முஸ்லிம் உலகின் பெருமூச்சு; ஐரோப்பா புரிந்துகொள்வது எப்போது?

(சுஐப் எம்.காசிம்)

இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளாத ஐரோப்பாவில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும்
இன்னல்கள், இதனால் உண்டாகும் எதிரொலிகள் எல்லாம் கலாசார மோதல்களைக் கூர்மைப்படுத்தி சமய நம்பிக்கைகளைக் காயப்படுத்துகின்றன. இந்நாடுகளில் உள்ள எல்லையில்லாக் கருத்துச் சுதந்திரங்களை மட்டுப்படுத்தாத வரை, இக்காயங்கள் அடிக்கடி ஏற்படவே செய்யும்.கருத்துச் சுதந்திரம் ஏன், ஒருவரைக் காயப்படுத்த வேண்டும். எவற்றையும் பொருட்படுத்தாது இருந்தால் சரிதானே. இப்படியும் சிலர் சொல்கின்றனர். பிறர், தம்பிள்ளைகளை திட்டினால் அல்லது வசைபாடினால் பெற்றோரின் பொருட்படுத்தாத தன்மை எதுவரை இருக்கும். ஒரு தடவை, இரு தடவை அல்லது ஒரு எல்லை வரைதான் இதில் பொறுமை இருக்கும். இவ்வாறுதான், சில முஸ்லிம்கள் பொறுமை இழக்கின்றனர். 

கருத்துச் சுதந்திரம் என்பதற்காக அடிக்கடி எவராவது எம்பிள்ளைகளைத் திட்டுவதை, சீண்டுவதை எந்தப் பெற்றோர்தான் பொறுத்துக்கொள்வர், பொருட்படுத்தாதிருப்பர். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இறைதூதர்கள் இப்புவியில் தோன்றினர் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை. இதில் இறுதித் தூதர் முஹம்மது என்பதும் இறுதிக்கு முந்தியவர் ஈஸா என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஈஸா (இயேசு) வைப் பின்பற்றும் மதநெறிகளே உள்ளன. இவ்விருவரையும் முஸ்லிம்கள் ஏற்றுள்ள போதும் முஹம்மது நபியை கிறிஸ்தவம் ஏற்கவில்லை. எனினும் முஸ்லிம்கள் ஒருபோதும் இறைதூதர் ஈஸாவை (இயேசு) இம்சித்தோ, நிந்தித்தோ அல்லது தூற்றியதாகவோ சரித்திரம் இல்லை. இவ்வாறு செய்வது இறைதூதரை நிராகரித்த நிலைக்கு கொண்டு சென்று, இஸ்லாத்தை நிராகரித்த பாவத்திற்கு உள்ளாக்கும். 

ஆனால், இறைதூதர் முஹம்மதை கிறிஸ்தவம் ஏற்காதுள்ளமை ஒரு சிலரை இந்த இழிசெயலுக்குத் தூண்டுவதாகவே தோன்றுகிறது. எனினும்,பெரும்பாலான கிறிஸ்தவ சகோதரர்கள் மத விடயங்களில் மிக நாகரீகமாக நடந்து கொள்வது, ஜரோப்பாவின் புகழை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் இறைதூதர் முஹம்மதை, அவலட்சணமாக சித்தரிக்கும் இந்தச் செயல்களை ஐரோப்பா கண்டு கொள்ளாதமைதான் முஸ்லிம் உலகுக்குள்ள கவலை. இங்குள்ள எல்லைமிஞ்சிய கருத்துச் சுதந்திரம் எதைச் சாதிக்கிறது, என்ன புதிய செய்திகளைச் சொல்கிறது? ஒரு தடவை இரண்டு தடவைகளா? பல தடவைகள் சொல்லப்பட்ட, வரையப்பட்ட கருத்துக்கள், கார்டூன்களைத்தானே சொல்கின்றனர், வரைகின்றனர்.1500 வருடங்களைத் தொட்டு நிற்கும் இஸ்லாத்தை இன்று ஏன், விமர்சிக்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் பெருமூச்சு. வேகமாக வளரும் இஸ்லாம், உலகத்தை ஆளலாம் என நினைக்கின்றனரா? அவ்வாறானால், வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்ற கருத்தாடலை ஐரோப்பா மனதளவில் ஏற்கவில்லையா? ஏற்கவில்லை என்ற முடிவுகளைத்தான் இங்கு இடம்பெறும் சில விடயங்கள் சாத்தியப்படுத்துகின்றன. 

யுத்தமே இல்லாமல் வளரும், இஸ்லாத்தின் எழுச்சியை இழி செயல்களால் தடுப்பதற்கா? இந்தக் கருத்துச் சுதந்திரங்கள். இஸ்லாமிய உலகின் இன்றைய எண்ணமெல்லாம் இவைதான். எத்தனையோ முஸ்லிம் நாடுகளின் அகதிகளை வரவேற்று அடைக்கலம் அளிக்கும் பரந்து, விரிந்த ஜரோப்பாவுக்கு இத்தனை கொடிய, கெடுதல் எண்ணமிருக்குமா? 

இறைதூதர் முஹம்மது நபியைக் கேலிசெய்த சல்மான் ருஸ்தி, தஸ்லீமா நஸ்றீன் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்ததும் ஐரோப்பாதான், முஸ்லிம் அகதிகளை அதிகளவு அரவணைப்பதும் இதே ஐரோப்பாதான். இதைப் புரிவதில் முஸ்லிம்கள் குழம்பவே செய்கின்றனர். பிரான்ஸில், டென்மார்க்கில் இதுபோன்ற இன்னும் சில நாடுகள் இன்னும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை. தனிப்பட்ட கருத்துச் சுதந்திரம், கோடிக் கணக்கான மக்கள் பின்பற்றும் மத நம்பிக்கைகளைக் காயப்படுத்த அனுமதிப்பது, மதச் சுதந்திரத்தை மறுதலிப்பதாகத்தானே பொருள்படும். இதுபற்றித்தான் வேத நிந்தனையாளர்களும், இதில் மகிழ்வோரும் சிந்திக்க வேண்டியுள்ளது. நியுஸிலாந்து அரசாங்கம் இவ்வாறானவர்களுக்கு வழங்கிய தண்டனைதான் மீண்டும் அக்கட்சியைத் தேர்தலில் வெல்ல வைத்து, ஜெஸிந்தாவை மறுபடியும் பிரதமராக்கியுள்ளது. எனவே மனச்சாட்சிகளைத் திறந்து படித்தால், பார்த்தால் இஸ்லாம் மீதான ஐரோப்பாவின் பிழையான புரிதல்கள் தெளிதல்களாகும் என்றுதான் முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும், மத விசுவாசத்துக்காக, மனம்போன போக்கில் செயற்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தேவாலயங்களைத் தாக்குவது, வர்த்தக நிலையங்களைத் தீயிலிடுவதெல்லாம் இஸ்லாத்துக்கான நெருக்கமாகவோ, அல்லது இறைதூதர் மீதான அன்புக்கு அடையாளமாகவோ கருதவும் முடியாது. ஈஸ்டர் தேவாலயத் தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லிம் பயங்கரவாதிகளின் சடலங்களை முஸ்லிம் மையவாடிகளில் அடக்க மறுத்தமைதான் இதற்கான சரியான சான்றுகளாகும். 

ஒரு வகையில், கலாசார மோதல்களுக்கு துளியளவும் இடங்கொடுக்காத முஸ்லிம்களின் முன்மாதிரிகள்தான் இவை. பிரான்ஸில் நடந்த சம்பவங்களுக்குப் பின்னர், அவசரமாகக் கூடிய அரபுலீக் கூட்டம் மற்றும் துருக்கி ஜனாதிபதியின் அறிக்கைகள் அனைத்தும் ஒருவகையான பதற்றத்தைப் பறைசாற்றியிருந்தாலும் ஜரோப்பா, இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டது. இவ்வளவு தெளிவுடனுள்ள இந்த ஐரோப்பா கலாசார மோதல்களை (இஸ்லாம், கிறிஸ்தவ) நிரந்தரமாக இல்லாமல் செய்யுமளவுக்காவது தனிநபர் கருத்துச் சுதந்திரங்கள் எல்லை மீறாமலிருக்க வழி செய்யாதா? அது மட்டுமல்ல, சல்மான் ருஸ்திக்கு 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஈரான் விதித்த ஏலம்,சில இஸ்லாமிய நாடுகளால் பூரண மனதளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் இங்கு கருத்திற்கொள்ளப்பட வேண்டியதுதான். 

ஆயதுல்லா கொமெய்னியின் இந்த அறிவித்தலுக்குப் பின்னர், கூடிய இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டில், அதிகளவான நாடுகள் பங்கேற்காது பகிஷ்கரித்திருந்தன. சல்மான் ருஸ்திக்கு எதிரான ஈரானின் ஏலம் வாபஸ் பெறப்பட வேண்டுமென்பதுதான் மாநாட்டைப் பகிஷ்கரித்த இஸ்லாமிய நாடுகளின் வேண்டுதலாக இருந்தது. இன்னும் இதற்குப் பின்னாலிருந்த பல காரணங்களில் சில, இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரானின் மத நம்பிக்கைகளில் இருந்த அபிப்பிராய பேதங்கள் பங்களித்ததும் இவ்விடத்தில் சொல்லப்படத்தக்கதுதான். 

எனவே, சில முஸ்லிம் இளைஞர்கள் காட்டும் வெறித்தனங்களை மதவாதமாகக் காட்ட முனையும் ஊடகங்கள் குறிப்பாக ஐரோப்பிய ஊடகங்கள், ஏதோவொரு நோக்கத்தை மாத்திரம் பகிரங்கப்படுத்த முனைவதை நிறுத்துவதும் மத நல்லிணக்க வழிகளைத் திறந்துவிடும் என்ற எதிர்பார்ப்புக்கள்தான் அதிகரித்து வருகின்றன.

இறைதூதர் முஹம்மதை அவலட்சணம் செய்வதற்கு எதிராக அரபுலகம் மாத்திரமல்ல முழு முஸ்லிம் நாடுகளும் அதிருப்தியடைவதைத் தவறாக நோக்கவும் முடியாதுதான். ஒரு ஐரோப்பியரின் கருத்துச் சுதந்திரம் முழு முஸ்லிம் உலகையே உலுக்கி எடுக்க, குழப்பத்திலாழ்த்த இடமளிப்பதா?இதனால், மனதளவில் வெறுப்பதாக ஒன்றுகூடிக் கண்டிக்கின்றனர். எனினும், எதிலும் எல்லை மீறாதிருப்பதுதான் எல்லோருக்கும் நல்லது. 

பிரான்ஸில் இஸ்லாமியர் சிலரின் நடத்தைகளால், ஆத்திரமுற்ற அந்நாட்டு அரசாங்கம் நூற்றுக்கும் அதிகமான பள்ளிவாசல்களை மூடியும், சிறந்த உலமாக்களை வெளியேற்றியுமுள்ளது. இன்னும் பிரான்ஸிலுள்ள மத்ரஸாக்களைக் கண்காணிக்கவும் பாடத்திட்டங்களைப் பரீட்சிக்கவும் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஒருதகவல். எனவே, மனிதனை நல்வழிப்படுத்த வந்த மதங்களின் பேரால், மானிடன் மாண்டழிவதை நிறுத்துவதற்கு வழிகளைக் காணவேண்டும். முதல் வழியாக எல்லை மீறிய கருத்துச் சுதந்திரம் அதிலும் விஷேடமாக மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தும், கேலி செய்யும், பழிவாங்கும் நோக்குடன் வெளிப்படுத்தப்படும் கருத்துச் சுதந்திரத்தை விஷேடமாக ஐரோப்பா பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து அரபு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணும் ஐரோப்பா, அங்கு மதத்தின் பேரிலான வன்முறைகள் வேரிடுவதை, வளர்வதை அல்லது ஒரு சில ஐரோப்பியரின் கருத்துச் சுதந்திரம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உயிரூட்டாமல் இருப்பதைத் தடுக்க ஐரோப்பா சிந்திப்பதுதான் இன்றுள்ள வழி. அரபு நாடுகளை அடிப்படைவாதிகள் கைப்பற்றுவதில் அரைவாசிப் பாதிப்பு ஐரோப்பாவுக்கும்தான். எல்லையில்லா கருத்துச் சுதந்திரம் எதைச் சாதிக்கிறது என்ற கேள்விக்கு விடை காணப் புறப்படுவோம்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK