சிறுபான்மை தேசியங்களின் தலைவிதிக்கு வந்த தலைவலி!


சுஐப் எம். காசிம்-

இணக்க அரசியல், இணைந்த வடகிழக்கு, ஒருமொழிச் சமூகங்கள், தமிழ் பேசும் மக்கள் என்கின்ற பொதுவான அரசியல் அடையாளத்திற்குள் தமிழர்களையும், முஸ்லிம்களையும் உள்வாங்குவது இயலாமையாகியே வருகிறது. ஒருகாலத்தில் இந்த அரசியல் அடைமொழிகளால்தான் சிறுபான்மைச் சமூகங்கள் ஒற்றுமைப்பட்டிருந்தன. மொழி, வாழிடம், கலாசாரக் கூறுகளே இச்சமூகங்களை பொதுவான அரசியல் கோட்பாடுகளில் ஒற்றுமைப்படுத்தியது. பின்னர் உண்டான சில கசப்பான மனக் கிலேசங்கள், இச்சமூகங்களை மீண்டும் இந்த அடைமொழிகளால் அரசியலில் இணைப்பதைச் சாத்தியமற்றதாக்கியே வருகிறது. இதுதான், இன்று சிறுபான்மை தேசத்தின் வெற்றியை விரும்புவோரைக் கவலைப்படுத்தியுள்ளது.இந்தக் கவலைகளுடன்தான், இச்சமூகங்களின் அரசியலும் இனி நகரப்போகின்றன. 

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சியுடன் இணைந்து, தமிழர் தரப்பு அரசியல் களம் கங்கணம் கட்டிச் செயற்பட்ட வேளையில், நம்பிக்கைகளை தகர்ப்பதைப் போல, முஸ்லிம் எம்.பி க்கள் ஆறு பேர் நடந்துகொண்டனர். இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், இருபதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருந்த எதிர்ப்பையும் ஆதரவாக்கிற்று. இதனால் ஆறு பேருக்கான விமர்சனங்கள் எல்லை விரிந்து செல்கின்றன. "இருபதை" ஆதரித்து இரட்டிப்புத் தவறுக்குத் துணைபோனவர்கள் என்றே இவர்கள் பார்க்கப்படுகின்றனர். 

சமயம் சார்ந்த நம்பிக்கைகளில் விஷேட தனிச் சிறப்புள்ள முஸ்லிம்களா? இவ்வாறு நடந்துகொள்வது. "ஒரே நாடு, ஒரே சட்டம்" என்ற கொள்கையில் ஊறித் திளைத்துள்ள ஒருவரிடம், எல்லை மிஞ்சிய அதிகாரங்கள் செல்வதற்கு துணைபோகி விட்டார்களே. திருமணச் சட்டம், ஷரீஆச் சட்டம் மற்றும் கொரோனாவில் உயிரிழந்தோரை எரிக்கும் சூழலைப் பற்றியும் இந்த எம்.பி க்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நிலைமாறும் அரசியல்வாதிகள் என்றுதான், தமிழ் தேசியம் இவர்களைச் சீறிச் செருமுகிறது. அதிகாரப் பகிர்வு பற்றிச் சிந்திக்காவிடினும் இவர்களின் ஆத்மீக உணர்வுகள் எங்கே ஒழிந்தன? அடிக்கடி தடம்மாறும் முஸ்லிம்கள், சிறுபான்மையினரின் அதிகாரப் பகிர்வுகளுக்கு ஒத்துழைத்ததே இல்லை. "இனப் பிரச்சினையே இந்நாட்டில் இல்லை, பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் சமூக ஐக்கியம் ஏற்படும்" எனக் கூறும் ஜனாதிபதியிடம் அதிகாரத்தைக் குவித்துவிட்டனர். பொதுவான அரசியல் அடைமொழி அடையாளத்துக்குள் இனியும் இவர்களை உள்வாங்க தமிழ் தேசியம் தயங்குவதும் அவர்களின் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. 

கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்க ஒத்துழைத்தது ஏன்? தமிழ் பேசும் மண்ணில் அந்நிய மொழிப் பின்புலம் ஆளக் கூடாதென்ற ஒருமொழிச் சமூகங்களின் ஒற்றுமையைப் பறைசாற்றத்தான். தேசியப் பட்டியலில் முஸ்லிம் ஒருவரைப் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்தமை, பிராந்திய அரசியலில் முஸ்லிம் பிரதிநிதியை வட மாகாண சபைக்குள் உள்வாங்கியமை அனைத்தும் தமிழர் தரப்பின் இணக்க அரசியலின் அடையாளங்கள்தானே. வடபுலத்து முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு என்று சொன்னதும், இவற்றையெல்லாம் விடவும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நிலவிய முஸ்லிம்கள் மீதான பாதுகாப்பு கெடுபிடிகள்,நெருக்குவாரங்களை மற்றொரு சிறுபான்மையினருக்கு எதிரான இராணுவ அடக்கு முறைகள் என்று கண்டித்தமை, அப்பாவிகளின் கைதுகளுக்கு எதிராக தமிழர் தரப்பு குரல் கொடுத்தமை அத்தனையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கான பொதுவான அடையாள அரசியல் பின்புலங்கள்தான். 

இந்தத் தறுவாயில் இந்த ஆறு பேரும் ஏன் இருபதை ஆதரித்தனர்? என்பதை அலசுகின்ற போது, அவர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களிலும் சில தெளிவுகள் தென்படவே செய்கின்றன. அதிகாரப் பகிர்வால் பெற்றுக்கொள்ளப்பட்ட மாகாண சபைகளில் எதிர்கொண்டவை போதும் என்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்தமை, இருபதில் எவ்வாறு நடந்துகொள்வது என்ற தீர்மானங்களை முஸ்லிம் தரப்புக்களுடன் மனம் திறந்து கலந்துரையாடாமை என்பவற்றை ஓரங்கட்டலாகவே முஸ்லிம் தரப்பு பார்க்கின்றது. 

ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் இணக்கத்தை இல்லாமலாக்கியது இந்த 19. இதனால் ஈஸ்டர் தாக்குதலுக்கான பாதைகளில் பாதுகாப்பும் பலவீனமானது. மட்டுமா, 

தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்பட்டதும் இந்த 19 ஆல்தான். இத்தாக்குதல் விடயம் தெரிந்தும், பொறுப்பற்ற விதத்தில் நடந்த பாதுகாப்பு உயரதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்வற்கும், தண்டிப்பதற்கும் இதுவரை தடை விதித்ததும் இந்தப் 19 தான். இதனால் இருபதைக் கொண்டு வர விரும்பினோம் என்கின்றது முஸ்லிம் தரப்பு. மேலும், இந்த ஆறு எம்பிக்களதும் சொந்த மாவட்ட நெருக்கடிகள், கட்சி அரசியலுக்கு அப்பால் இத் தீர்மானத்துக்கு தூண்டியுமிருக்கும். பலவீனப்படும் போது கை கோர்ப்பது, பலமடைகையில் கை விடுவது என்ற இரட்டை நிலைப்பாடுகளையும் தமிழர் அரசியல் களம் கைவிட வேண்டுமெனவும் முஸ்லிம் தேசியத்துக்குள் இப்போது முணுமுணுக்கப்படுகிறது. 

2002 முதல் 2004 வரையான ரணில் அரசின் பொங்கு தமிழ் காலம் மற்றும் நல்லாட்சி அரசில் இடம்பெற்ற சிலவையும் இதற்கான எடுகோள்களாக உள்ளன. வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான வடபுல முஸ்லிம் தலைமையின் சகல முயற்சிகளுக்கும் ஒத்துழையாது, ஓமந்தையில் நிறுவ முயற்சித்தமை, புலம்பெயர நேர்ந்த தமிழ், முஸ்லிம் கிராமங்களின் காணிகளை அடையாளம் காண அமைக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் எம்.பி க்கள் அடங்கிய குழுக் கூட்டத்தை இழுத்தடித்தமை எல்லாம் பலமடைந்த நிலையில் கைவிடும் மன நிலைகளாக நோக்கப்படுகின்றன. இதில், தமிழ் தேசியத்துக்காக மட்டும் பாடும் ஒருநிலைவாதிகளும் உள்ளனர். சொந்த சமூகத்தின், தேசியத்தின் மற்றும் மக்களின் வாழ்விட வலிகள், வேதனைகளோடு கலக்க விரும்பாத இவர்கள், எந்த விடயங்களிலும் சமரசமாகச் சென்ற சரித்திரங்கள் இல்லை. அவ்வாறு சென்றிருந்தால், சந்தர்ப்பவாதம் மற்றும் சுயநலங்கள் அவர்களை ஆட்கொண்டதாக அர்த்தம். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பானதென, அறிமுகமான ஆரம்பகாலத்தில் பார்க்கப்பட்டதுதான். பின்னர், இதன் விளைவுகள் பல வழிகளிலும் விஸ்வரூபமாகி, ஜனநாயகத்தையும் மிரட்டத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்த ஆணைக் குழுக்கள், அரசியலமைப்பு சபை, வழி நடத்தல் குழு மற்றும் அரசியலமைப்பில் திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. மக்களிடம் ஆணை கோரப்பட்ட 1994 முதல் இன்று வரைக்கும், இதனை ஒழிப்பதாகக் கூறித்தான் சகலரும் போட்டியிட்டனர். ஆனால், 2019 ஆம் ஆண்டு மாத்திரம்தான் இதனைப் பலப்படுத்தும் பாணியில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. 19 ஆவது திருத்தத்தால் நலிவடைந்து, சிதைந்திருந்த நாட்டின் நிலைமைகளைத் தூக்கிப்பிடித்து முன்னெடுத்த பிரச்சாரங்கள் வெற்றிக்கே வழிவகுத்தன. நாட்டின் பாதுகாப்பு, இறைமை மற்றும் ஆள்புல எல்லைகளின் ஸ்திரத்திற்கு நிறைவேற்று அதிகாரம் அவசியம்தான் என்பதை தென்னிலங்கைவாதிகள் புரிந்துகொள்ள இந்தப் பிரச்சாரங்கள் பயன்பட்டதால்தான், 145 ஆசனங்களை வெல்ல முடிந்தது. இதனால், சிங்களப் பெருந் தேசியத்தின் மனநிலைகளை மறுதலிப்பது அல்லது மலினப்படுத்துவது, நாட்டில் மூன்றிலிரண்டு பகுதியினர் வாழும் தென்னிலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த ஆறுபேரும் சிந்தித்திருக்கலாம். மேலும், இருபதுக்கு ஆதரவளித்த மலையகத் தமிழ் எம்.பி இவற்றில் எதையும் சிந்தித்திருக்கலாம். நீதித் துறைக்கோ, நிர்வாகத் துறைக்கோ அல்லது தேர்தல், பொலிஸ் ஆணைக் குழுக்களுக்கோ தலைவர்களை தனி நபரான ஜனாதிபதி நியமிப்பதையும், பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறாமல் ஜனாதிபதி நடப்பதும்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறையில் உள்ள ஆபத்துக்களாக சிலர் நோக்குகின்றனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK