சாதாரண விலைக்கு அரிசியினை வழங்க முடியாதுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என  மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிபிடுகையில்,

“நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக தம்மை அடையாளப்படுத்தி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தினரால் இன்று வரை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.

எம்.சி.சி உடன்படிக்கை மற்றும் எக்சா உடன்படிக்கை போன்றவை கைச்சாத்திடப்படமாட்டாது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு இதுவரை எந்தவொரு உறுதிமொழியினையும் அரசாங்கம் வழங்கவில்லை.

அரிசி  கட்டுப்பாட்டு விலை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தினால் இதுவரை 5 வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே சாதாரண விலைக்கு அரிசியினை வழங்கமுடியாதுள்ள தற்போதைய அரசாங்கத்தினால்  எவ்வாறு பொருளாதாரத்தை கட்டியெழுப்பமுடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

(Capital News)