விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

மண்ணறை வாழ்வுதான் முதல் பரீட்சை; ஆத்மீக அங்கலாய்ப்புக்கள் நிறைவேறுமா?

 


சுஐப் எம். காசிம்-

அடக்குவதா? எரிப்பதா? இந்தச் சொற்களைத்தான் கொரோனாக் காலங்கள் அதிகம் ஞாபகமூட்டுகின்றன. சமூகத்தின் மீதுள்ள பற்றுதல்கள் இவ்விடயத்தில் பலரைப் பதறவும் வைக்கிறது. பதறிய காரியம் சிதறும்; என்கிறார்களே! என்னைப் பொறுத்த வரை இதற்குப் பொருத்தமான சூழலும் இதுதான். மார்ச் மாதம் நிலவிய கொரோனாச் சூழலில் சூடாகி, பின்னர் பழங்கஞ்ஞான இது, இப்போது மீண்டும் உலையில் வைத்துக் கொதிக்க வைக்கப்படுகிறது. உலக நாடுகள் அனைத்திலும் நல்லடக்கம், இலங்கையில் மட்டும் தகனம் செய்யப்படுகிறதே! பலரும், பல கோணங்களில் பார்ப்பதும் விமர்சிப்பதும் இதைத்தான். 

அரசியல் ரீதியாக ஒரு பார்வை, மத ரீதியாக இன்னொரு பார்வை, விஞ்ஞான ரீதியில் வேறொரு விளக்கமென்று கொரோனா காலத்தில் இவ்விடயம் விஸ்வரூபம் எடுக்கிறது. ஆனால், மத ரீதியான நம்பிக்கைகளுக்காகத்தான் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு முஸ்லிம்கள் மன்றாடுகின்றனர். சகல சமூகத்தவரும் ஏதோவொரு வகையில், கொரோனாச் சடலங்கள் விடயத்தில் மத நம்பிக்கைகளில் ஒன்றை இழக்கத்தானே செய்கின்றனர். ஏன், முஸ்லிம்கள் இதை விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை. நாட்டின் காலநிலை, புவியியல் அமைப்பைப் பொறுத்து விஞ்ஞான ரீதியில் எடுக்கப்பட்ட முடிவுக்கு முஸ்லிம்களும் கட்டுப்பட்டேயாக வேண்டும். இதுதான் மருத்துவ மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் சிலரின் பிடிவாதம். 

ஆனால் விஞ்ஞானத்தின் உச்சத்தில் உள்ள, கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில், வெற்றியின் இலக்கைத் தொடவுள்ள அமெரிக்கா, ஜேர்மன் ஆகிய நாடுகளிலும் அடக்கம் செய்யப்படுகிறதே! இங்கு மட்டும் என்ன புதுமையான விஞ்ஞானம்? இதுதான் முஸ்லிம்களின் அங்கலாய்ப்பு. இவற்றை விதண்டாவாதம் என்று விடவும் முடியாது. முஸ்லிம்கள் நம்பும் ஆத்மீக உலகின் ஆரம்ப வாழ்வே, (மண்ணறை) அழிக்கப்படுவதால் ஏற்படும் அச்சம்தான் இந்த அங்கலாய்ப்புக்களை அதிகரிக்கிறது. மண்ணறை வாழ்வுதான் மறு உலக வெற்றிக்கான முதல் பரீட்சை. இதில் சித்தியடைந்தால் ஏனைய அனைத்தும் இலகுதான். இவ்வாறுதான் நல்லடக்கம் செய்யப்படும் மண்ணறையை முஸ்லிம்கள் நம்பியுள்ளனர். இடையில் ஏற்பட்ட ஆத்மீகப் பதற்றம், "எரித்தாலும் சாம்பலையாவது அடக்கத் தாருங்கள்" என்று கேட்டதும் இதற்காகத்தான். இந்தக் கோரிக்கைதான் இன்று சந்தர்ப்பவாதத்தில் மாட்டிக் கொண்ட யதார்த்தமாகி நிற்கிறது. 

மதப் பெரியார்களின் தலைமையகம் ஏற்கனவே கோரித்தானே உள்ளது, சாம்பலை அடக்கம் செய்யுங்களேன் என்பதைத்தான் விஞ்ஞானத்தின் சாயலில் இனவாதம் தூக்கிப் பிடிக்கிறது. ஏன், கொரோனாத் தொற்றுக்கு இலக்காகிச் சிகிச்சை பெற்று வருவோரின் இரத்தம், சிறுநீர் மற்றும் மலம், கழிவுகள் அனைத்தும் வைத்தியசாலைகளின் கழிவறைகளூடாக நிலத்துக்கடியில் செல்கிறதுதானே. இதனால் தொற்றுக்கள் ஏற்படுவதில்லையா? இலங்கையின் விஞ்ஞானிகள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர். இக் கேள்விகள் எல்லாம் தயவு செய்து நல்லடக்கத்திற்கு அனுமதியுங்கள் என்பதுதான். ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள ஆத்மீக நம்பிக்கையைத் தக்க வைக்கும் அரிய வாய்பு தமக்குக் கிடைக்காதா? இந்த எதிர்பார்ப்புக்கள் ஈடேறவே எம்மவர்கள் பிரார்த்திக்கின்றனர்.

மேலும், சிலரின் பருவப்படாத எழுத்துகள், எடுத்தவற்றை எல்லாம் எழுமாந்தமாக விமர்சிக்கும் உணர்ச்சி மேலிடுகை, சந்தர்ப்பவாதத்தில் சிக்கியுள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாத இயலாமைகள் மற்றும் அளவுமீறிய நம்பிக்கைள் தோற்றுப் போவாதால், சிலரை ஆட்கொள்ளும் கற்பனை வியாக்கியானங்களே நிலைமைகளை இனவாதப் பிடிக்குள் இறுக்கிவிட்டுள்ளன. 

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடத்தைப் பார்வையிடச் சென்றவர்கள், ஏதாவது சாதகமான அனுமதியுடன்தான் சென்றிருப்பர். நீதியமைச்சரின் ஆலோசனையின் பேரில், மன்னார் மாவட்டத்திற்குச் சென்ற விடயம் மீதான உணர்ச்சி எழுத்தாளர்களின் உந்துதல்கள், இனவாதிகளால் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. எவர் எதைச் சொன்னாலும் அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும். வேறு தரத்தாரின் தலையில் சுமத்திவிட்டு நாட்களைக் கடத்துகிறதா அரசாங்கம்? என்கின்றனர், இருபதை ஆதரித்த முஸ்லிம் அரசியல்வாதிகள். இதில்தான் நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாப்பதன் அசலைக் கண்டு கொள்ளலாம் என்பதும் இவர்களின் நிலைப்பாடு. 

இந்நிலையில், அமெரிக்காவின் "பைஸர்" நிறுவனமும் ஜேர்மனியின் "பயோன்டொக்" நிறுவனமும் கண்டுபிடித்துள்ள பிப்சர் பயோன்டெக்ஸ் கொரோனாத் தடுப்பூசி பிரேஸில், ஆர்ஜண்டீனா, துருக்கி மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 46000 பேரில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இதில் ஆபத்தான அறிகுறிகள் தென்படாதமை ஆறுதலளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமையும் மகிழ்ச்சிக்குரியதுதான். "விஞ்ஞானத்துக்கும் மனித நேயத்துக்குமான மாபெரும் நாள்" இதுவென இத்தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட தினத்துக்குப் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. மனித கலங்களுக்குள் நுழைந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான புரதங்களை இந்த மருந்து உற்பத்தி செய்யும். இந்த வருடத்துக்குள் 50 மில்லியன் தடுப்பூசிகளும், 2021 இல் 1.3 பில்லியன் ஊசிகளும் தயாரிக்கப்பட உள்ளன. வைரஸை, ஒருவர் பரப்புவதையா? அல்லது நோய்கள் வெளிப்படுவதைத் தடுப்பதையா? இந்தத் தடுப்பூசி நிறுத்துகிறது. இவ்விடயத்தில் இதுவரை ஒரே கருத்து ஏற்படவில்லை. 

இருந்த போதும் இதற்கான கிராக்கி அதிகரித்துள்ளதால் மனிதாபிமானத்துக்கு இதன் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. மருத்துவ உத்தியோகத்தர்கள், தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்திலிருப்போர் மற்றும் வயதானோரே இத்தடுப்பூசியைப் பெற முதல் தகுதியுடையவராகின்றனர். இன்னும் "பிப்சர் பயோன்டெக்ஸ் மற்றும் ஆகப் பிந்திய கண்டுபிடிப்பான மொடேனா" என்ற அமெரிக்காவின் மருந்துகளும், ரஷ்யாவின் "ஸ்புட்னிக் 06" மருந்தும் 90 மற்றும் 92 வீதங்கள் குணப்படுத்துமென நம்பப்படுகிறது. 

இம்மருந்துகளால் இழப்புக்கள், பாதிப்புக்கள் ஏற்படின், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவே, மருந்துகளின் செயற்திறன் வீதம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எல்லையின்றி விரிந்துள்ள இந்த லௌகீக உலகில் ஆன்மீக அறநெறிகள் உணர்வுகளை எப்படி எதிர்பார்ப்பது. இதற்காகத்தானோ இந்தத் தடுப்பூசிகள், மருந்துகளை விநியோகிக்கவும் சில வரையறைகளோ தெரியாது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK