(செ.தேன்மொழி)

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் என்ன திட்டங்கள் இருக்கின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாத காலப்பகுதியில் கொரோனா தொற்று பரவலை தன்னால் இலகுவில் வெற்றி கொள்ள முடியும் என கூறியிருந்தார். ஆனால் தற்போது வைரஸ் பரவல் யுத்தம் இல்லை என்றும் , யுத்தம் என்றால் தான் இலகுவில் வெற்றி கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார். அவர் வைரஸ் பரவல் தொடர்பில் மக்கள் மீதும் ஊடகங்கள் மீதும் பழிசுமத்துகின்றார்.

இவ்வருடத்திலேயே அதிகளவிலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்தது. அந்த பொதிகளில் 3500  ரூபாய் பெறுமதியான பொருட்களே இருக்கின்றது.

ஆரம்பத்தில் மக்கள் வர்த்தக நிலையங்களிலும் சதோச நிலையங்களிலும் வரிசையாக நின்றதை அவதானிக்க கூடியதாகவிருந்தது. ஆனால் தற்போது தங்க நகையை அடகு வைப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். தேங்காயை , விற்பனை செய்வதற்கு சுற்று நிரூபங்களை வெளியிட்ட அரசாங்கம் வரிவருமானத்தையும் குறைத்துள்ளது.