க்கத்தினரில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். முஸ்லிம்களுக்கு இவ்விடயத்திலிருக்கும் விட்டுக் கொடுக்க முடியாத இறுக்க மனநிலை போன்று, கிறிஸ்தவர்கள் இதுவரைக்கும் இல்லாதுள்ளமை, மற்றும் நல்லடக்க உரிமைக்கான முஸ்லிம்களின் குரலோடு இணைந்து "இப்ராஹிமிய" மதத்தவரின் நம்பிக்கைக்கு குரல் எழுப்பாதமை என்பன கவலையை ஏற்படுத்தியிருக்கும். ஒருவேளை,அரசியல் தலைமைகள் முன்னிற்பதால் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதோ தெரியாது. 

ஈஸ்டர் தாக்குதல்களின் எதிரொலிகள் ஏற்படுத்திய இந்த சமூக இடைவெளிகள், கொரோனா இடைவெளிகளைப் போலவே, விஸ்வரூபமாகி இன்னும் நிற்கிறதா?நிலைக்கிறதா?இவற்றைக் களைவதற்கு சமூகங்களின் மதத் தலைமைகள் முயற்சிக்கவில்லையா?

உலகில் அதிகூடிய சனத் தொகையினரான , அமெரிக்க, ஐரோப்பியநாடுகளில் செல்வாக்குமிக்க மதத்தவரான,இந்நாடுகளின் ஆட்சியிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற கிறிஸ்தவர்கள் ,"இப்ராஹிமிய"(ஆப்ரஹாம்) வேதத்தவரின் நல்லடக்க விடயத்தை வென்றெடுக்க இலங்கை முஸ்லிம்களுடன் இணைய வேண்டும். அப்போதுதான், இம்முயற்சிகளுக்கு வீணான சாயங்கள் பூசப்படுவதைத் தடுக்கக் கூடியதாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, ஏனைய நாடுகளிலுள்ள இப்ராஹிமிய வேதத்தினர் (கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம்) எமது நல்லடக்கத்திற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்கு உரியதே. மனிதாபிமானத்தைப் பொறுத்த வரை, இந்தக் கொடிய கொரோனா உலகிலிருந்து இல்லாதொழிந்து, எல்லா மதத்தவரும் தத்தமது ஆத்ம மீட்சிக்கான சமயக் கிரியைகளைச் செய்வதற்கு இறைவன் வழிவிட வேண்டுமென்பதே எல்லோரினதும் பிரார்த்தனை.

நல்லடக்கத்திற்கான, கருத்தாடல்கள் கவனம் தப்பாதிருப்பதும், திசை தெரியாமலிருப்பதுமே, இம்முயற்சிகளை உறுதியான பாதையில் வழிநடத்தும். தொடர்ந்தேர்ச்சியாக நடக்கும், இனிமேல் நடக்கப் போகும் ஆர்ப்பாட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் இசைந்து கொடுக்குமோ இல்லையோ!, அரசியல் கலக்காத, ஆத்மீக நோக்கிலான, கடும்போக்காளர்களின் கண்களைக் குத்தாத அணுகுமுறைகளே வழிகளை திறக்கும் .

எரித்தலை எதிர்த்தும், நல்லடக்கத்திற்கு அனுமதி கோரியும் நடத்தப்பட்ட மார்ச் மாத பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட மூன்றாம் சமூகத்தின் அரசியல் தனித்துவ தலைமைகளுடன், நாட்டின் இரண்டாம் தலைமையும் அவருடனிருந்த ஆதிக்கப் போக்குகளும் நடந்து கொண்ட முறைகளே, இதை நினைவூட்டி, அறிவூட்டுகிறது. ஆனால்,அன்றைய மனநிலைகளில், இன்றும் எமது நாட்டுத் தலைவர்கள் இருக்கமாட்டார்கள் என நம்புவோம்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK